இந்து மக்கள் கட்சி, அர்ஜுன் சம்பத் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதியன்று எந்தவித அசம்பாவிதமும் நிகழ்ந்து விட கூடாது என இந்தியா முழுவதும் காவல் துறையினர் கூடுதல் கண்காணிப்பில் இருப்பது வழக்கம்.

Archive twitter link

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவராக அர்ஜுன் சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் “ அடிமைச்சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித் திருநாள்!” என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தடா ரஹிம், “அடிமைச்சின்னம் அகற்றப்பட்ட நாள் என நீங்க போஸ்டர் போடுவது சரி என்றால் ? பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் அவமானச்சின்னம் எழுப்ப சதி செய்யப்பட்ட நாள் என நான் பதிவு போடுவதில் என்ன தவறு..” என பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்துமக்கள் கட்சியும், அதன் தலைவர் அர்ஜுன் சம்பத்தும் இரு தரப்பினருக்கு இடையே வெறுப்புணர்வினை துண்டும் வகையில் பேசுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர் பல முறை அரசுக்கும், சிறுபான்மையினர் மக்களுக்கும் எதிராக வதந்திகளையும் பொய் செய்திகளையும் பரப்பியுள்ளார். 

அரசுக்கு எதிராக பரப்பிய பொய் செய்திகள் 

ஆவின் சமையல் பட்டர் பாக்கெட்டில் ஹலால் சான்றிதழ் :

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பான சமையல் பட்டர் பாக்கெட்டில் “ ஹலால் சான்றிதழ் ” என இடம்பெற்று இருப்பதாக புகைப்படம் ஒன்றினை இந்து மக்கள் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அப்புகைப்படத்தினை டிவிட்டரில் பதிவிட்ட பாஜகவை சேர்ந்த நிர்மல் குமார் “ஆவடி நாசரின் மதவெறிக்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது சரியா?” என பால்வளத்துறை அமைச்சரின் மதத்தினை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/Indumakalktchi/status/1571047364550623232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571047364550623232%7Ctwgr%5Ef2955a6e772b60ff6bdd71317f411ed79fc5bc4c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fyouturn.in%2Ffactcheck%2Fdmk-govt-aavin-products-halal-bjp.html

பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டு இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு பொருட்கள் ஹலால் முறையில் தயாரிக்கப்பட்டதை காண்பிக்க ஹலால் சான்றிதழ் லோகோ பதிவிடுவது வழக்கம். 

அந்த வகையில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலமான குஜராத்தில் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் அமுல் நிறுவனம் தரப்பில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் பெறப்பட்டு இருக்கிறது. அதேபோல, பாபா ராம்தேவ் உடைய பதஞ்சலி நிறுவனத்தில் இருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்

இந்து பண்டிகைக்கு ஆவின் வாழ்த்து தெரிவிக்கவில்லை என பொய் :

ஆவின் நிர்வாகம் கிறிஸ்தவ, இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது. “ஏன் இந்துக்கள் பண்டிகை ஆவின் நிர்வாகத்திற்கு தெரியாதா? அல்லது ஆவின் நிர்வாகத்தை இந்து மத வெறுப்பு திமுக அரசு தடுக்கிறதா? “ என அர்ஜுன் சம்பத் 2022 செப்டம்பர் 2ம் தேதி பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து 2021, டிசம்பர் மாதமே நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ஆவின் நிர்வாகம் இந்து பண்டிகைகளான தீபாவளி மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க : ஆவின் பால் பாக்கெட்களில் கிறிஸ்துமஸிற்கு மட்டும் வாழ்த்து கூறுவதாக வதந்தி !

புதுச்சேரியில் நடந்ததை தமிழ்நாடு என பொய் :

கடந்த 2022, செப்டெம்பர் மாதம் “தமிழ்நாட்டில் தன் மகளுடன் படிக்கும் சக மாணவன் அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக, மாணவியின் தாய் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்துள்ளார். அச்சிறுவன் தற்போது இறந்துவிட்டான். திராவிட சித்தாந்தம் தமிழ்நாட்டினை அழுகிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது வேதனை அளிக்கிறது” என இந்து மக்கள் கட்சி பதிவிட்டிருந்தது.

ஆனால், அச்சம்பவம் காரைக்காலில் நிகழ்ந்தது. காரைக்கால் புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியத்தை சேர்ந்த ஒரு பகுதி. அங்கு என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியில் நடந்ததை தமிழ்நாடு என தவறான தகவலை பரப்பினர்.

மேலும் படிக்க : காரைக்காலில் நடந்த கொலையை தமிழ்நாடு எனப் பொய் செய்தி பரப்பும் இந்து மக்கள் கட்சி

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டம் பற்றி பொய் செய்தி:

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததார் அர்ஜுன் சம்பத். புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகருக்கு ஒன்றும் தெரியவில்லை. சாமி சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர், சிலையின் மீது பாலினை ஊற்றி அபிஷேகம் செய்கிறார். கற்பூரம் ஏற்றும்போது மந்திரம் சொல்லவில்லை என 2021 ஆகஸ்ட் மாதம் இந்து மக்கள் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டது..

அந்த வீடியோ 2019, ஏப்ரல் 23ம் தேதி Temple Connect என்னும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் “ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கணிப்பகம் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயக சுவாமி கோயில்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடந்ததை தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பரப்பினர்.

மேலும் படிக்க : அரசு நியமித்த அர்ச்சகருக்கு ஒன்றுமே தெரியவில்லை என இந்து மக்கள் கட்சி பரப்பும் தவறான வீடியோ !

திமுக அரசு பிரிவினையை ஏற்படுத்துவதாக வதந்தி :

“அனைத்து அரசு ஆவணங்களிலும் தற்போது யூனியன் ஆப் இந்தியா என உள்ளது. திமுக அரசு தனது பிரிவினைவாத திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இது சட்டவிரோதமானது மற்றும் இதை வைத்தே அவர்களின் அரசாங்கத்தை பணிநீக்கம் செய்ய முடியும்” என இந்து மக்கள் கட்சி டிவிட்டரில் பதிவிடப்பட்டது.

ஆனால், இந்து மக்கள் கட்சி ட்விட்டரில் பகிர்ந்த ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்ட ஆண்டு 2011 மற்றும் 2016 என உள்ளது. அப்போது தமிழ்நாட்டில் அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது.

அதே போல், ” 2017ம் ஆண்டு குஜராத் மாநில அரசால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்திலும், 2015-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்திலும் ” யூனியன் ஆப் இந்தியா ” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : திமுக அரசு ஓட்டுநர் உரிமத்தில் ‘யூனியன் ஆப் இந்தியா’ என மாற்றியதாக வதந்தி பரப்பும் இந்து மக்கள் கட்சி

சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பிய வதந்திகள் :

திரைப்படத்தின் டீசரை உண்மை போல் பரப்பியது :

” கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது! என இஸ்லாமிய பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அப்பதிவில் “32,000 இளம் பெண்கள் இஸ்லாமுக்கு லவ் ஜிகாத்தால் மதம் மாறி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உடற்பசிக்கு இரையான பரிதாபம்! தயவுசெய்து பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!!” என குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், அது The Kerala Story என்ற படத்தின் டீசர். அந்த டீசர் 2022, நவம்பர் 3ம் தேதி Sunshine Pictures எனும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அப்படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் அளித்த ஒரு பேட்டியில், ” 2009ல் இருந்து கேரளாவில் மொத்தம் 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் மதமாற்றப்பட்டு உள்ளதாக பேசி இருந்தார். 

அந்த இயக்குனர் கூறியதற்கு ஆதாரப்பூர்வமான தரவுகளோ, இந்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையோ அல்லது செய்தியோ எதுவும் இல்லை.

மேலும் படிக்க : “தி கேரளா ஸ்டோரி” எனும் திரைப்படத்தின் டீசரை உண்மைப் போல் பரப்பும் வலதுசாரிகள்

பிரியாணியில் கருத்தடை மாத்திரை என வதந்தி 

இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வேண்டுமென்றே பிரியாணி கடைகளைத் திறந்து அதில் கருத்தடை மாத்திரைகளை கலந்து விற்பதாகவும், இது ஒருவிதமான ஜிகாத் என 2021, செப்டம்பர் மாதம் அர்ஜுன் சம்பத் பேசினார்.

அர்ஜுன் சம்பத் இப்படி பேசுவதற்கு முன்னதாகவே இது பற்றி பல கட்டுரைகளை யூடர்ன் வெளியிட்டிருந்தது. அவர் பேசிய தகவல் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் பரவிய முஸ்லீம்கள் மற்றும் பிரியாணிக்கு எதிரான போலிச் செய்திகள் மற்றும் இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்திய வதந்தி மட்டுமே.

மேலும் படிக்க : பிரியாணியில் கருத்தடை மாத்திரை என பழைய வன்ம வதந்தியை பேசிய அர்ஜுன் சம்பத் !

பிராமண கலெக்டரை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஊர்வலம் எனப் பொய் :

கேரளாவின் ஆலப்புழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட பிராமண கலெக்டரை (ஸ்ரீராம் வெங்கடராமன்) எதிர்த்து முஸ்லீம்கள் ஊர்வலம் நடத்தியதாக 2022, ஆகஸ்ட் மாதம் 30 வினாடி வீடியோ ஒன்றினை இந்து மக்கள் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ஸ்ரீராம் வெங்கடராமன் மதுபோதையில் ஓட்டி வந்த கார் பத்திரிகையாளர் பஷீரின் பைக்கை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பஷீர் உயிரிழந்தார். 

கேரளா மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த அவர் ஆலப்புழாவின் மாவட்ட ஆட்சியாராக இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை திரும்பப்பெற கூறி போராட்டம் மற்றும் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.

அந்த போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் போராடவில்லை. கேரளாவின் பத்திரிகையாளர் சங்கமான KUWJ மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

மேலும் படிக்க : கலெக்டர் பிராமணர் என்பதால் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியதாக வதந்தி பரப்பும் இந்து மக்கள் கட்சி !

அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி பரப்பிய பிற பொய் செய்திகள் மற்றும் வதந்திகள்

மேலும் படிக்க : இந்தியா சீனா போரில் ஆர்எஸ்எஸ் பங்கேற்ற புகைப்படம் என அர்ஜுன் சம்பத் பரப்பும் வதந்தி !

மேலும் படிக்க : சென்னை தி.நகரில் வெடி விபத்து எனப் பதிவிட்டு நீக்கிய இந்து மக்கள் கட்சி!

மேலும் படிக்க : என்னது இவர் திருவள்ளுவரா.. இந்து மக்கள் கட்சி பகிர்ந்த தவறான தகவல் !

மேலும் படிக்க : விஜய் கழுத்தில் சிலுவை எனப் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி.. அது நங்கூரம் என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் !

மேலும் படிக்க : இன்றுவரை காஷ்மீர் மக்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக பொய் தகவலைப் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி!

மேலும் படிக்க : குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது பாகிஸ்தான் முஸ்லீம்கள் எனப் போலிச் செய்தியை பதிவிட்டு நீக்கிய இந்து மக்கள் கட்சி !

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader