‘இன்னுயிர் காப்போம்’ , ‘குட் சமாரிட்டன்’ திட்டம்.. அண்ணாமலை சொல்லும் பொய்.. முழுமையான அலசல் !

பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆளுநர் உரையில், தவறான தகவல்கள் ஏராளமான பத்திகளில் இருப்பதால் உரையை படிக்க தன்னால் இயலவில்லை என்று கூறியதோடு, சட்டசபை கூட்டம் முடிவடைவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில் ஆளுநர் ஏன் வெளிநடப்பு செய்தார், ஆளுநர் உரையில் உள்ள பொய்கள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 13 ஆம் தேதி அன்று தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொய் 10 : தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம், நாட்டின் முன்னோடி திட்டம் என்பது பொய். ஒன்றிய அரசு 2021 லேயே கொண்டு வந்து விட்டது. விபத்தில் யாராவது மாட்டியிருந்தார்கள் எனில், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், நல்ல குடிமகன், நல்ல குடிமகள் என்று  5000 ரூபாய் கொடுப்பார்கள். அது ஒன்றிய அரசின் திட்டம். இதற்கும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.  

இந்நிலையில் ‘நம்மைக் காக்கும் 48 – இன்னுயிர் காப்போம்’ திட்டம் குறித்து அண்ணாமலை பேசியது தவறான தகவல் என தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு பதிவிட்ட நிலையில், இது குறித்து மற்றொரு பதிவையும் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், நேற்று ஆளுநர் உரையில் பத்துப் பொய்களை அம்பலப்படுத்திய பிறகு, தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவில் இருந்து விமர்சனம் வந்துள்ளது. நல்ல குடிமகன் திட்டம் (Good Samaritan scheme) திமுக அரசின் யோசனையல்ல என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஆனால் இது டிசம்பர் 2021 இல் “இன்னுயிர் காப்போம் திட்டத்தின்” ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் PMJAY திட்டம் மற்றும் மோட்டார் வாகன விபத்து நிதியின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவமனை சேவை குறித்து ஜூலை 2020 இல் மாநில அரசுகளின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. PMJAY இன் கீழ், TN அரசு மத்திய அரசிடமிருந்து ₹ 1694 கோடிகளைப் பெற்றுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வோருக்கு 5,000 ரூபாய் வழங்கும் குட் சமாரிட்டன் திட்டம் என்பது வேறு, தமிழ்நாடு அரசின் ‘நம்மைக் காக்கும் 48 – இன்னுயிர் காப்போம்’ திட்டம் என்பது வேறு என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம்:

கடந்த 2021 டிசம்பர் 17 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே மேற்கொள்ளும்.

இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் (ceiling limit) சிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட 422 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 218 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இதற்காக அவசரசிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இது குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் தான் ரூ.5,000 ரொக்கப்பணம் (விபத்து நடந்தவர்களை காப்பாற்றும் நபர்களுக்கு ரூ.5,000 வழங்கும்) வழங்கப்படுகிறது என்று கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களும் தவறானவையே. ‘குட் சமாரிட்டன் திட்டம்’ வேறு. தமிழ்நாடு அரசின் ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்’ என்பது வேறு.

5,000 ரூபாய் வழங்கும் குட் சமாரிட்டன் திட்டம் (Good Samaritans Scheme) :

இந்த திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் சிக்கியவரை, Golden Hour என்று சொல்லப்படுகின்ற விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள், மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு, சன்மானமாக ரூ.5,000 ரொக்கப்பணம் வழங்கப்படும். ரூ.5,000 ரொக்கப்பணம் வழங்கக்கூடிய இந்த அறிவிப்பு ஒன்றிய அரசால் கடந்த 2021 அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.

 

இதுகுறித்து 2021 மற்றும் 2022ல் தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிப்புகள் வெளியாகின. இதையடுத்து, இத்தொகையுடன் தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக 5000 ரூ வழங்கப்படும் என கடந்த 2023ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து அண்ணாமலை கூறியது உண்மையா ?

தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 5000 ரூபாய் வழங்கப்படுவது, ஒன்றிய அரசின் திட்டம், இது 2021லேயே கொண்டு வரப்பட்டது, ஆனால் ஆளுநர் உரையில் தவறாக உள்ளது போன்று அண்ணாமலை கூறியது தொடர்பாக சட்டசபையில் பிப்ரவரி 12 அன்று ஆளுநர் பேசுவதற்காக தயாரிக்கப்பட்ட உரையை ஆய்வு செய்து பார்த்தோம். அதில், “முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக ஒரு முன்னோடி முயற்சியாக, விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலக்கட்டத்தில் இலவச மற்றும் உறுதியான அவசர சிகிச்சை அளிக்க இந்த அரசு ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம்‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர், எண்ணற்ற விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. 

இதில் எந்த இடத்திலும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வோருக்கு 5,000 ரூபாய் வழங்கும் திட்டமான “குட் சமாரிட்டன் திட்டம்” குறித்து குறிப்பிடவில்லை. விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவசிகிச்சைக்கான செலவை (Cashless treatment of victims of accident) அரசு வழங்கும் “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம்” குறித்தே ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் “Cashless treatment of victims of accident” என அழைக்கப்படும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை மற்றும் இலவச மருத்துவம் வழங்கும் திட்டம், ஒன்றிய அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். 

இது குறித்து ஒன்றிய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து எகனாமிக்ஸ் டைம்ஸ் 2024 பிப்ரவரி 07 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சாலை போக்குவரத்து அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் உள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறுவார்கள். சிகிச்சைக்கான அதிகபட்ச வரம்பு ரூ. 1.5 லட்சமாக இருக்கும், இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 நாட்கள் வரை இருக்கும். சிகிச்சைக்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தத் திட்டம் ஒன்றிய அரசால் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.

இன்னும் நடைமுறைக்கு வராத திட்டத்தை வைத்து அண்ணாமலை தவறான தகவலைப் பேசி இருக்கிறார்.

ஆனால், இன்னும் தொடங்கப்படாத திட்டம் என்றால், தமிழ்நாடு அரசு இணையதளத்தில் இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம்என்ற திட்டம் பற்றிய அறிவிப்பிற்கு மேலே ஒன்றிய அரசின் PM-JAY பெயர் மற்றும் லோகோ இடம்பெற்று இருக்கிறது பாருங்கள் என பாஜகவினர் இப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இன்னுயிர் காப்போம் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் இணைக்கபட்டது குறித்து ஏற்கனவே கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 

மேலும் படிக்க : காப்பீட்டு திட்டத்தில் கருணாநிதி படம் எதற்கு, கொதிக்கும் பாஜக.. இதற்கு முன் ஜெ படம் இருந்தது !

ஒருவேளை, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசும் அறிவிக்கும்பட்சத்தில், அதன் தொகை ரூ1.50 லட்சமாக உயரும். 

மேலும், 2021 டிசம்பரில் இன்னுயிர் திட்டம் தொடர்பான தினமணி வெளியிட்ட செய்தியில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு அளிக்கப்படும் ரூ.5000 ஊக்கத் தொகை குறித்தும் இடம்பெற்றுள்ளதை வைத்தே, இன்னுயிர் திட்டத்தில் குட் சமாரிட்டன் ஓர் அங்கம் என அண்ணாமலை மற்றும் பாஜகவினர் பேசி வருகின்றனர். ஆனால், இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்த தமிழ்நாடு அரசின் TNSTA இணையதளம் மற்றும் 2021ல் வெளியான அரசாணையில் குட் சமாரிட்டன் பற்றி இடம்பெறவில்லை. 2021ல் குட் சமாரிட்டன் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் தனி அறிவிப்புகளே வெளியாகி இருக்கின்றன. 

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் குறித்த ஓர் தெளிவான பார்வை :

இந்தியாவில் கடந்த 2013-ல் (காங்கிரஸ் ஆட்சியின் போதே), “சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் முதல் கண்ணோட்டமாக ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு குறிப்பாக குர்கான்-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH)-8 வழியே விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் கீழ், NH-8 இன் குர்கான்-ஜெய்ப்பூர் சாலையில் நிகழும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், 48 மணிநேரங்களுக்கு மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 2016-ல் கர்நாடகாவில் சித்தராமையாவின் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சாலை விபத்து நடந்தவர்களுக்கு, முதல் 48 மணிநேரத்திற்கு 25000/- வரையில் சிகிச்சையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கர்நாடகாவைப் போன்றே, மகாராஸ்டிராவிலும் கடந்த 2016 ஏப்ரலில், சாலை விபத்து நடந்தவர்களுக்கு, முதல் மூன்று நாட்களுக்கு இலவச சிகிச்சையளிக்கப்படும் என்பது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை காண முடிகிறது.

மேலும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வோருக்கு 5,000 ரூபாய் வழங்கும், குட் சமாரிட்டன் திட்டம் குறித்தும் தேடியதில், டெல்லியில் கடந்த 2017 லேயே (ஒன்றிய அரசு 2021ல் செயல்படுத்துவதற்கு முன்பு) இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த முடிகிறது. இந்த திட்டத்தின் படி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்குச் சென்றடைய உதவுபவர்களுக்கு ₹ 2,000 வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆதாரங்கள்:

PIB : SCHEME FOR GOOD SAMARITAN

Nammai Kakkum 48 Thittam TN GO

Centre to pay Rs 5,000 as reward to good samaritans assisting and rushing road crash victims to hospitals

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2021/12/2021120695.pdf 

https://www.deccanherald.com/india/karnataka/state-govt-launches-cashless-trauma-2053002

https://www.ndtv.com/delhi-news/delhi-government-to-reward-those-who-help-road-accident-victims-1776026

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader