ஆபாசப்பட விவகாரம் பற்றி திரு.ரவி IPS சொல்வதென்ன ?

மூத்த பத்திரிகையாளர் திரு.துரையரசு அவர்கள் திரு.ரவி IPS-ஐ சந்தித்து விளக்கம் பெற்று எழுதியுள்ள முகநூல் குறிப்பு.

Advertisement

இதிலுள்ளது போன்றே நாம் முன்பு வெளியிட்ட வீடியோ விளக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது

ஊர்கூடித் தேர் இழுப்போமா!

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். தயவு செய்து ‘ஆபாச வீடியோ பார்ப்போரின் பட்டியல் தயார்… அடுத்து கொத்துக்கொத்தாக கைதுதான் ’ என்ற ரீதியில் வரும் செய்திகள்,யூ டியூப் செய்திகளைப் புறம் தள்ளுங்கள். அந்த செய்தியில் இருப்பது கொஞ்சூண்டு உண்மை மட்டுமே.

எங்களது குழந்தை வளர்ப்பு மாத இதழுக்காக காவல் துறை கூடுதல் இயக்குநர் (சிறார், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்) திரு.ரவி, இ.கா.ப. அவர்களை இன்று சந்தித்தேன். அந்த நேர்காணல் சிறிது நேரத்தில் இணையத்தில் வெளியிடப்பட இருக்கிறது. நான் பேசியமட்டில் தெரிந்த விஷயங்கள் இவைதாம்:

*அவரது சிறப்புப்பிரிவு, பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே செயல்படுகிறது.

*குழந்தைகளைத் துன்புறுத்தி, வசீகரித்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வீடியோக்களைத்தான் இப்பிரிவு கவனம் எடுத்துப் பார்க்கிறது. அதனை உருவாக்கியோர், தவறான நோக்கத்துடன் பரப்புவோர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதில் மாற்றமில்லை.

Advertisement

*குழந்தைகளை அவ்வாறு சிந்தித்துப் பார்க்கவே சிலரால்தான் முடியும். மனப்பிறழ்வு கொண்டவர்கள் அவர்கள். அதற்குத்தான் சிகிச்சையோ/தண்டனையோ தேவை.

*ஒருவேளை சிறாரின் ஆபாச வீடியோவை யாராவது உங்களுக்கு அனுப்பியிருந்தால், நீங்கள் அப்பாவியாக அதனை பதிவிறக்கம் (அல்லது ஆட்டோமேட்டிக் டவுன்லோடு) செய்திருந்தால் அதனை அழித்துவிடுங்கள். வேறு எவருக்கும் பரப்பாதீர்கள். அனுப்பிய நபரைக் கூப்பிட்டு கண்டியுங்கள். இதனால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர்கள்.

*உங்கள் கையில் ஆபாச வீடியோ இருப்பதால் மட்டும் நீங்கள் குற்றவாளி அல்லர்.

*குறிப்பிட்ட இணையதளங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன. எனவே, இனி அவற்றைப் பார்க்க முடியாது.

*வெளிநாட்டு இணையதளங்களில் இவை இருந்தால் , அவற்றை நீங்கள் காண நேர்ந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் சொல்லலாம். அவர்கள், இண்டர்போல் உதவியுடன் சம்பந்தப்பட்ட நாட்டுக்குப் பேசி, குறிப்பிட்ட வீடியோவை நீக்கிவிடுவர்.

*பொதுவான (வயதுவந்தோருக்கான) ஆபாச இணையதளங்களுக்கும் தற்போதைய பிரச்சனைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் அவற்றில் குழந்தைகளின் வீடியோக்கள் இருந்தால் அந்தப்பக்கம் போகவே கூடாது.

உண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருந்தால் உடனடியாக அதுகுறித்து (லிங்க்-ஐ காப்பி செய்து மின்னஞ்சல்கூட அனுப்பலாம்) சிறப்புப்பிரிவுக்கு புகார் அளிக்கலாம். எல்லாக் குழந்தைகளும் குழந்தைகள்தானே!

*போக்ஸோ சட்டம் குறித்து பெரிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. பொதுமக்களும் சேர்ந்து கைகொடுத்தால் குறுக்கு புத்திக்காரர்களை சட்டத்தின்முன்பு நிறுத்தலாம் என்கிறார் திரு. ரவி. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், யூனிசெஃப், பத்திரிகையாளர்கள் அனைவரோடும் இணைந்து இதில் பணியாற்ற அப்பிரிவு விரும்புகிறது.

*”ஆளாளுக்கு ஒரு பட்டியலைக் காட்டி பயமுறுத்துகிறார்களே?” என்றேன்.

நம்மிடம் கொஞ்சம் விஷயத்தை எடுத்துக்கொண்டு, அவர்கள் சரக்கையும் சேர்த்து தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள்” என்று ஆதங்கத்தைத் தெரிவித்தார். பீதியைக் கிளப்புவதைவிட உண்மையை விளக்குவது நல்லது யூ டியூப் நண்பர்களே!

*ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். பூட்டிய அறையில் தனியாக நீங்கள் இருந்தாலும் உங்கள் கையில் செல்பேசி இருந்தால், அதுவும் இணைய இணைப்புடன் இருந்தால் நீங்கள் தனியாக இல்லை. உலகத்துடன் இருக்கிறீர்கள். எனவே பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை உணருங்கள்.

*”தமிழகத்துக்கு முதலிடமாமே?” என்று கேட்டேன். “அதுவா விஷயம்? கெட்ட விஷயங்களை ஒருவர் செய்தாலும் ஒரு லட்சம் பேர் செய்தாலும் தவறுதானே! எனவே எண்ணிக்கையைப் பார்க்காதீர்கள்” என்றார் திரு. ரவி.

*நேரடிக்குற்றவாளிகள் தவிர, மற்றவர்களுக்கு அறிவுரையோ, எச்சரிக்கையோ அளிக்கப்படும் என்று தெரிகிறது.

*”போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பெரிதாக இல்லையே… எடுத்தவுடன் தண்டனை என்பதற்குப் பதிலாக ’நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள். ஆட்சேபகரமான விஷயத்தை இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என்ற அறிவிப்பை, சம்பந்தப்பட்ட செல்பேசி, மின்னணு சாதன பயன்பாட்டாளருக்கு சொல்லலாமே? அவ்வாறு செய்தாலே பெரும்பாலானோர் இப்பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்களே? (மன் கி பாத், பிரதமர் அலுவலக விளம்பர எஸ்.எம்.எஸ். போல!)” -என்றேன். “இது நல்ல யோசனை. நிச்சயம் பரிசீலிக்கிறேன்” என்றார். மிக்க நன்றி!

*”எல்லாப் பிரச்சனைக்கும் காரணமும் தீர்வும் எங்கே இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? குழந்தை வளர்ப்பில்தான். எனவே பெற்றோர், கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கேட்ஜெட்களைக் கையில் கொடுப்பதைத் தவிருங்கள்” என்றார்.

எனது கருத்தாக நான் முன்வைப்பது இதைத்தான்:

*இந்தியா போன்ற பாலியல் வறட்சியும் ஆணாதிக்க மனப்பான்மையும் மிக்க நாட்டில் இவைபோன்ற இணையதளங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பது புரிந்துகொள்ளக்கூடியதே.

* இவற்றைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவரவர் விருப்பம். ஆனால் அது நிச்சயம் நமது நேரத்தைத் தின்கிறது.

*தொடர்ந்து அவற்றைப் பார்க்கும்போது அது ஒரு மனநோயாக மாறிவிடக்கூடும். (எப்போதாவது பார்ப்பதால் பிரச்சனை இல்லை என்று ஒருமுறை உளவியல் மருத்துவர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அது வேறு விஷயம்) .

இதனால் இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் எழலாம் என்று உளவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எல்லாவற்றையும் காமமாகவே பார்க்கும் போக்கு, நடத்தையில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மனக்கட்டுப்பாடு இருந்தால் இந்தப்பிரச்சனை இருக்காது.

*பாலியல் வல்லுறவு வீடியோக்களைத் தேடும் போக்குக்குக் காரணமும் பெண்ணை ‘அடக்கி ஆளும்’ பழைய மனோபாவத்திலிருந்து வருவதே. பாலியல் துன்புறுத்தல் செய்தாவது நாயகியை அடையும் கதாநாயகர்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறோம் இல்லையா…அதுதான். (அவ்வாறு ஒரு வீடியோவைத் தேடும்போது அந்த வீடியோவில் தெரிகிற முகத்தை நமக்கு வேண்டியவர்களாக நினைத்துப்பாருங்கள். உங்களால் அங்கு ஒரு நொடிகூட இருக்க முடியாது).

*வல்லுறவு என்பது உறவு அல்ல. அது ஒரு தாக்குதல். அங்கு தேவை உதவியும் பரிவும்தான். ஒளிந்திருந்து பார்க்கும் கண்கள் அல்ல.

*18 வயதுக்குக் கீழ் உள்ளோரை வன்முறை, ஆபாசக் காட்சிகளில் திரைப்படங்களில் நடிக்கவைப்பதும் தவறு என்று தெரிவித்தார். இதுதொடர்பாக, இவரது பிரிவு, தணிக்கைக்குழுவுக்கு கடிதம் எழுத இருக்கிறது. தேவை ஏற்பட்டால் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்வார்களாம் (சூப்பர்ல!?)

*வெளிநாட்டு வீடியோக்களில் இடம்பெறுவோரைப் பார்க்கிறோம் இல்லையா…அவர்களுக்கும் பசிக்கும்; வயிற்றுப்போக்கு ஏற்படும்; குழந்தைகள் இருக்கக்கூடும்; பொருளாதாரப் பிரச்சனைகள் இருக்கக்கூடும்…இப்படியெல்லாம் நாம் யோசிக்கிறோமா?

வெளிநாடுகளில் ஆடை அவிழ்ப்பு காட்சிகளில் நடிப்போர் தங்களது வேலை குறித்துப் பெருமை கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு ஓய்வூதியம், கண்ணியமான முதுமை இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன்.

*மனிதர்களைப் புனிதர்களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவற்றை நான் சொல்லவில்லை. அதேநேரத்தில் நமது சிறிய பலவீனங்களில் மற்றவர் வந்து உட்கார்ந்துகொள்ளக்கூடாது என்பதை அடிக்கோடிடவே விரும்பினேன். உங்கள் முடிவுகளை நீங்களே எடுங்கள்.

குழந்தைகளையும் சிறாரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் இயங்கும் காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம். அதனை அங்கு உறுதியளித்துவிட்டு வந்திருக்கிறேன். கைகோர்க்கும் பத்திரிகையாளர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதுவரை நான் சொன்னதெல்லாம் நான் இன்று நேர்காணல் செய்த வரலாறு. புவியியல் விஷயம் ஒன்று இருக்கிறது. திரு.மு.ரவி, இ.கா.ப., எங்கள் ஊர்க்காரர். ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள வெரியப்பூர் கிராமத்தில் பிறந்தவர். முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் திரு.முத்துச்சாமி அவர்களது மைந்தர்.

நாம் இதை திரு.துரையரசு அவர்களை தொடர்பு கொண்டு உறுதிசெய்து கொண்டோம்

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button