ஈராக் லாலிஷ் கோவிலில் தமிழ் பெண்ணின் ஓவியம்| இந்து மத வழித் தோன்றலா ?

இஸ்லாமிய நாடான ஈராக்கில் யாசிடிகள் என்ற இனக்குழு யாசிடிசம் என்ற மத நம்பிக்கையைக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். அதில், மத்திய கிழக்கில் தோன்றிய யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், ஜோராஸ்ட்ரியனிசம் உள்ளிட்ட மதங்களின் கூறுகள் மற்றும் இயற்கை வழிபாடு முறையை பகிர்ந்து கொள்கின்றனர்.

Advertisement

பெரும்பாலான யாசிடிகள் வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் தான் யாசிடி மக்களின் மிகவும் புனித இடமாக கருதப்படும் லாலிஷ் கோவில் அமைந்துள்ளது. யாசிடி மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது லாலிஷ் கோவிலுக்கு செல்ல வேண்டும் என குறிக்கோளாக உள்ளனர்.

கூம்பு கூரை போன்ற வடிவில் இருக்கும் லாலிஷ் கோவிலில் மதத்தின் தலைமை துறவியான Sheikh Adi ibn Musafir உடைய கல்லறை கிபி 500-களில் இருந்து இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த ஆலயம் அமைந்து இருக்கும் கிராமத்தில் மக்கள் யாரும் வசிப்பதில்லை. அந்த யாசிடிசம் நம்பிக்கையின் தலைவரான எமிர் மட்டுமே வசித்து வருகிறார். எனினும், யாத்ரீகம் வரும் மக்களுக்காக அங்குள்ள ஏராளமான வீடுகள் திறக்கப்படும்.

யாசிடிசம் இந்து மத வழிபாடா ?

யாசிடி பழங்குடி இனத்திற்கும், இந்து மத வழிபாட்டிற்கும் ஒற்றுமை இருப்பதாக சில இணையதள பதிப்புகள் மற்றும் தமிழ் வீடியோ ஒன்றை காண முடிந்தது. மயில் உருவ வழிபாடு, தீபம் ஏற்றுவது உள்ளிட்டவையை வைத்து இந்து மத வழியில் வந்தவர்கள் என வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

யாசிடி பழங்குடி இன மக்களின் வழிபாட்டில் பிற மதங்களின் கூறுகள் மற்றும் வழிபாடு முறை இருப்பதை முதலிலேயே தெரிவித்து இருக்கிறோம். லாலிஷ் கோவிலின் நுழைவாயிலில் பாம்பின் உருவம் இருக்கும். மேலும், முருகனின் வாகனமான மயிலை வணங்குகின்றனர்.

யாசிடிகள் ஒரேயொரு கடவுள் என்ற நம்பிக்கையை கொண்டவர்கள். அந்த கடவுள் உலகை படைத்து அதனை பராமரிக்க 7 தேவ தூதர்களிடம் ஒப்படைத்தார் என நம்புகின்றனர். அவ்வாறான 7 தூதர்களில் ஒருவர் தான் ” Melek Taus ” எனும் மயில் தேவதை. ஆகையால், மயிலை வணங்குகின்றனர். மயிலின் சின்னமானது லாலிஷ் முழுவதும் காணப்படுகிறது. அதேபோன்று, அங்கிருக்கும் கருப்பு பாம்பு சிற்பத்தின் தோற்றம் குறித்து விவரங்கள் இல்லை.

யாசிடிகள் இந்துக்கள் வழிபாடு முறையை கொண்டுள்ளதாக இங்குள்ளவர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையில் பல மதங்களின் நம்பிக்கை பிணைக்கப்பட்டு உள்ளது. புனித நீரை அருந்துவது, புனித கல்லறை, தீபம் ஏற்றுவது, வேண்டுதல் பாறை என கலவையான வழிபாடு முறையை கொண்டிருக்கின்றனர்.

மயில் வழிபாடு, தீபம், கோவிலின் வடிவம் உள்ளிட்ட கூறுகளை வைத்து இந்து மதத்தின் வழித் தோன்றல்கள் என பொதுவாக கூறிவிட முடியாது. அதற்கான விரிவான ஆதாரங்கள் இல்லை எனலாம்.

தமிழ் பெண் ஓவியம் :

லாலிஷ் ஆலயத்தில் இருக்கும் மிக முக்கிய ஒன்று குத்துவிளக்கை ஏற்றும் பெண்ணின் ஓவியம். ஈராக் நாட்டில் குத்துவிளக்கை ஏற்றும் பெண்ணின் ஓவியம் வரைந்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது. இதனை மையப்படுத்தியும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என கூறத் தொடங்கி உள்ளனர்.

தமிழ் பெண்ணுக்கே உரித்தான உடை தோற்றத்தில் குத்து விளக்கினை ஏற்றும் ஓவியத்தை தீட்டியது யார் என்ற விவரங்கள் எங்கும் கிடைக்கவில்லை. எனினும், இந்த ஓவியம் மிக பழமையானது எனக் கூறிவிட முடியாது. இன்றை காலத்தில் தென்னிந்தியாவில் வாழும் பெண்களை போன்று உடை அணிந்து இருக்கிறார், காதில் கம்மல் அணிந்து இருக்கும்படி தீட்டியுள்ளனர்.

யாஷிடி இன அழிப்பு :

2014-ல் இருந்து தான் யாஷிடி இன மக்கள் குறித்து உலகம் அறிந்து கொள்ள நேரிட்டது. ஐஎஸ்ஐஎல்( Islamic State of Iraq and the Levant) அமைப்பால் யாஷிடி மக்களின் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அடிமையாக்கப்பட்டனர்.

பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வடக்கு ஈராக்கில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இன அழிப்பிற்கு காரணம் மத வழிபாடு முறை எனக் கூறப்படுகிறது. ஆகையால், அவர்கள் புலம்பெயரவும் செய்தனர்.லாலிஷ் கோவிலை மறுகட்டமைப்பு செய்ய $500,000-ஐ அமெரிக்கா வழங்கியதாக ஜூலை 2019-ல் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

ஈராக்கில் வசிக்கும் யாஷிடி இன மக்கள் இந்து மத வழிபாட்டை கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. ஆனால், யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், ஜோராஸ்ட்ரியனிசம் உள்ளிட்ட பல மதங்களின் கூறுகளை கொண்டிருப்பதாக யாஷிடி இனம் குறித்த தகவல் உள்ளது. யாஷிடி மக்கள் குறித்த இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

Proof :

Lalish Temple The sacred shrine of the Yazidis.

Lalish temple

Reflections on Lalish, the Holy Valley of the Yezidis

INSIDE LALISH, THE HEART OF THE YAZIDI FAITH

Yazidis receive $500,000 grant from U.S. to fund Lalish Temple restoration: ambassador

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button