ஜாக்கிசானையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் வதந்தி !

சீனாவில் பரவத் தொடங்கிய நோவல் கொரோனா வைரஸ்-2019 பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதுவரை நோவல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,000 கடந்து உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 3,200-ஐத் தாண்டியது. இந்தியா வந்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்துள்ளதாக மத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
நோவல் கொரோனா வைரஸிற்கு தனிப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துக்கள் இல்லை என்றாலும், வைரஸ் தொடர்பான சுகாதார நடவடிக்கைகள் மற்றும் மருந்துக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பலவற்றில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், கொரோனா வைரஸ் குறித்த நூற்றுக்கணக்கான வதந்திகளும் இணையத்தை ஆக்கிரமித்தன. உலக அளவில் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் பரவுவது முடிந்தபாடில்லை. அப்படியான வதந்திகள் நடிகர் ஜாக்கிசானையும் விட்டு வைக்கவில்லை.
சண்டை காட்சிகளின் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற நடிகர் ஜாக்கிசான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவின. இப்படி இணையத்தில் பரவிய செய்தியை கண்ட உலகம் முழுவதும் உள்ள ஜாக்கிசான் ரசிகர்கள் அவர் குணமடைய வேண்டும் என தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு உள்ளனர். இந்த செய்தியை அறிந்த நடிகர் ஜாக்கிசான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
View this post on Instagram
Instagram link | archived link
” அனைவரின் அக்கறைக்கும் நன்றி! நான் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளேன். தயவு செய்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். நான் தனிமைப்படுத்தப்பட்டு இல்லை. அனைவரும் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ” என பதிவிட்டு உள்ளார்.
மேலும் படிக்க : மதுரையில் கொரோனாவா ?| எண்ணெய் பலகாரம், கோழியால் கொரோனா பரவுகிறதா?
அயல்நாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் மட்டும் நோவல் கொரோனா வைரஸ் அறிகுறிகள், பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. சிக்கன் உள்ளிட்ட இறைச்சியால் கொரோனா பரவுவதாக தவறான தகவல் இந்தியாவில் வைரல் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடக்தக்கது.