எதற்காக ஜக்டோ ஜியோ போராட்டம் ?

ஜனவரி 22-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ஜக்டோ ஜியோ அமைப்பின் மூலம் ஒன்றிணைந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டம் சில இடங்களில் சாலை மறியல், கைது நடவடிக்கை செய்யும் அளவிற்கு மாறி வருகிறது. அரசு ஆசிரியர்களின் ஊதிய விவகாரத்திலும், ஓய்வூதியம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் அதிகம் உருவாகி இருக்கிறது.
போராட்டம் 3 மூன்று நாட்களை கடந்து நடைபெற்று வரும் வேளையில் போராடும் ஆசிரியர்களுக்கு பதிலாக ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என அரசு இம்முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஏன் போராட்டம் :
சென்ற ஆண்டில் இருந்தே ஜக்டோ ஜியோ அமைப்பினர் மேற்கொண்டு வந்த போராட்டம் ஜனவரி 2019 -ல் தீவிரமடைந்து உள்ளது. ஜக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வராத காரணத்தினால் போராட்டம் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஆசிரியர்களின் விகித ஊதியத்தில் உள்ள முரண்பாட்டை சரி செய்ய வேண்டும், 3500 துவக்க பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ஆசிரியர்களின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்க வேண்டும், ஆசிரியர்களின் வேலையைப் பறிக்கக்கூடிய அரசு ஆணை 56 உள்ளிட்டவையை ரத்து செய்ய வேண்டும் என்ற 9 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
2003 ஏப்ரல் மாதத்தில் இருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி அரசு பணியில் உள்ளவர்கள் தங்களின் பணியின் இறுதி காலத்தில் பெறும் ஊதியத்தையும், அவரின் மொத்த பணிக் காலத்தையும் கொண்டு ஓய்வூதியம் அளிக்கப்படும்.
ஆனால், 2003-க்கு பின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை விட குறைவான ஓய்வூதியமே வருவதாகவும், அதிலும் ஓய்வூதியத் தொகை இவ்வளவு தான் கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை என கூறுகின்றனர். இதனாலே புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர்.
மேலும், 2009-க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கான அடிப்படை ஊதியம் 11 ஆயிரமாக இருந்தது. ஆனால், அதற்கு பின்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியம் 8 ஆயிரமாக குறைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
அரசு ஆசிரியர்களின் போராட்டங்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என மாணவர்கள் தரப்பில் வழக்குகளும் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜனவரி 25-க்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு போராட்ட நாட்களில் ஊதியம் இல்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கவும் அரசு முடிவெடுகிறது.