கத்திரிக்காயோடு மல்லுக்கு நிற்கும் ஜக்கி.. அறிவியல் தெரியுமா ?

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசிய சில காணொளிகள் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில், முக்கியமாக அவர் கத்தரிக்காய் பற்றிப் பேசிய காணொளி. பொது மக்களை தங்களது தினசரி உணவுப்பழக்கமே தீமையானது என்பது போல மிகவும் அச்சத்தை விளைவிப்பதாக ஜக்கி வாசுதேவ் பேசியிருப்பவை எல்லாம் அறிவியல் பூர்வமானதா என்பதே கேள்வி.
ஜக்கி வாசுதேவ் கூறியது: “கத்தரிக்காயை தினமும் சாப்பிடும் பொழுது அதில் உள்ள `citatine` எனும் மூலக்கூறு மூளையின் Hypothalamus பகுதியை பாதிக்கும். Hypothalamus பாதிக்கப்பட்டால் நமது ‘முடிவெடுக்கும் திறன் (Decision making)’ குறையும். வளரும் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் கத்தரிக்காய் தடை செய்யப்பட வேண்டும்”.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பரவும் வரும் செய்திகள் அறிவியலுக்கு ‘புறம்பாக’ இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவோம். ஆனால் இந்த காணொளியில் அடிப்படை அறிவியலே இல்லையென்பதும், அறிவியலில் நிறுவப்பட்ட உண்மைகளைக் கூட ஜக்கி வாசுதேவ் தவறாகப் பேசியிருப்பதும் வருத்தத்திற்கு உரியது.
முதலில், ஜக்கி வாசுதேவ் கத்தரிக்காயில் இருப்பதாகச் சொன்ன வேதிப்பொருளான ‘சிட்டடின் (citatine)’ (as pronounced by him) என்பது கத்தரிக்காயில் மட்டுமல்ல வேறு எந்த காய்கறியிலுமே கிடையாது. ஏனென்றால் அப்படியொரு வேதிப்பொருளே கிடையாது என்பதே உண்மை.
சரி எழுத்துப்பிழையாக இருக்கலாம் எனும் அடிப்படையில் பார்த்தோமேயானால் கூட ‘சைட்டடின் (cytadine)’ எனும் syrup உள்ளது. அதற்கும் கத்தரிக்காய்க்கும் மற்ற காய்கறிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அடுத்ததாக, இந்த citatine மூளையின் hypothalamus பகுதியை பாதித்து நமது சிந்தனைத்திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கச்செய்யும் என்கிறார். நமது சிந்தனைத்திறனை, பகுத்தறியும் திறனை உறுதிச்செய்வது பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்த பரிணாம வளர்ச்சியில் மனிதனிற்கு பெரும் சாதகமாக அமைந்த மூளையின் Prefrontal cortex பகுதியே அன்றி hypothalamus அல்ல. Hypothalamus-ன் பணி பசி, உடல் உஷ்ணத்தை சீராக வைப்பது, இனக்கவர்ச்சி, ஹார்மோன் சுரப்பிகளை இயங்கச்செய்வது போன்றதே தவிர பகுத்தறிவது அல்ல (1).
கத்தரிக்காயை ஆலகால விஷம் போலவும் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது என்றும் பேசும் ஜக்கி வாசுதேவ் இன்னொரு காணொளியில் அறிவியல் பூர்வமாக நச்சுத்தன்மை கொண்டது என நிரூபிக்கப்பட்ட மெர்கூரியை(பாதரசம்) மிகச்சிறந்த மருந்து போல் விவரிக்கிறார்.
ஜக்கி வாசுதேவ் கூறியது: “மெர்கூரியை (பாதரசம்) உட்கொள்ளும்போது pipe (esophagus எனப்படும் உணவுக்குழாயை ஜக்கி வாசுதேவ் அவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம்) வழியாக செல்லாமல் அதன் அதிக எடை காரணமாக வயிற்றில் நேரடியாக சொட்டும். அதனால் அது உங்களை கொல்லலாம். ஆனால் மெர்கூரியை சித்தர்கள் கொடுக்கும் போது அது மருந்தாகின்றது. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே மெர்கூரி தான்”.
ஆனால் உண்மை என்ன ?
நாம் சாப்பிடும் எந்த உணவும் peristaltic movement எனப்படும் தசைகளின் சுருங்கி விரிதலால் வயிற்றை அடையுமே தவிர அதிக எடையுள்ள உணவுகள் நேரடியாக வயிற்றுக்குள் விழும் என்பது அறிவியல் அல்ல.
மேலும் மெர்கூரி ஒரு கன உலோகம் (heavy metal). அது Elemental mercury என்று தனித்து இருக்கும் போதும்; Amalgam ஆக சில்வர், டின்னுடன் சேர்ந்து கலவை நிலையில் இருக்கும் போதும் Mercury vaporஐ வெளியிடும். Mercury vaporஐ நுகரும் போதும், தொடர்ச்சியாக Mercury vapor நுகர்தலுக்கு ஆளாகும் போதும் பல விதமான ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தும். Mercuric oxide, Elemental mercury, Amalgam போன்ற எந்த வடிவிலும் மெர்கூரி விஷத்தன்மை வாய்ந்தது தான்.
மிக முக்கியமாக, குழந்தைகள் மற்றும் தாயின் கருவில் இருக்கும் சிசு Mercury poisoning-ஆல் கடுமையான பாதிப்பை அடைவர். நரம்பு மண்டல பாதிப்பு மட்டுமின்றி கருவில் இருக்கும் சிசுவிற்கு பிறவிக்குறைபாடுகள் ஏற்படுத்தும் தீவிர நச்சு தன்மை உடையது மெர்கூரி (2).
அறிவியல் ரீதியாக கத்திரிக்காய் நரம்பு மண்டலத்தை பாதிப்பது இல்லை; ஜக்கி வாசுதேவ் ஊக்குவிக்கும் மெர்கூரியே (பாதரசம்) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நரம்பு மண்டல பாதிப்பை உண்டு பண்ணக்கூடிய தவிர்க்க வேண்டிய நஞ்சு.
இந்நேரத்தில் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நடத்தி வந்த Thermometer தொழிற்சாலையில் வெளியேறிய மெர்கூரி நச்சினால் ஏற்பட்ட பேரழிவினை நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 2001ல் தொழிற்சாலை மூடப்பட்டாலும் இன்றும் மெர்கூரி நச்சின் பாதிப்பு கொடைக்கானல் பகுதிகளில் இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது (3).
காணொளியில் ஜக்கி வாசுதேவ், தொழிற்சாலையில் இருந்து வரும் மெர்கூரி Mercuric oxide என்பதால் அது நச்சுத்தன்மை உடையது, ஆனால் சித்தர்கள் உபயோகித்த திடமாக்கப்பட்ட வடிவில் மெர்கூரி மருந்தாகிறது எனக் கூறியுள்ளார்.
சித்த மருத்துவத்தில் மட்டும் அல்ல உலகில் உள்ள பெரும்பாலான பாரம்பரிய மருத்துவத்திலும் மெர்கூரி இன்றியமையாத தனிமம். இதனால் இந்த மருத்துவ முறைகளை பின்பற்றுவோர் தொடர்ந்து மெர்கூரி நச்சினால் பாதிப்படைவது மிகப்பரவலாக உள்ளது. (4,5,6)
நரம்பு மண்டலம், சிறுநீரகம் உட்பட பல உறுப்புகளை பாதிக்கும் மெர்கூரியை மருத்துவம் முதலான எந்த துறையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், சுற்றுச்சூழலில் மெர்கூரியின் அளவை குறைப்பதற்கான பல நடவடிக்கைகளை உலக சுகாதார மையமும் உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆகையினால், அரசாங்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், எதிர்கொள்ளும் மிகப்பெரிய நச்சை நான் உயிர் வாழ்வதே மெர்கூரியினால் தான் என அஞ்ஞானமாய் பேசும் ஜக்கி வாசுதேவ் தன்னை பின்பற்றுபவர்களின் நலன் கருதி அறிவியல் கற்றறிந்து பேசுவது நலம்.
- முனைவர்.தேவி (Genetics)
ஆதாரம் :
2 https://www.who.int/publications/i/item/9789241500456
3 https://kodaimercury.org/poisoned-ground/
5 https://pubs.acs.org/doi/10.1021/acs.est.8b01754