நினைத்ததை சாதித்தது “ஜெய் பீம்” : மாவட்டந்தோறும் கள ஆய்விற்கு உத்தரவிட்ட இறையன்பு !

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம் இருளர் பழங்குடியினர் வாழ்வியலையும், அதிகாரத்தில் இருப்பவர்களால் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியையும், சட்டப் போராட்டத்தையும் வலுவாக பேசியது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

சமீபத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நரிக்குறவர்களும், பழங்குடியினரும் வசிக்கும் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வீட்டுமனை பட்டா, , குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஆணையையும் முதலமைச்சர் வழங்கி இருந்தார்.

இந்நிலையில், நரிக்குறவர், பழங்குடியினர், இதர விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக கள ஆய்வை மேற்கொள்ள கூறி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில், ” நரிக்குறவர், பழங்குடியினர், இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமம்/பகுதிகளை நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளையும், சம்பந்தப்பட்ட துறைகள்/திட்டங்கள் வாரியாக அளிக்கக் கூடிய பயன்களையும் கண்டறிந்து பட்டியலிடுதல்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான, அரசின் சார்பாக மேற்கொள்ளக்கூடிய அனைத்து உதவிகளையும் முழுமையாகக் கண்டறிதல். உதாரணமாக, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், ஓய்வூதியம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்றவை.

இத்துடன், தேவைகள், மதிப்பீடு படிவம்(Needs Assessment Format) இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபர் தேவை மற்றும் கிராமம்/ பகுதிகளுக்கான பொதுவான உட்கட்டமைப்பு தேவைகளை விடுதலின்றி ஆய்வு மேற்கொண்டு முழுமையான(Exhaustive) தேவைகள் மதிப்பீடு பட்டியல்(Need Assessment List) தயார் செய்யப்பட வேண்டும். இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டவற்றைத் தவிர இதர தேவைகள் இருப்பின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இப்பணியினை மேற்கொள்ள ஒரு தொடர்பு அலுவலரை நியமனம் செய்யப்பட வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

யூடர்ன் ஆசிரியர் திரு.ஐயன் கார்த்திகேயன், திருவண்ணாமலை பகுதிகளில் கொத்தடிமைகளாக வாழ்ந்த இருளர், பழங்குடியின மக்கள் பட்ட துயரத்தையும், அவர்கள் மீட்கப்பட்ட பிறகு வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ” அடையாளம் ” என்ற ஆவணப் படத்தை எடுத்து இருந்தார்.

விளிம்பு நிலை சமூக மக்கள் படும் துயரத்தை போக்கவும், அவர்களும் சமூகத்தில் முன்னேற அரசு நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஜெய் பீம் திரைப்படத்தின் வாயிலாகவும், சமூக வலைதள வீடியோக்கள் மூலமாகவும் விளிம்பு நிலை சமூக மக்கள் மீது அனைவரது பார்வையும் சென்றுள்ளது.

தமிழக முதல்வர் நரிக்குறவர்களுக்கும், பழங்குடியினருக்கும் நலத்திட்டங்களை வழங்கிய பிறகு அதோடு முடிந்து விடக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அம்மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தேவைகளை கண்டறியவும் மாவட்டந்தோறும் கள ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்ட அரசின் முயற்சி பாராட்டுகளை பெற்று வருகிறது.

Please complete the required fields.
Back to top button
loader