பாதுகாப்பான குடிநீர் வழங்கும் ‘ஜல்ஜீவன் திட்டம்’ – ஓர் முழுப்பார்வை

2024-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராம மக்களுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இலக்குடன் செயல்படும் ‘ஜல் ஜீவன் திட்டத்தை’ ஒன்றிய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இவை வீட்டுக்கழிவுநீர் மேலாண்மை, நிலத்தடிநீரை அதிகரித்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் கட்டமைப்புகளை திறம்பட செயல்படுத்தவேண்டும் என்பனவற்றை நோக்கங்களாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ‘ஜல் சக்தி அமைச்சகத்தின்‘ கீழ் நேரடியாக செயல்படுகிறது.

மேலும் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் இந்த திட்டமானது, ஊரகப்பகுதிகளில் நிகழும் சமூக ஏற்றத்தாழ்வுகளை கலைந்து விளிம்புநிலை மக்களுக்கான சமத்துவத்தை நிலை நாட்டுவதிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம், ‘ஜன் அந்தோலன்‘ என்று அழைக்கப்படுகின்ற ஒரு மக்கள் இயக்கம் நிறுவப்பட்டு, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் தண்ணீர் கிடைப்பதன் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.

ஜன் அந்தோலன் இயக்கம் போன்றே, கிராம சபையில் 10-12 உறுப்பினர்களைக் கொண்டு ‘பானி சமிதி‘ என்ற அமைப்பும் இயங்கி வருகிறது. கிராம பஞ்சாயத்து மற்றும் 50 % பெண் உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு கிராமப்புறங்களில் நீர் வழங்குவதற்கான முறைகளைத் திட்டமிடுதல், நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளை செய்கிறது.

ஜல் ஜீவன் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

  1. கிராமப்புற வீடுகள் முழுவதும் சுத்தமான தண்ணீர் வழங்குவதற்கான உத்திரவாதத்தை அளித்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
  2. 2024-ஆம் ஆண்டிற்குள் தனிநபர் குழாய் இணைப்புகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் விநியோகம்.
  3. செயல்பாட்டு வீட்டு குழாய் இணைப்புகள் (FHTC) மூலம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்குதல்.
  4. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பணியை செயல்படுத்துவதற்கான நிதி திட்டமிடலில் உதவுதல்.
  5. கழிவுநீர் மேலாண்மை (Grey water management), நிலத்தடிநீரை அதிகரித்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற உள்ளூர்க் கட்டமைப்புகளை திறம்பட செயல்படுத்துதல்
  6. அனைத்து வீடுகள் தவிர கிராம பஞ்சாயத்து கட்டிடங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களுக்கும் நீண்டகால அடிப்படையில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்தல்

ஜல் ஜீவன் திட்டம் (நகர்ப்புறம்) என்றால் என்ன?

2021-22 பட்ஜெட்டில்வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் அனைத்து நகரங்களில் உள்ள வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீர் விநியோகத்தை வழங்குவதற்காகஜல் ஜீவன் திட்டம் (நகர்ப்புறம்)‘ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது

ஜல் ஜீவன் திட்டம் (நகர்ப்புறம்) நோக்கங்கள்:

  • குழாய் நீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பாதுகாத்தல்
  • நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்தல்
  • வட்ட நீர் பொருளாதாரத்தை (circular water economy) உருவாக்குதல்.

நிதி ஒதுக்கீடு:

யூனியன் பிரதேசங்கள், ஒன்றிய அரசிடமிருந்து இந்த திட்டத்திற்கான முழு நிதியையும் (100 %) பெறுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள் (NorthEastern States) மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள் (Himalayan States) இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசிடமிருந்து 90% நிதியையும், மாநில அரசிடமிருந்து 10% நிதியையும் பெறுகின்றன. இவை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் 50:50 என்ற விகிதங்கள் அடிப்படையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிதிகளைப் பெறுகின்றன.

ஜல்ஜீவன் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

வயிற்றுப்போக்கு இறப்புகளைத் தடுக்கிறது:

இந்த திட்டத்தின் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் சுமார் 4 இலட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

ஜல்ஜீவன் திட்டம் குறித்த DALYs அளவீடு:

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14 மில்லியன் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுக்க முடிகிறது. மேலும் தண்ணீர் சேகரிப்பதற்காக பெண்களால் செலவிடப்படும் 101 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணமும், ஒரு நாளைக்கு மட்டும் 66.6 மில்லியன் மணிநேரங்களும் இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கப்படுவதாக இது கணக்கிட்டுள்ளது.

திட்டத்தின் சவால்கள்:

கொரோனா பெருந்தொற்று:

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக குழாய்கள் போன்ற அத்தியாவசிய கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் கூடுதல் தாமதம் ஏற்பட்டதால் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

சான்றிதழ் மற்றும் இணைப்பு வழங்குதல்:

உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் குழாய் இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சான்றிதழ் மற்றும் முழுமையான கிராம இணைப்புகள் வழங்குவதில் அங்கு தேக்கநிலையே காணப்படுகின்றன. மேலும் பெரும்பாலான கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் முழுமையான இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. மாறாக, இந்த கிராமங்களில் பாதி அல்லது பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மட்டுமே இணைப்புகள் கிடைத்துள்ளன.

நீர் மாசுபாடு:

மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் மாசுபடுவது இன்றும் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமம் உள்ளது. மேலும் பல மாநிலங்களில் நல்ல தரத்துடன் தொட்டிகள் மற்றும் நீர் இணைப்புகள் கட்டுவதற்கு தேவையான திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையும் உள்ளது.

செயல்படுத்துவதில் தாமதம்:

கூட்டு ஒப்பந்தங்களின் கீழ் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கும் பணி சில பகுதிகளில் இன்னும் தொடங்கப்படாததால், இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 1.75 மில்லியன் வீடுகள் இன்னும் இணைப்புக்கான வேலையைத் தொடங்கவில்லை. இது இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய இலக்கு வைக்கப்பட்டுள்ள மொத்தக் குடும்பங்களான சுமார் 19.2 மில்லியன் குடும்பங்களில் 5% ஆகும்.

ஜல்ஜீவன் திட்டத்தின் செயல்திறன்:

2019-ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட இணைப்புகளான 3.2 கோடியிலிருந்து (16.6%) தற்போது சுமார் 12.3 கோடி (62%) கிராமப்புற குடும்பங்கள் குழாய் நீர் இணைப்புகளைக் கொண்டுள்ளன.

இவற்றில் குஜராத், தெலுங்கானா, கோவா, ஹரியானா, பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசங்களான  அந்தமான் & நிக்கோபார் தீவுகள், டாமன் டையூ & தாத்ரா நகர் ஹவேலி மற்றும் புதுச்சேரி ஆகியவை 100% இணைப்புகளைப் பெற்றுள்ளன. இதற்கடுத்ததாக இமாச்சலப் பிரதேசம் 98.87 சதவீதங்களுடனும், அதைத் தொடர்ந்து பீகார் 96.30 சதவீதங்களுடனும் குடிநீர் குழாய் இணைப்புகளைப் பெற்றுள்ளன.

ஆதாரங்கள்:

https://jaljeevanmission.gov.in

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694420

https://jalshakti-dowr.gov.in/

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader