தப்லீக் ஜமாத் சென்ற நோயாளிகள் குறித்து தவறான தகவல் பகிர்ந்த எம்பிக்கள்!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து செல்கிறது. டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தப்லீக் ஜமாத் மாநாட்டில் இருந்து வந்தவர்களில் தனிமைப்படுத்தி உள்ளவர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்வது மற்றும் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இரு எம்பிக்கள் கூறிய தகவல்கள் உண்மை இல்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெலகாவி :
கர்நாடகாவின் பாஜக எம்பி ஷோபா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்கு பெலகாவியில் இருந்து கலந்து கொண்ட 70 பேரில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு முடிவுகள் இன்னும் வரவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள தப்லீக் அங்கத்தினர் சுகாதார பணியாளர்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள், எல்லா இடங்களிலும் துப்புகிறார்கள், ஆடுகிறார்கள் ” என ஓர் வீடியோ உடன் பதிவிட்டு இருந்தார்.
70 people from Belagavi attended #NizamuddinMarkaj, among thm 8 tested +ve, rest of the results yet to come.
In #Quarantine wards #Tablighis are misbehaving with our #HealthcareHeroes, dancing &spitting everywhere.
Nation wants to know the intentions of #TablighiJamaat!! pic.twitter.com/07GojoiycM
— Shobha Karandlaje (@ShobhaBJP) April 6, 2020
மேற்காணும் வீடியோவில், வார்டில் இருக்கும் ஒருத்தர் கைகளை அசைத்துக் கொண்டே செல்வதும், அவர்களை நலம் விசாரிக்க வந்தவர்கள் ஜன்னலுக்கு வெளியே இருப்பதும் பதிவாகி இருக்கிறது. எம்பி-யின் இக்கருத்து சமூக வலைதளங்களில், மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், பாஜக எம்பி ஷோபா உடைய கூற்றை பெலகாவி துணை ஆணையர் எஸ்பி பொம்மனஹள்ளி மறுத்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் மக்கள் சுகாதார பணியாளர்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், கண்ட இடங்களில் துப்பவோ இல்லை என கூறியுள்ளார். தப்லீக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்களில் 33 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர், அதில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட மூன்று பேருமே தனி வார்டில் உள்ளதாக பெலகாவி மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குனர் தெரிவித்து உள்ளதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ராய்ப்பூர் :
ராய்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த தப்லீக் ஜாமத்துடன் தொடர்புடைய இளைஞர் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், கண்ட இடத்தில் எச்சில் துப்புவதாகவும் ராய்பூர் எம்பி சுனில் சோனி உள்பட பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
ஆனால், ராய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ஏப்ரல் 6-ம் தேதி வெளியான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. மேலும் , இந்த வதந்தி செய்தி பிராந்திய தொலைக்காட்சி செய்திகளில் வெளியாகி பின்னர் போலிச் செய்தி என தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ANI தவறான தகவல் :
உத்தரப் பிரதேசத்தின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், ” நொய்டாவில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் உடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தி உள்ளதாக செய்தி வெளியாகியது. அது தவறானது என நொய்டாவின் டிசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாங்கள் தப்லீக் ஜமாத் என எங்கும் குறிப்பிடவில்லை, நீங்கள் தவறான செய்திகளை வெளியிடுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் திருத்தப்பட்ட செய்தி என ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது.
Correction- Those in Sector 5 Harola, Noida, who came in contact with #COVID19 positive case* have been quarantined: Sankalp Sharma, Gautam Budh Nagar (DCP) pic.twitter.com/R5m5NLEoze
— ANI UP (@ANINewsUP) April 8, 2020
ஏப்ரல் 2-ம் தேதி வெளியான செய்திகளில், ” காஸியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மருத்துவமனையில் இருந்த சுகாதார பணியாளர்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், பணிகளுக்கு இடையூறான செயல்களை செய்வதாக காவல்துறைக்கு புகார் கடிதம் எழுதியதாக வெளியாகியது.
அதைத் தொடர்ந்தே பல இடங்களில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்றவர்கள் மருத்துவமனையில் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதாகவும், மருத்துவ பணியாளர்களிடம் தவறாக நடந்து கொள்வதாக தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Links :
Raipur AIIMS denies ‘spitting, misbehaviour’ by Tablighi Jamaat patient
Shobha Karandlaje trolled for tweeting fake news