ஜாமியா மாணவர்கள் கற்களுடன் நூலகத்தில் நுழைந்ததாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்.

கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழத்தின் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களின் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் இந்திய அளவில் வைரலாகியது. இதனால் டெல்லி காவல்துறை மீது கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி போலீஸ் நூலகத்திற்குள் புகுந்து மாணவர்களை மீது தடியடி நடத்தியதை நியாயப்படுத்தும் விதத்தில் மற்றொரு வீடியோ வைரல் செய்யப்பட்டது. கல்லூரியின் படிக்கும் அறைக்குள் கூட்டமாய் வரும் மாணவர்கள் கையில் கற்களுடன் நுழைந்து இருப்பதாக மற்றொரு சிசிடிவி காட்சியானது ஊடகங்கள் முதல் வலதுசாரி ஆதரவு இணையதளங்கள் வரை வெளியாகி இருக்கிறது. கற்களை ஏறிந்து விட்டு படிப்பது போல் நடித்தால் காவல்துறை அடிக்காமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியுடன் சிசிடிவி காட்சி வைரலாகியது.
குறிப்பாக, போலிச் செய்திகளை அதிகம் வெளியிடும் போஸ்ட்கார்டு வெளியிட்ட வீடியோவில் அவர்கள் பார்க்க விரும்புவது இதுவே, இதுவல்ல எனக் குறிப்பிட்டு போலீசார் மாணவர்களை தாக்கும் வீடியோவையும், மாணவர்கள் அறைக்குள் நுழையும் வீடியோவையும் இணைத்து பதிவிட்டு இருந்தது. அந்த வீடியோ மோடி ஆதரவு முகநூல் பக்கங்களிலும் பகிரப்பட்டு உள்ளது.
செய்தி ஊடகங்கள் மற்றும் வலதுசாரி ஆதரவு இணையதளங்கள் குறிப்பிட்ட ஒரு மாணவரை காண்பித்து அவரின் இரு கையிலும் கற்கள் இருப்பதாக கூறி உள்ளார்கள். இதை ஆராய்ந்து பார்க்கும் விதத்தில் ” Delhi Police Releases Full CCTV Footage, Shows Students Enter Jamia Library With Stones ” என்ற தலைப்பில் True scoop யூடியூப் சேனலில் வெளியான முழு வீடியோவையும் ஒவ்வொரு காட்சியாக பார்த்தோம்.
அதில், பொறுமையாக ஒவ்வொரு காட்சியாக நகர்த்தப்பட்டு 4.40 நிமிடத்தில் மாணவரின் கையில் இருப்பது என்ன என்பதை புகைப்படமாக எடுத்து பார்த்தோம். அந்த மாணவரின் ஒரு கையில் பர்ஸ் மற்றும் மற்றொரு கையில் செல்போன் போன்ற தட்டையான பொருள் இருப்பதை பார்க்க முடிந்தது.
வீடியோவில் அந்த மாணவர் வலது கையில் பர்ஸ் மற்றும் இடது கையில் செல்போன் போன்ற பொருளுடன் நுழைவதை பார்க்கலாம். அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மாணவரின் கையில் பிரௌன் கலரில் பர்ஸ் இருப்பதை தெளிவாய் காண முடிகிறது.
உண்மை என்னவென்று அறியாமல் ஜாமியா மாணவர்கள் கையில் கற்களுடன் நூலக அறைக்குள் நுழைவதாக தவறான சிசிடிவி காட்சிகள் செய்தி ஊடகங்களில் கூட வெளியாகி உள்ளது. கற்களை ஏறிபவர்கள் நூலகத்திற்குள் தஞ்சம் அடைந்ததாக காண்பிக்கப்படும் வீடியோவில் மாணவரின் கையில் இருப்பது பர்ஸ் மற்றும் செல்போன் போன்ற தட்டையான பொருளே என்பதை வீடியோவில் காண முடிந்தது. இதற்காகவே நூலகத்தில் இருந்த மாணவர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தியதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது என்பது தெளிவாகிறது.
Links :
Students seen carrying stones in fresh video of Jamia Library