காஷ்மீரில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பயங்கரவாதி பாஜக நிர்வாகி என வெளியான தகவல்.. பாஜக கூறுவதென்ன ?

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க உதவும் மக்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ரியாசி மாவட்டத்தில் உள்ள துக்சன் கிராம மக்கள் லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கிராம மக்களால் பிடிக்கப்பட்ட புல்வாமைச் சேர்ந்த பைசல் அகமது தார் மற்றும் ராஜோரியைச் சேர்ந்த தாலிப் ஹுசைன் ஷா ஆகிய இரு பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
” ராஜோரி மாவட்டத்தில் வசிக்கும் லக்சர்-இ-தொய்பா தாலிப் ஹுசைன் சமீபத்தில் அந்த மாவட்டத்தில் நடந்த IED குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர் மற்றும் பைசல் அகமது தார் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்ட பயங்கரவாதி ” என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்து உள்ளது.
கைது செய்யப்பட்ட தாலிப் ஹுசைன் ஜம்மு காஷ்மீரின் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா உடன் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் அக்கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.
மேலும், மே 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாஜக கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஷேக் பஷீர், ஜம்மு மாகாணத்தின் பாஜக சிறுபான்மை பிரிவின் புதிய தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதள நிர்வாகியாக தாலிப் ஹுசைனை நியமித்த கடிதம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பாஜக கூறுவதென்ன ?
பயங்கரவாதி தாலிப் ஹுசைன் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தாலிப் ஹுசைன் கட்சியில் இல்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
தாலிப் ஹுசைன் பற்றி பஷீர் கூறுகையில், ” தாலிப் தனது ராஜினாமாவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாவே என்னிடம் வழங்கினார். தற்போது கட்சிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை ” என தி பிரண்ட் இணையதளத்திற்கு அளித்த தகவலின் மூலம் பரவும் கடிதத்தின் நம்பகத்தன்மை தெளிவாகிறது.
” பாஜகவில் ஜம்மு மாகாணத்தின் சிறுபான்மைப் பிரிவின் ஐ.டி விங் நிர்வாகியாக மே 9-ம் தேதி நியமிக்கப்பட்ட தாலிப் ஹுசைன் மே 27-ம் தேதி ராஜினாமா செய்து விட்டார். ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கையால் உறுப்பினர்களின் குற்றப் பின்னணி அறிய முடியாமல் போவதாக ” பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஜம்மு காஷ்மீரின் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, ” ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் விரிவாக்கத்தால் விரக்தியடைந்த பயங்கரவாத அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக தன்னை பலமுறை மிரட்டி வருவதாகவும், பாஜகவில் தங்கள் செயல்பாட்டாளர்களை விதைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் ” தெரிவித்து உள்ளார்.
இதற்கு கடுமையாக பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர், ” ஒரு கட்சியின் நிர்வாகி நேரடியாக பயங்கரவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடப்பது இதுவே முதல்முறையாகும். முக்கியமான கட்சிப் பதவிகளில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து பாஜக நாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும். இது மிகவும் தீவிரமான விசயம் மற்றும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ” எனத் தெரிவித்து உள்ளார்.
ஏற்கெனவே, உதய்பூர் தையல் தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாஜகவில் இணைய முயற்சித்ததாக வெளியான புகைப்படங்களால் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இச்சம்பவம் நாடு முழுவதும் மேலும் பரபரப்பாகியுள்ளது.