சசிகலா சதி.. ஜெ மரணம் பற்றி ஒன்றும் தெரியாது – ஆறுமுகசுவாமி ஆணையத்தில் குருமூர்த்தி !

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அப்போதிருந்த அ.தி.மு.க அரசு, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசுவாமி  விசாரணை ஆணையம் அமைத்தது. தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஆகஸ்ட் 27ம் தேதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை இன்று(18-10-2022) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரிக்கப்பட்ட சாட்சியங்களில் துக்ளக் வார இதழ் ஆசிரியர் குருமூர்த்தியும் ஒருவர். துக்ளக் இதழ் 2016 டிசம்பர் 21ம் தேதி “அ.தி.மு.க.வின் எதிர்காலம்” எனும் தலையங்கத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. கட்டுரை முழுவதும் சசிகலா குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தது. மேலும், “சசிகலா குடும்பம் ஜெயலலிதாவுக்கு எதிராக நடத்திய சதி செயலால் தான் அவர் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்” எனக் குற்றம்சாட்டியிருந்தது.

Article Link

இதனை ஜெயலலிதா சோ அவர்களிடம் கூறியிருந்ததாகவும், அதனைச் சோ தனது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “சசிகலாவின் பதவி பேராசை இப்போது வெளிப்பட்டிருக்கிறது” என விமர்சித்திருந்தது. ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான சோ அவர்களால் தொடங்கப்பட்ட துக்ளக் இதழ் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

இந்நிலையில், துக்ளக் வார இதழ் சசிகலா மீது வைத்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு அதன் ஆசிரியர் குருமூர்த்தியை 28-06-2018 அன்று ஆஜராகுமாறு 20-06-2018 அன்று ஆறுமுகசுவாமி ஆணையம் அழைப்பு விடுத்தது.

ஆனால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த “புனித யாத்திரைக்குத் தான் செல்ல இருப்பதால் விசாரணைக்கு வர இயலாது எனப் பதிலளித்து இருந்தார். 12-07-2018 அன்று தனது வாக்குமூலத்தை பிரமாண பத்திரம் மூலம் தாக்கல் செய்திருந்தார். அதில், “மறைந்த முதல்வரின் உடல்நிலை குறித்துத் தனிப்பட்ட முறையில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அவரை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை எனவும், தான் ஆணையத்தின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆணையத்தில் சசிகலாவை R1 எனக் குறிப்பிட்டிருந்தனர். துக்ளக் வார இதழ் எழுதிய கட்டுரை குறித்துச் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை ஏதும் செய்யப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

துக்ளக்கில் வந்த கட்டுரை தொடர்பாக ஆணையம் முன்பு ஆஜராக வேண்டுமெனில், தான் ஆஜராக தயார் என தனது வக்கீல் மூலம் குருமூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரை ஆஜராகுமாறு ஆணையம் வலியுறுத்தவில்லை.

“ஒரு நபர் ஆணையம் என்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் அவர்களால் எதையும் கண்டுப்பிடிக்க முடியாது” எனவும் விசாரணை ஆணையம் மீது குருமூர்த்தித் தனது விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அப்போலோ மருத்துவர்கள் மற்றும் சில சாட்சியங்களை அழைப்பது துன்புறுத்துவதாகும் என விமர்சித்திருந்தார். மேலும், ஆறுமுகசுவாமி ஆணையத்தைக் கலைக்க வேண்டும் எனக் கூறியிருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆறுமுகசுவாமி கமிஷன் என்ற தண்டக் கமிஷன்” எனும் தலையங்கத்தில் 2020 ஜூலை 1ம் தேதி துக்ளக் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், “இப்போது ஜெயலலிதா மரணம் பற்றிக் கிளப்பப்பட்ட சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்து அடங்கி விட்ட நிலையில், ஆறுமுகசுவாமி கமிஷன் என்பது, தண்டத்துக்கு இருந்து கொண்டிருக்கும் கமிஷனாகத்தான் இருந்து வருகிறது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.

Article Link

முதல்வரின் மரணத்தைக் குறித்து விசாரிக்கத் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணையத்தை கலைக்க வேண்டும் என்ற அளவுக்கு விமர்சித்த குருமூர்த்தி, விசாரணைக்காக ஆஜராகச் சொன்னபோது தான் புனித யாத்திரை செல்லப்போவதாகக் கூறி விசாரணைக்கு வர மறுத்துள்ளார். மேலும், தான் ஆணையத்தின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறி விசாரணையில் இருந்து பின் வாங்கியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குச் சசிகலா தீட்டிய சதி தான் காரணமாக இருக்கும் என்ற தொனியில் பேசியவர் , தற்போது ஆணையத்தின் விசாரணையில் “தனக்கு ஜெயலலிதா மறைவு குறித்து எதுவுமே தெரியாது” எனப் பல்டி அடித்துள்ளார்.

Please complete the required fields.
Back to top button
loader