ஜெ-வின் 2 லட்சம் காரட் வைரத்தால் மும்பை வைர மார்க்கெட் தடுமாற்றமா ?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான 2 லட்சம் காரட் வைரங்கள் மும்பை வைர மார்க்கெட்டில் விற்கப்பட்டதால் வைர விலை 30% குறைந்து மும்பை வைர மார்க்கெட் தடுமாறி வருவதாக ” தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ” வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளதாக தமிழ் நாளிதழில் வெளியாகியதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
28.2.2019-ல் ” தி டைம்ஸ் ஆஃப் இந்தியா “-வில் “தமிழகத்தில் இருந்து +11 ரக வைரங்கள் மும்பை மார்க்கெட்டில் குவிந்ததால் அதன் விலை அதிரடியாகக் குறைந்தது ” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் +11 ரக வைரங்கள் விலை குறைவு பற்றி எழுதி உள்ளனர். அதில், எழுதப்பட்டதை முழுமையாக படிக்கவும்.
வைரங்களை வெட்டுவது மற்றும் மெருகேற்றுவதில் உலகின் மிகப்பெரிய மையங்களை கொண்ட சூரத்தில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் மூலம் தயாரிக்கப்படும் +11 ரக வைரங்களின் விலை கடந்த இரண்டு நாட்களில் 30 சதவீதம் வரை குறைந்து விட்டது. அதற்கு காரணம் தமிழகத்தில் இருந்து சில வைர வியாபார தரகர்களிடம் இருந்து மும்பை தரகர்களுக்கு வந்த புதிய வைரங்களின் வருகையே.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மும்பை வைர சந்தையில் இருந்து மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் +11 ரக வைரங்களை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான காரட்கள் அளவிற்கு வாங்கியதாக மும்பை வட்டாரங்கள் கூறுகின்றன. 2016-ல் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது, தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல்வாதி சில குறிப்பிட்ட வைர வியாபாரிகள் மற்றும் நிறுவனத்திடம் இருந்து பெரிய அளவிலான வைரங்களை வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த வதந்திகளின் படி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருக்கு நெருக்கமானவர்கள் மும்பை வைர மார்க்கெட்டில் ஒரு லட்சம் காரட்டுக்கும் அதிகமான நல்ல தரம் வாய்ந்த +11 ரக வைரங்களை விற்பனை செய்த காரணத்தினால் கடந்த சில நாட்களாக வைரத்தின் விலை 30% அளவிற்கு குறைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மும்பை வைர வியாபார தரகர் கூறுகையில், அமெரிக்கா மற்றும் சீனாவில் தற்போது உள்ள பொருளாதார சூழல்களின் நிலைமைகளால் வைரச் சந்தை மிகவும் கவனத்துடன் நடைபெறும். மெருகேற்றப்பட்ட வைரத்தின் விலை குறைந்த நிலையில், தமிழகத்தில் இருந்து +11 ரக வைரங்கள் அதிகம் வந்ததால் மேலும் விலை சரிந்து 30% அளவிற்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
2016-ல் இந்த +11 ரக வைரங்கள் X மதிப்பில் வாங்கப்பட்டன, ஆனால் தற்போது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வைர உற்பத்தி மையங்கள் விலை குறைப்பின் மீதானப் போர் மற்றும் வரும் நாட்களில் வைர மார்க்கெட்டில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலை அடைந்து உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
சூரத் மகிதபுரா வைரச் சந்தையைச் சேர்ந்த தரகர் மெஹ்சி பலாலா கூறுகையில், +11 ரக வைரங்கள் ஆனது வைரச் சந்தையில் மிகவும் பிரபலமானது. இந்த வைரங்களின் உற்பத்திக்கு சூரத் பெயர் பெற்றது. இவை பெரும்பாலும் நகைகளில் பயன்படுத்தப்படும். இருப்பினும், வைரங்கள் மொத்தமாய் விற்பனைக்கு வந்தால் விலையில் சரிவை ஏற்படுத்தும் ” என்றுள்ளார்.
சூரத்தின் வைரக் கழகத்தின் தலைவரான பாபு குஜராத்தி கூறுகையில், ” நாட்டில் உள்ள செல்வந்தர்கள் பணமதிப்பிழப்பின் போது தங்களின் கருப்பு பணத்தை நீண்டகால முதலீடாக வைரத்தில் பயன்படுத்தி உள்ளனர்.பணமதிப்பிழப்பின் போது பல அரசியல்வாதிகளுக்கு வைரத் தரகர்கள் உயர்தர வைரத்தை விற்பனை செய்த நிகழ்வுகள் பல நடந்து உள்ளன. இதில், மிக முக்கிய உதாரணம், தமிழ்நாட்டின் மிகப்பெரும் அரசியவாதி 2 லட்சம் காரட்டுக்கும் அதிகமான வைரத்தை வாங்கி , தற்போது மும்பை தரகர்களால் விற்பனைக்கு வந்து உள்ளது. இதன் மூலம் உள்ளூர் சந்தையில் வைரத்தின் விலை சரிவு உண்டாகியுள்ளது ” என்றார்.
இவையே ” தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ” வெளியாகியவை. இந்த கட்டுரையில் வதந்திகள் என கூறியதை தமிழில் கூறவில்லை. வைர வியாபார தரகர்கள் தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவர் எனக் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்த செய்தியை தமிழில் வெளியிட்டது, முரசொலி நாளிதழ் மற்றும் நக்கீரன்.
2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஜெயலலிதா மருந்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இருந்து +11 ரக வைரங்கள் மும்பை வைர சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தகுந்த விசாரணை நடந்தால் மட்டுமே அரசியல் தலைவர் பற்றிய உண்மை வெளிவரும்.
Surat: Prices of +11 diamonds crash after stock from Tamil Nadu flood Mumbai market