முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி இல்லையா ?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றம் பற்றி இறுதித் தீர்ப்பில் கூறியதென்ன ?

மறைந்த முன்னாள் முதல்வரான ஜெ ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நடந்துள்ளன. இந்நிலையில், தற்போதைய பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்’ என்று கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன.

இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுவெளியில் அண்ணாமலை பேசியுள்ளார், இதனால் அதிமுகவின் 2 கோடி தொண்டர்களும் கொதித்துப் போயுள்ளனர் கூறி அவருக்கு எதிராக அதிமுக தனது கண்டன தீர்மானத்தை நேற்று (ஜூன் 06) நிறைவேற்றியுள்ளது.

ஜெயலலிதா குறித்த திடீர் சர்ச்சைக்கான காரணம் என்ன ?

அண்ணாமலை கடந்த ஜூன் 12 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், ‘1991-96 காலக்கட்டம் அதிக ஊழல் திழைத்த காலங்களில் ஒன்று என்பதை நீங்கள் ஏற்பீர்களா?‘ என்ற கேள்விக்கு,

தமிழ்நாட்டில் பல அரசுகள் ஊழலில் திழைத்தவை. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் இது முதலிடம் என்று கூட சொல்வேன்.” என்று அதில் கூறியிருந்ததைக் காண முடிந்தது.

 

சரி, அண்ணாமலையின் விமர்சனம் உண்மைதானா ? 

ஜெ.ஜெயலலிதா முதன்முதலாக முதலமைச்சராகப் பதவி வகித்த 1991 முதல்1996 வரையான ஆட்சி காலத்தில் மிகப் பெரிய விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். அதில் மிகவும் முக்கியமானது அவருடைய வளர்ப்பு மகனான சுதாகரனின் (வி.கே.சசிகலாவின் சகோதரியான வனிதாமணியின் மகன்) ஆடம்பரத் திருமணம்.

இந்நிலையில், 1991-96 வரையிலான ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அப்போதைய ஜனதாக் கட்சித் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி 1996, ஜூன் 14 அன்று ஜெயலலிதா மீது புகார் ஒன்றை அளித்தார்.

இதை தொடர்ந்து 1996-ஆம் ஆண்டில் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 12 வரையான நாட்களில் நடந்த சோதனையில் ரூ 48,80,800 மதிப்புள்ள வெள்ளி, 7040 கிராம் அளவு கொண்ட தங்க மற்றும் வைர நகைகள், ரூ 2,00,902 மதிப்புள்ள காலணிகள், ரூ 92,44,290 மதிப்புள்ள புடவைகள், ரூ 15,90,350 மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் உட்பட பல பொருட்கள் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்த முழு விவரங்களும், உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணத்தின் பக்க எண் 94-இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த சோதனைத் தொடர்பாக 1997-இல் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. மேலும் அந்தக் குற்றப்பத்திரிகையில் ரூ. 66.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2001-இல் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்ததால் நீதி விசாரணையை நியாயமாக நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று அப்போதைய திமுக பொதுச்செயலாளரான க.அன்பழகனின் கோரிக்கையை ஏற்று, இவ்விசாரணையை பெங்களூரு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றிய‌து.

பின்னர், 1996ல் இருந்து 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 27, 2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா தீர்ப்பு மூலம் ஒரு வடிவம் பெற்றது.

அவர் அளித்த 1136 பக்க தீர்ப்பில், “ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும், ஜெயலலிதாவிற்கு 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடியும் அபராதமாக விதிக்கப்படும்” என்று பக்க எண் 907-இல் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிந்தது. மேலும், இந்த தீர்ப்பை அடுத்து, ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியாவில் ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு பதவி பறிபோனது இதுவே முதல் முறை என தேசிய அளவில் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியது. பின்னர், 17 அக்டோபர் 2014 அன்று உச்ச நீதிமன்றம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜாமீன் வழங்கியது.

அதைத் தொடர்ந்து அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமிக்கப்பட்டதோடு, 2015 ஜனவரி 5 அன்று இவ்வழக்கின் விசாரணையும் தொடங்கப்பட்டது. இவ்விசாரணையின் முடிவில், 2015 மே 11 அன்று, நீதிபதி குமாரசாமி அளித்த 919 பக்க தீர்ப்பில், அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது. எனவே ஜெயலலிதா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

மேலும் அந்த தீர்ப்பின் 914 வது பக்கத்தில், “குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்களுடன், நிறுவனங்கள் மற்றும் பிற சொத்துக்களும் சேர்க்கப்பட்டு, அவரது சொத்துமதிப்பு ரூ.66,44,73,573 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் கட்டுமான செலவு (ரூ 27,79,88,945) மற்றும் திருமண செலவுகளை (ரூ 6,45,04,222) நீக்கிவிட்டால், சொத்துக்கள் மதிப்பு ரூ.37,59,02,466 ஆகவே உள்ளது, இதில் வரம்பு மீறிய சொத்துக்களின் சதவீதம் 8.12% மட்டுமே” என்று கூறி அவர்களை விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 5, 2016 அன்று உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிலதா மரணமடைந்தார். பின்னர் பிப்ரவரி 14, 2017 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் குற்றவாளிகள் தான் என்று கூறி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன்படி அவர்கள் மூவருக்கும் 4 ஆண்டுகால சிறைத் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதித்தது.

மேலும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக வெளியிட்ட ஆவணத்தில், “A1 மீதான சொத்துகள் அனைத்தும், A1 தன்னை சட்ட சிக்கலிலிருந்து காத்துக் கொள்வதற்காக, A2 முதல் A4 வரையிலான நபர்களின் பெயர்களில் மறைக்கப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிட்டுள்ளதை காண முடிந்தது. மேலும் ஆதாரங்களை ஆய்வு செய்ததில், A1 முதல் A4 வரை நான்கு பேரும் (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்) சொத்துக்குவிப்பு சதியில் ஈடுபட்டுள்ளனர் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

மேலும், டிசம்பர் 5, 2016 அன்று ஜெயலலிதா மரணமடைந்ததால் அவருக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவரும் உடனடியாக சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று கூறி தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, மெரினாவில் அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டதால், ஜெயலலிதா தொடர்பான வழக்குகள் அனைத்தும் 2019-இல் மீண்டும் பேசு பொருளாகின. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய மக்கள் கட்சியின் தலைவரான எம்.எல்.ரவி என்பவர், நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு மக்களின் வரிப்பணத்தைச் செலவுசெய்து நினைவகம் அமைப்பது தவறானது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2019 ஜனவரி 23 அன்று அவர் முறையிட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறியது. மேலும், இந்த வழக்கில் “உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவரை குற்றவாளி என்று கூற முடியாது என்றாலும், அந்த களங்கம் அவர் மீது இருக்கும்” என்றும் கூறி தீர்ப்பு வழங்கியது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட்டிருப்பார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தது உண்மை, நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான இறுதித் தீர்ப்பு வரும் முன்னே இறந்து விட்டார் .

மரணம் புனிதம் தரும் கருவியா என்ன ?

அடிக்கடி பொய், வதந்தியை பரப்பும் போது கூட இவ்வளவு விமர்சனம் அண்ணாமலை மீது வரவில்லை, ஒரு உண்மையைச் சொல்லி சிக்கிவிட்டார் .

ஆதாரங்கள்:

https://timesofindia.indiatimes.com/city/chennai/dmk-files-part-2-will-be-out-soon-tamil-nadu-bjp-president-k-annamalai/articleshow/100926923.cms?from=mdr

https://images.assettype.com/barandbench/import/2019/01/Madras-HC-Order-Jayalalithaa-Memorial-case.pdf

http://www.governancenow.com/files/Jayalalithaa%20case%20veridct%202015.pdf

https://main.sci.gov.in/jonew/judis/44563.pdf

https://www.legallyindia.com/the-bench-and-the-bar/read-the-1-136-pages-that-jailed-jayalalithaa-helped-by-358-witnesses-2-725-documents-and-list-of-1000s-of-shiny-objects-via-the-hindu-20141002-5150

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader