அழகர் உருவில் இயேசுவை வடிவமைத்ததாக வைரலாகும் புகைப்படங்கள் !

கடந்த சில ஆண்டுகளாக இந்து மத அடிப்படையில் நடைபெறும் சடங்குகள், அலங்காரங்கள் என அனைத்தையும் கிறிஸ்தவ மதத்தினர் காப்பி அடித்து வருகிறார்கள் என சமூக வலைதளங்களில் கிண்டலும், கேலியும் எழுவது வாடிக்கையாகி விட்டது.
காமாட்சி அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட விளக்குகள் போன்ற இயேசு உருவம் பொறிக்கப்பட்ட விளக்குகள், இயேசுவை முருகன், அழகர், புத்தர் உருவத்தில் மாற்றி வாழிபாடுகள் நடைபெறுவதாக சமீபத்தில் வைரலாகும் புகைப்படத்தை முகநூல் முழுவதும் அதிகம் காண முடிகிறது. குறிப்பாக, அழகர் மற்றும் இயேசுவின் கலவையாக அழகேசு என இயேசுவை அழகர் போன்று குதிரையில் வைத்து மாலைகள் அணிவித்து இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரை கள்ளழகர் உருவில் இயேசுவை அலங்கரித்து இருக்கிறார்களா , அந்த சிலை எங்கே உள்ளது என்பது குறித்து தேடி வந்தோம். அப்பொழுது, ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் குறித்து அறிந்தோம்.
ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்திருக்கும் புனித சந்தியாகப்பர் ஆலயம், அந்த தீவுகளில் வசிக்கும் மக்களின் பாதுகாவலராக போற்றப்படுகிற சந்தியாகப்பரை வழிபடும் இடமாக விளங்குகிறது. இங்கு கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்துக்கள், முஸ்லிம்கள் என மும்மதத்தினரும் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்கி இருந்து வழிபாடு செய்கிறார்கள்.
யாகப்பர் ஒரு வீரர் ஆவார். குதிரையின் மீது அமர்ந்து கையில் வாளினை வைத்து இருப்பது போன்று அமைந்திருக்கும் பழங்கால ஓவியத்தின் வடிவில் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் நிகழும் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி, திருப்பலி மற்றும் இரவில் தேர்ப்பவனி நிகழ்கிறது. அந்த திருவிழாவில் எடுக்கப்பட்ட வீடியோவையும் காணலாம்.
புனித சந்தியாகப்பர் ஆலயம் பெயரில் இயங்கும் முகநூல் பக்கத்தில் அங்கு நடைபெறும் திருவிழாவின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், தற்பொழுது அழகேசு என இயேசுவை குறிப்பிட்டு வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சிலை இருப்பதை காண முடிந்தது.
சந்தியாகப்பர் ஆலயத்தின் 476-ம் ஆண்டு விழா நினைவாக சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு உள்ளனர். இங்குள்ள கோவில் திருவிழாவின் பொழுது மும்மதத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வருகைத் தருவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டு நிகழ்ந்த புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 476-வது திருவிழா குறித்த வீடியோக்கள் உள்ளன.
முடிவு :
சமூக வலைதளங்களில் இயேசுவை அழகர் வடிவில் மாற்றியதாக கூறி வைரலாகும் படத்தில் இருப்பது இயேசு அல்ல. தங்கச்சிமடத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் உள்ள சிலை என கிடைத்த ஆதாரங்களின் மூலம் அறிந்து கொண்டு இருப்பீர்கள். எப்படி பார்த்தாலும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் தானே என கேள்விகள் வரும். ஆனால், அவர் இயேசு என்று வைரலாகிறார் என்பதே கேள்வி.
மும்மதத்தினர் கொண்டாடும் விழா என்றால் அது சமத்துவம் போற்றும் விழா. அதை மதத்தை நோக்கி கிண்டல் செய்யும் நோக்கத்துடன் தேவையற்ற வகையில் கிண்டல் செய்வது சமத்துவத்தை உடைக்கச் செய்யும் முயற்சி . ஊரில் ஆயிரம் நடக்கும் போது மதம் என்ற புள்ளியில் மட்டும் மனிதன் சிந்திக்க வேண்டுமென பலர் முயற்சிப்பது சரியா?
Proof :
santhiyappar-temple-festival-thousands-of-pilgrims-gathered
https://www.facebook.com/pg/santhiagappar/photos/?ref=page_internal