நாடார்களை இழிவு செய்தாரா ஜோதிடர் ? உண்மை என்ன ?

ஜோதிடர் ஒருவர் தனது தாத்தா காலத்தில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு இழைத்த கொடுமை பற்றி பேசியது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருவதை கண்டிருப்போம். அந்த காணொளியில் உள்ள ஒரு பகுதியை மட்டும் வெட்டி அதை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக அவர் பேசியது போல் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த காணொளியில் அவர் கூறிய மீதி விவரங்களை இந்த பதிவில் காண்போம்.
அந்த காணொளி 2018 ஆம் ஆண்டு குருபெயர்ச்சியை முன்னிட்டு அருளமுதம் பார்த்தசாரதி என்ற ஜோதிடர் சொற்பொழிவு ஆற்றியதில் இடம் பெற்றது. அதில், ராசி பலன்கள், தோஷம், ஜோதிடத்தில் திருமணத்திற்கான பந்தம் மற்றும் இதர ஜோதிட விடயங்கள் பலவற்றை பேசியுள்ளார்.
அதில், ஒரு இடத்தில் (17:25 நிமிடத்தில்) அவர் ” இப்பொழுது எல்லாம் யாரும் அடிமையாக இல்லை, அடிமையாக இல்லாததால் சூத்ரனும் இல்லை. எனது தாத்தா காலத்தில் எல்லாம் தெருவில் நாடார் சமுதாய சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் நடந்து சென்றதுக்கு எல்லாம் அந்த சிறுவனை தலைகீழாக கெட்டி வைத்து அடித்தனர் ” எனப் பேசி இருப்பார்.
ஆனால், அதை தொடர்ந்து அவர் “அந்த பாவத்திற்கு எனது தாத்தா அகால மரணம் அடைந்து விட்டார், என் அம்மாவின் சகோதரி மனநலம் பாதிக்கப்பட்டார். பாவம் யாரையும் சும்மா விடாது… சூத்திரன் என்று இங்கு யாரும் கிடையாது, இப்பொழுது எல்லாம் யாரும் அடிமையாக இல்லை, அடிமையாக இல்லாததால் சூத்ரனும் இல்லை. பணிவு இல்லாததால் சூத்திரனும் இல்லை. யாசிப்பவன் கையை ஏந்துவதால் தாழ்ந்தவன் ஆகி விட முடியாது, அவருக்கு போடுவதால் உயர்த்தவனும் இல்லை” என்று கூறுகிறார்.
50 நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த காணொளியில் அவர் பலவற்றை பற்றி பேசியுள்ளார். அதில் பலருக்கு மாற்று கருத்து இருக்கக்கூடும். ஆனால், அவர் கூறியதை முழுவதுமாக காட்டாமல் பாதியை மற்றும் வெட்டி அவர் ஒரு சமுதாயத்தை பற்றி தவறாக கூறுவது போலும் அவர் மீது வெறுப்பு விதைப்பது சரியல்ல.
Link :
திருமணத்திற்கு குரு பலனும், பொருத்தமும் அவசியமா? by Arulamudham R. Parthasarathy