This article is from Oct 06, 2020

முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் நியமனத்தை தவறாக சித்தரிக்கும் மாரிதாஸ் ரசிக பக்கம் !

Maridhas M எனும் பெயரில் இயங்கும் ரசிக முகநூல் பக்கத்தில், ” தாலியறுப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த, மோடி அரசுக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுக்கும் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள் Evangelical church trust Administrator? இது தான் இங்கே நான் காலம் காலமாகச் சொல்வது. வெளி நாடுகளிலிருந்து வரும் நிதி பல ஆயிரம் கோடி தமிழ் சினிமா முதல் நீதி துறை வரை ஊடுருவி பெரும் பிரிவினை தாக்கத்தை நடத்துகிறது என்று. இது பற்றி ஒரு ஊடகமும் விவாதம் செய்ய மறுப்பதற்குக் காரணமே குறிப்பிட்ட பணம் பத்திரிக்கைத் துறைக்கும் செல்கிறது, அரசியல்வாதிகளுக்கும் கட்சிக்கும் செல்கிறது. அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மதம் மாற்றும் கும்பல் உருவாகி வருகிறது -மாரிதாஸ் ” எனும் நிலைத்தகவல் உடன் India Evagelical Lutheran Church Trust உடைய ஏல அறிவிப்பில் ஓய்வுப் பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பெயர் இருப்பதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Facebook link | archive link 

இப்பதிவை வெளியிட்ட முகநூல் பக்கம் மாரிதாஸ் உடைய ரசிக பக்கம் என்பதையும், இங்கு பதிவாகும் கருத்துகள் ரசிகர்களுடையது என தங்கள் பக்கத்தின் விவரங்களில் குறிப்பிட்டு இருக்கின்றனர். ஓய்வுப் பெற்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தேவாலயத்தின் நிர்வாகியாக இருந்து கொண்டு மோடிக்கு எதிரான கருத்துகளை பேசுவதாகவும், மதம் மாற்றம் மற்றும் வெளிநாட்டு நிதி என எப்பொழுதும் பேசும் பேச்சை இணைத்து இருக்கிறார்கள்.

ஆனால், India Evagelical Lutheran Church உடைய நிர்வாகியாக ஹரிபரந்தாமன் அவர்களை நியமித்தது நீதிமன்றமே. பதிவில் இணைக்கப்பட்ட ஏல அறிவிப்பு அறிக்கையின் தொடக்கத்திலேயே சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் எனத் தெளிவாய் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தெரிந்தும் இப்படியொரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக ஓய்வுப் பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்புக் கொண்டு பேசிய போது, ” India Evagelical Lutheran Church சார்பில் 400-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. சர்ச்சையாக பரப்பப்படும் அறிவிப்பில் இடம்பெற்ற ஏலம் தொடர்பான பணிகள் மட்டுமின்றி அறக்கட்டளையின் நிதி, நிர்வாகம் அனைத்தும் என்னுடைய மேற்பார்வையில் நடைபெறும். அறக்கட்டளையில் எழுந்த பிரச்சனையால் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் என்னை நிர்வாகியாக நியமித்தது ”  எனத் தெரிவித்து இருந்தார். மேலும், 2018-ல் வெளியான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகல் பக்கங்களையும் நமக்கு வழங்கி இருந்தார்.

2018-ல் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், ” ஒருவருக்கொருவர் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளையும், திருச்சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருச்சபையை சீராக நடத்துவதற்கும், இந்த நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டு தேர்தல்களை நடத்துவதற்கும், முழு நிர்வாகத்தையும் திருச்சபையின் சட்டங்களின்படி கண்காணிக்க வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் India Evagelical Lutheran Church உடைய நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக கூட, 2016-ல் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் உடைய சொத்து குறித்த வழக்கு ஒன்றில் ஹரிபரந்தாமன் அவர்களை நிர்வாகியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்து இருந்தது.

ஆக, இதுபோன்று சொத்துக்களில் பிரச்சனைகள் ஏற்படும் போது நீதிமன்றமே ஓய்வுப் பெற்ற நீதிபதிகளை தலைமையாகக் கொண்டு நிர்வாகத்தை செயல்படுத்தச் சொல்லி நிர்வாகிகளை நியமிப்பது வழக்கமே. அவ்வாறான வழக்கத்தின்படி, ஹரிபரந்தாமன் அவர்களும் நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உள்ளாரே தவிர, அவர் மாற்று மதத்தினரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதற்காக இயங்குகிறார் என்கிற சித்தரிப்பு ஆனது மக்களை திசை திருப்பும் முயற்சியாகும்.

Link : 

31.07.2018: Judgement of the Hon’ble High Court of Madras

Madras HC names ex-judge Hariparanthaman as admin of MGR’s disputed properties

Please complete the required fields.




Back to top button
loader