This article is from Sep 30, 2018

தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும் !

மீப காலமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் எங்கு பார்த்தாலும் ஒருவரின் படத்தை மட்டும் வைத்து அதிகளவில் மீம்கள், கருத்துக்கள் பகிரப்படுகிறது. அவர் வேற யாரும் இல்ல கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான்.

ஜஸ்டின் இந்தியா வந்தாலும் சரி, வெளி நாட்டில் இருந்தாலும் சரி, எதுமே பன்னலனாலும் சரி அவரை பற்றி எதாவது செய்தி வந்து கொண்டே தான் இருக்கிறது. அதுவும் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் வலைத்தளங்களில் அதிகளவில் மீம்கள் போடப்படுகிறது.

தமிழ் கலாச்சாரம் மட்டுமின்றி கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தகுந்த மரியாதை மற்றும் போரில் பாதிக்கப்படும் பிற நாட்டு மக்களுக்கு குடியேற அனுமதி அளித்து பாதுகாப்பாக வாழ வழியும் செய்து வருகிறார். ஆகையால், அவரை பற்றி அடிக்கடி புகழ்ந்து மீம்கள் பதிவிடப்படுகிறது.

அதில் ஒன்றும் தவறில்லை.! ஆனால், அவ்வாறு வெளியாகும் செய்திகளில் உண்மை உள்ளதா ? அல்லது அது எப்போது நடந்தது ? என்பதை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். காரணம், ஜஸ்டின் ட்ரூடோவை நேசிக்கும் மக்கள் அதிகளவில் இருக்கும் வலைத்தளத்தில் தான் அவரை வெறுக்கும் சிலரும் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

உதாரணமாக, சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்த நேரத்தில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் பற்றி தொடர்ச்சியாக மீம்கள், செய்திகள் வெளியாகின. சிரிய அகதிகளை மீட்க விமானத்தை அனுப்பியதாகவும், சிரியா மீது போரை அறிவித்ததாகவும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில், சில விசயங்கள் உண்மையெனினும், அவை முன்பு நடந்தவையே..! பழைய செய்திகளை தற்போது நடந்ததாக கூறுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஜஸ்டினை வைத்து தமிழர்களை கிண்டல் செய்யும் விதத்தில் மீம்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன.

ஆம், சில மீம் பக்கங்களில் ஜஸ்டின் ட்ரூவேவையும், தமிழர் என்று குறிப்பிட்டு வரும் செய்திகளை கூர்ந்து கவனித்தால், அவை ஜஸ்டினை மட்டுமல்ல தமிழர் என்று பெருமை கொள்ளும் மக்களையும் கிண்டல் செய்துள்ளனர் என்பதை தெளிவாக அறியலாம்.

உதாரணமாக :  

#குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க 3 ராணுவ விமானங்களையும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி அளிக்கப்படும் என்று கனடா பிரதமர் அறிவித்துள்ளார். 

#மோடிக்கு ட்ரம்ப் நெருக்கமானவர் என்பதால், ட்ரம்புடன் கை குலுக்க மறுத்த கனடா வாழ் தமிழன் ஜஸ்டின் ட்ரூடோ. 

#50 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் கனடா பிரதமர். 

இவை போன்று பல மீம்கள் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது. அதற்கு காரணம், அதில் கூறப்படும் “ இது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி ” , “ தமிழராய் இருந்தால் ஷேர் செய்யவும் ” என்ற வார்த்தைகள் தான். இவை மக்களை முட்டாள்கள் எனக் கூறும் மீம்களில் அதிகம் இடம்பெறும்.

இதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் உடனே எழும். தமிழன் என்று கூறி பெருமை கொள்வதில் தவறில்லை. ஆனால், உண்மையான செய்தியா அல்லது கிண்டல் செய்யும் செய்தியா என்பதையே அறியாமல் ஷேர் செய்வதுதான் தவறு. தமிழர் என்று பெருமையாக சொல்வதால், இது போன்ற கிண்டல் செய்யும் பதிவுகள் கூட 30 ஆயிரம், 50 ஆயிரம் ஷேர்கள் பெறுகின்றன. அத்துடன் கருணையை உருவாக்கும் செய்திகளை இணைத்தால் அதன் ஷேர், லைக் எங்கேயோ போய்விடும்.

இது போன்ற மீம்களை போடுபவர்கள் ஒன்று தமிழர்களை கிண்டல் செய்யும் அரசியல் சார்ந்த பக்கங்கள், இன்னொன்று வதந்தியை வெளியிட்டு தங்களது பக்கத்தை பிரபலப்படுத்தும் நோக்கம் கொண்டவர்களாக இருப்பர்.

அதிகம் வைரலாகிய இந்த மீம்களில் ஷேர் செய்தவர்களில் ஒரு 120 பேரின் விவரம் மட்டும் தேடி பார்க்கையில், அவர்களில் பெரும்பாலானோர் குறைவான கல்வி தகுதி உடைய எளிய மக்களே. அவர்கள் செய்திகளை தேடி சென்று படிக்கப் போவதில்லை. ஃபேஸ்புக்கில் வரும் செய்திகளை உண்மை என்று நம்புகிற மனநிலையில் இருப்பவர்கள். ஆக, ஷேர், லைக் செய்பவர்களில் பெரும்பாலும் எளிய மக்களே உள்ளனர். இதுவே போலியான மற்றும் கிண்டல் செய்யும் பதிவுகளை வெளியிடுபவர்களின் பலம்.

படித்தவர், படிக்காதவர் ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற பதிவுகளை பிரபலப்படுத்த fake id மற்றும் fake shareபோன்றவை அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் Fake Id பற்றி தான் அனைவருக்கும் தெரியுமே, லட்சக்கணக்கில் fake id உள்ளது. அதையே இவர்கள் தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இணையத்தில் தமிழ் & தமிழர்கள் :  

மக்களை முட்டாள் ஆக்கும் போலியான செய்திகள் மற்றும் கிண்டல் செய்யும் செய்திகள் அதிகம் பகிரப்படுகிறது. அதே போல் மற்ற பதிவுகளும் லட்சக்கணக்கில் ஷேர் செய்யப்படுகிறது என்றால் இணையத்தை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்.

இந்திய அரசின் 2016-ம் ஆண்டின் தகவலின்படி, “ இந்தியாவில் 342.65 மில்லியன் மக்கள் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். இதில்,  28.01 மில்லியன் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை கொண்டு தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் அதிகளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உள்ளது “.

இந்தியாவில் இணையத்தை மொழியின் அடிப்படையில், தமிழ் மொழியில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இணையத்தில் தங்களுக்கு தேவையானவற்றை தேடுவதற்கும், இன்னும் பிற விசயங்களுக்கும் தமிழை பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். இணையத்தில் வரும் விளம்பரம் கூட தமிழில் இருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆங்கிலத்தை விடுத்து தமிழ் மொழியிலேயே இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆகையால், தமிழில் தொடங்கப்படும் இணையதளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இணையத்தில் தமிழின் பங்கு அதிகரிப்பதால் தமிழ் மொழியின் பெருமை குறித்து கருத்துக்களும் அதிகளவில் பதிவிடப்படுகிறது. இதில், தமிழையும், தமிழர்கள் என்று பெருமை கொள்பவர்களையும் கிண்டல் செய்து வரும் கருத்துக்கள் அதிகம்.

செய்தி என்னவென்று அறியாமல் தமிழ் மொழி என்றுக் கூறினால் உணர்ச்சி வசப்பட்டு பலர் செய்யும் ஷேர்களால் புரளிகளும், தமிழர்களையே கிண்டல் செய்யும் பதிவுகளும் அதிகம் வைரலாகிறது. எனவே, ஒரு செய்தியை லைக், ஷேர் செய்வதற்கு முன்பு உண்மை என்னவென்று அறிந்து செய்யவது நன்று.

போலியான செய்தியை ஷேர் செய்து தான் நீங்கள் “ தமிழன் ” என்பதை நிரூபிக்கும் அவசியம் இல்லை என்பதை உணர வேண்டும்.

Please complete the required fields.




Back to top button
loader