ஐ.நா கூட்டத்தில் பேச கைலாசா பிரதிநிதி செய்த தில்லுமுல்லு !

ஐநா சபை நடத்திய கூட்டம் ஒன்றில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதிநிதியாகப் பெண் ஒருவர் பேசியுள்ளார் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. ஐக்கிய நாடுகள் சபையில் கைலாசாவின் பிரதிநிதி பேசி இருக்கிறார் எனில், அதனை ஒரு நாடாக ஐநா அங்கீகரித்து விட்டதா என்ற கேள்வியும், சர்ச்சையும் எழுந்தது.

தமிழ்நாட்டின், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன், இந்து மத சாமியார் நித்யானந்தாவாக தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவரை, காவல்துறை கைது செய்ய இருந்த நிலையில் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தீவு ஒன்றினை வாங்கி அதற்கு ‘கைலாசா நாடு’ எனப் பெயரிட்டு, அந்நாட்டிற்கான கொடி, சின்னம், நாணயம், ரிசர்வ் வங்கி முதலியவை தொடங்கப்பட்டதாக அடுத்தடுத்த அறிவிப்புகளை நித்யானந்தா வெளியிட்டு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வந்தார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான (CESCR) குழுவின் கூட்டமொன்று ஜெனீவாவில் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி நடைபெற்றது. அதில் நித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதிநிதி என்ற முறையில் பெண் ஒருவர் (விஜயப்ரியா நித்யானந்தா) தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார்.

அதில், “கைலாசா என்பது இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு. இந்து மதத்தின் உயர்ந்த தலைவர் நித்யானந்தாவால் கைலாசா நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தின் பூர்வீக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பித்ததற்காக எங்கள் தலைவர் கடுமையான துன்புறுத்தல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாகியிருக்கிறார் ” எனப் பேசி இருக்கிறார்.

ஐநா உறுப்பு நாடுகள் : 

ஐக்கிய நாடுகள் சபையில் உலகம் முழுவதும் 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. அந்நாடுகளின் பெயர் பட்டியல் ஐநா-வின் இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘கைலாசா’ என்ற ஒரு நாட்டின் பெயர் இடம் பெறவில்லை. இதேபோல் உலக நாடுகளும் அத்தீவினை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.

ஐநா கூட்டத்தில் கலந்து கொண்டது எப்படி : 

ஐநா அங்கீகரிக்காத ஒரு நாடு எப்படி ஐநா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது?  சர்வதேச பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான உடன்படிக்கைகளைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கும் அமைப்பாக 18 நிபுணர்களைக் கொண்டு CESCR குழு செயல்படுகிறது. 

அக்குழு 2020ம் ஆண்டு முதல் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அடைந்த பிப்ரவரி 24ம் தேதியும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொள்ளப் பதிவு செய்வதற்கான இணைப்பும், அவர்களது இணையதளத்திலேயே உள்ளது. அதன்படி எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பினும் அதில் பதிவு செய்து, கூட்டத்தில் கலந்து கொண்டு பேசலாம். 

அதில் அரசு, அரசு சாரா அமைப்பு, தனியார் அமைப்பு என பல்வேறு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் பிரதிநிதியாகப் பதிவு செய்யலாம். அப்படிப் பதிவு செய்கையில் முகவரி குறிப்பிடும் இடத்தில் நாட்டின் பெயர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டியது இல்லை. நாட்டின் பெயர் குறிப்பிடும் பட்டியலிலும் கைலாசா என்ற பெயர் இல்லை. 

அப்பதிவில் கடவுச்சீட்டு எண் (Passport No.) மற்றும் கடவுச்சீட்டு எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கட்டாயம் பதிவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் கைலாசா என்னும் பெயர் இல்லை. இப்படி எதிலும் குறிப்பிடப்படாதா நாட்டின் பிரதிநிதி எப்படி ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்?

இதிலிருந்து கைலாசா சார்பாக ஐநா கூட்டத்தில் பேசிய பெண், தனது சொந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட்டுப் பதிவு செய்திருப்பார் என்பது தெரியவருகிறது. அதாவது கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டின் பெயர். ஆனால், பேசும் போது கைலாசா நாட்டின் பிரதிநிதி எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். 

நம் தேடலில், கைலாசா என்பதை ஒரு நாடாக ஐநா மற்றும் உலக நாடுகள்  அங்கீகரிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

Link :

19th Meeting, 73rd Session, Committee on Economic…

Registration

Please complete the required fields.




Back to top button