ஆதி திராவிடர் மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாக சீமான் சொன்ன பொய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்னும் திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசு வழங்கும் நிதியை மகளிர் உரிமை திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு மாற்றிப் பயன்படுத்துவதாகவும் இது குறித்து விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.  இதே தகவலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார். 

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்” என்று கூறப்பட்டிருந்தது. 

ஆனால், இத்திட்டம் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட போது ’தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போதே இது குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கியது. அதன்படி சுமார் 1.13 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் பணம் குறித்த விளக்கம் கேட்டதாக தற்போது பகிரப்படும் தேசிய பட்டியல் இனத்தினருக்கான ஆணையத்தின் கடிதத்தில் ’ஜூலை, 28. 2023’ என்கிற தேதி உள்ளது. தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அக்கடிதத்தில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப தமிழ்நாடு அரசு தரப்பிலும் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அரசின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருக்கும். அப்படி அரசின் திட்டங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும்.

இந்த முறையின்படி, பொதுத் திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பட்டியலின மக்கள் பயன்பெறுவதற்காக தனியாக நிதி ஒதுக்கப்படும். அப்படி தனியாக ஒதுக்கப்படும் நிதி அப்பிரிவு மக்களுக்கு மட்டுமே செலவிட இயலும். இந்தத் தனி ஒதுக்கீடு முறையைத் தான் ஒன்றிய அரசு உட்படப் பல மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன.

உதாரணமாக, ஒரு பொது திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகை ரூ.1000 கோடி என வைத்துக் கொள்வோம். அந்த ஒட்டுமொத்த தொகையில் ஆதிதிராவிடர்களுக்கு என ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அக்குறிப்பிட்ட தொகையின் மூலம் பயனடைபவர்கள் அப்பிரிவு மக்களாகவே இருப்பர். 

இந்து தமிழ் திசையில் வெளியான செய்தியின்படி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீடு 60,000 கோடி, மொத்த ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடருக்கானது 10,500 கோடி. பிரதம மந்திரி வீட்டு வசதி (நகர்ப்புரம்) திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீடு 25,103 கோடி, மொத்த ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடருக்கானது 4,162 கோடி. இப்படிக் குறிப்பிட்டு தனியாக நிதி ஒதுக்குவதன் மூலம் பட்டியலின மக்கள் பயனடைவதை உறுதி செய்ய முடிகிறது. 

அதேபோல் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகைக்காக 2023-24 பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் பட்டியல் இனத்தவருக்கென ரூ.1,540 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆதி திராவிடர் துணைத் திட்டங்களுக்கு 2020-21ம் நிதியாண்டில் ரூ.13,680 கோடி ஒதுக்கப்பட்டது. இது 2023-24ம் ஆண்டில் ரூ.17,076 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்கிற தகவலும் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் ஆதி திராவிடர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகையை பொது திட்டத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இத்தகைய விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் பழைய கடிதத்தையே சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

மேலும் படிக்க : தமிழ்நாடு அரசு ஒதுக்கிய ரூ7000 கோடியில் 1 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வராதா ?

இதனைத் தவிர்த்து கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பற்றியும் அது தொடர்பாகப்  பரப்பப்பட்ட போலி செய்திகள் குறித்த உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ – ஓர் முழுமையானப் பார்வை !

கூடுதல் தகவல் :

மகளிர் உரிமை தொகைத் திட்டத்திற்கு 2023-24 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் பட்டியல் சாதி துணைத் திட்டத்தின் (SCSP) ரூ.1,540 கோடியும் அடங்கும். இப்பணம் பட்டியல் சாதி மகளிருக்கு மட்டுமே உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். மற்ற மகளிருக்குப் பட்டியல் சாதி துணைத் திட்ட நிதியை பயன்படுத்த முடியாது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader