‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ – ஓர் முழுமையானப் பார்வை !
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்களின் குடும்பங்களும் இனி இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்..!

தொடக்க காலத்திலிருந்தே தாய் வழி சமூக முறையில் இருந்து வந்த நம் சமூகம், படிப்படியாக ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தந்தை வழி சமூகமாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக காலப்போக்கில் மதங்களின் பெயராலும், பழமைவாத பிற்போக்கு கருத்துகளாலும் பெண்கள் வீட்டுக்குள்ளே முடக்கப்பட்டார்கள். பெண்கள் வீடுகளில் ஆற்றும் பணிகளான குழந்தைகள் மற்றும் முதியோரை கவனித்து கொள்ளுதல், உணவு சமைத்தல், வீட்டைப் பராமரித்தல் போன்ற பணிகள் குடும்பங்களின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிதும் உதவினாலும், இன்று வரை அவை பெண்கள் செய்யும் சேவைகளாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
இந்த 21-வது நூற்றாண்டிலும் கூட உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியங்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக 2023-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் (Global Gender Gap Index) தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127-ஆவது இடத்தைப் பெற்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதிலிருந்து இந்தியாவின் நிலையை அறிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் இல்லத்தரசிகளுக்கான ஊதியம் மற்றும் உதவித்தொகை என்பது இங்கு எந்த அளவிற்கு அவசியமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
1972-லேயே பேசுபொருளான மகளிருக்கான ஊதியம் மற்றும் உதவித்தொகை திட்டம்:
2012-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா தீரத், வீட்டு வேலைகளுக்கான சம்பளத்தை மனைவிகளுக்கு கணவர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவித்தார். இருப்பினும், இந்த திட்டம் அப்போது நிறைவேற்றப்படவில்லை.
இதற்கு முன்பே, இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச அளவில் வழக்குகளும், நீண்டகால கோரிக்கைகளும் கூட முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1972-ஆம் ஆண்டு செல்மா ஜேம்ஸ் என்பவரால் International Wages for Housework Campaign (IWFHC) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்தும் இதுபோன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
1995-ல் பெய்ஜிங் நகரில் ஐக்கிய நாடுகள் சபை (United Nations) சார்பாக நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானத்திலும் இது குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் பெண்கள் வீடுகளில் ஆற்றும் பணிகள், சேவைகளாக மட்டுமே பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவசாயம் சார்ந்த வேலைகளில் பெண்களின் பங்கு மதிப்பிடப்படுவதே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த திட்டத்திற்கான விதை 1972-லேயே போடப்பட்டு 1995-இல் இது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது நிரூபணமாகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – அறிவிப்பும், பயனாளிகளின் விபரங்களும்:
இந்திய அளவில் பெண்களுக்கான வாழ்க்கைத்தரத்தையும், சமூக நீதியையும் உயர்த்துவதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆண் பெண் சமத்துவம் குறித்து பேசிய கலைஞர் கருணாநிதி, 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்பதை சட்டமாக்கினார். இதைத்தொடர்ந்து பெண்களுக்கு அனைத்து அரசுப் பணிகளிலும் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதோடு, ஆண்கள் மட்டுமே பங்கெடுத்து வந்த காவல்துறையில் 1973-ஆம் ஆண்டு முதல் பெண்களையும் பங்கெடுக்க வைத்தது என எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகைச் செய்தார்.
இதைத் தொடர்ந்து 2021-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான 2023 செப்.15-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்படும் என அறிவித்தது.
இதில், முதல் கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்தப்பட்டன. மீதமுள்ள 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் பங்கேற்காத குடும்பத் தலைவிகளுக்காக ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தற்போது அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை நடந்துள்ள முதற்கட்ட முகாமில் மட்டும் கிட்டத்தட்ட 79.66 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
நவம்பர் 2022 தரவுகளின் படி, தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் (Smart Ration Card Holders) உள்ளனர். இதில் இத்திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த ஒரு கோடி பெண்கள் பயன்பெறும் வகையில் 7,000 கோடி ரூபாய் இந்த ஆண்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகளின் விபரங்கள்:
-
-
- 2022 செப்டம்பர் 15-க்கு முன் பிறந்த 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயானாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
- 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள்.
- மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாநில, மத்திய அரசாங்க ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது.
- ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
- சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர் போன்ற கனரக வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு இது கிடையாது.
- ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்துவோர், வருமான வரிகள் செலுத்துவோர் விண்ணப்பிக்க முடியாது.
-
இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணபிக்க முடியாது என அறிவித்திருந்த நிலையில், இனி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தின் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 12 அன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் இது தவிர இந்த திட்டத்தில் இணைவதற்கு தேவையான விவரங்களை, கீழே உள்ள படிவத்தின் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு கிட்டத்தட்ட 34,350 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் உதவி மையமும் (சந்தேகங்களுக்கு சென்னை மாநகராட்சியின் 044-25619208, 9445477205, 1913 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயனாளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மனுதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அது தொடர்பான சந்தேகங்களுக்கு பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம். இதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு நடத்துவார். அந்த நேரத்தில் மட்டும் அதிகாரிகள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு நடத்துவர். இதுதவிர விண்ணப்பித்த அனைவரின் வீடுகளுக்கும் கள ஆய்வு நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு ஒதுக்கிய ரூ7000 கோடியில் 1 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வராதா ?
1972-ல் இருந்தே மகளிருக்கு ஊதியம் அல்லது ஊக்கத்தொகை வழங்குவது பற்றி பல்வேறு அமைப்புகள் பேசி வந்தாலும், யாரும் இதுவரை இதற்கு செயல் வடிவம் கொடுக்கவில்லை. அதை தற்போது தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. இதன் நிறை குறைகள் குறித்து இனிவருங்காலங்களில் தொடர்ந்து விவாதிப்போம்..!!