“கலாம்” பெயரை மாற்றி போட்டால் என் பெயர் கூட வரும்-கமல்ஹாசன்

மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பெயரை திருப்பி போட்டால் என் பெயர் வரும் என கமல் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி பல ஊடகங்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
அப்துல் கலாமிடம் அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்த பொன்ராஜ் அவர்கள் நேற்று கமல் முன்னிலையில் தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்து கொண்டார். அப்போது பேசிய கமல் ” கலாம் அவர்களின் பெயரில் தனது பெயரும் ஒட்டி கொண்டு இருப்பது தனக்கு பெருமைதான். கலாம் என்ற பெயரை மாற்றி போட்டால் எனது பெயர் கூட வரும்” என்று கூறினார். கீழ்காணும் காணொளியில் 4.50-ம் நிமிடம் அவர் கூறுவதை காணலாம்.
ஆனால், கலாம் பெயரை மாற்றி போட்டால் என் பெயர் வரும் எனக் கூறியதை பல செய்தி ஊடகங்களில் திருப்பி போட்டால் என்று கூறியதால் அது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. அதை வைத்து பல ட்ரோல் மீம்கள் வெளியாகின.
இந்நிலையில், YouTurn ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் அவர்களும் கூட கிண்டலாக ஒரு பதிவை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் உண்மை நிலை அறிந்த பின் அதை திருத்திக்கொண்டார்.