This article is from Nov 10, 2020

கமலா ஹாரிஸ் மடிசார் கட்டியதாக, மாட்டுக்கறி உண்பதாக வைரலாகும் தவறான புகைப்படங்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கியதில் இருந்தே துணை அதிபராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் குறித்த செய்திகளே தமிழக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் முக்கிய இடம் பிடித்தன. அதற்கு காரணம், கமலா ஹாரிஸ் தாயின் பூர்வீகம் தமிழகம் என்பதே. அவர் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிறகும் செய்திகளில் அவரின் பெயர் அனல் பறந்தன.

அதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படங்களை வைத்து மத, சாதி, அரசியல் சார்ந்த பதிவுகளும், ட்ரோல்களும் உருவாகி இருக்கிறது. கமலா ஹாரிஸ் தாய் வழி உறவுகள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதைக் குறிப்பிட்டு அவர் மாட்டுக்கறி உண்பதாக புகைப்படத்தை மீம்ஸ் ஆக வைரல் செய்தனர்.

Facebook link | Archive link

ஆனால், அவர் உண்பது மாட்டுக்கறி அல்ல, பன்றிக்கறி. 2019 ஆகஸ்ட் 11-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ” Finally got my pork chop! ” என 11 நொடிகள் கொண்ட வீடியோயை பதிவிட்டு இருந்தார்.

Twitter link | Archive link 

கமலா ஹாரிஸ் மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் கொண்டவரா எனத் தெரியவில்லை. ஆனால், அந்த புகைப்படத்தில் அவர் உண்பது பன்றிக்கறியே. கமலா ஹாரிஸ் உண்ணும் உணவை வைத்து இந்தியாவில் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்து வைரல் செய்து வருகிறார்கள்.

Facebook link | Archive link  

அடுத்ததாக, கமலா ஹாரிஸ் பிராமண பெண்களை போன்று மடிசார் கட்டி இருப்பதாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கமலா ஹாரிஸ் மடிசாரில் இருப்பதாக பகிரப்பட்ட பதிவை விட அது மார்பிங் செய்யப்பட்டது என ட்ரோல் செய்யப்பட்ட பதிவுகளே அதிக அளவில் உள்ளன.

கர்னாடிக் இசை பாடகியான விஷாகா ஹரி என்பவர் மடிசாரில் இருக்கும் புகைப்படத்தில் அவரின் தலையில் கமலா ஹாரிஷ் தலையை மார்பிங் செய்து உள்ளனர். மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என அறிந்த பிறகு தற்போது கமலா ஹாரிஸ் மாமி என மார்பிங் புகைப்படத்தை கிண்டலாக வைரல் செய்து வருகிறார்கள்.

Please complete the required fields.




Back to top button
loader