
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலுள்ள களியாம்பூண்டி என்ற கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சந்திரன் – ரேவதி என்ற இணையருக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்ததும் அழாமல் “நான் வெளியே வந்து விட்டேன்” எனக் கூறியதாக ‘தந்தி டிவி’, ‘நியூஸ் தமிழ்‘ மற்றும் ‘கலாட்டா யூடியூப்’ செய்திகளைப் பதிவிட்டுள்ளன.
மேலும், அங்குள்ள செவிலியரிடம் குழந்தை என்ன சொல்லியது என ஒருவர் கேட்கும் போது, “வந்து விட்டேன்” எனச் சொல்லியதாகவும், அதனைத் தொடர்ந்தே அழ ஆரம்பித்ததாகவும் பதில் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த ஊர் மக்கள் அக்குழந்தையை வியப்பாகக் கண்டு சென்றதாகவும் அச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
பிறந்தவுடன் குழந்தை எப்படிப் பேசும் என்ற கேள்வி இயல்பிலேயே நமக்கு எழுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மருத்துவ அதிகாரி (MO – Medicle Officer) மருத்துவர் உமா தேவி அவர்களை யூடர்னிலிருந்து தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
களியாம்பூண்டி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை பேசியதாக வெளியான செய்தி குறித்து, ‘அப்படி நடக்க ஏதேனும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா’ என அவரிடம் கேட்டோம். “அது எப்படி சார் வாய்ப்பு இருக்கு? குழந்தை அழும் சத்தம் அப்படி அவர்களுக்குக் கேட்டு இருக்கலாம் என்பது எனது யூகம்” எனக் கூறினார்.
குழந்தையின் தாய் அப்படிக் கூறுவது ஒருபுறம் இருக்க, செவிலியர் எதன் அடிப்படையில் கூறினார் எனக் கேட்டோம். “ஒவ்வொருவரும் என்ன பேசினார்கள் என்பதையொட்டி அவரும் அப்படிப் பேசி இருக்கலாம். மேலும், அவர் புதிய பணியாளர். ஒரு உற்சாகத்தில் (excitement) ஊடகத்திடம் அப்படிக் கூறிவிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். இப்படி ஒரு விஷயம் பரவ தொடங்கியதும் எங்களிடம் தான் சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால், குழந்தையின் தாயுடன் இருந்த உதவியாளர் ஊர் மக்களிடம் குழந்தை பேசியதாகச் சொல்லியதையடுத்து, கிராமம் மக்கள் குழந்தையைப் பார்க்க வந்து பரபரப்பாகியது. அதனைத் தொடர்ந்தே ஊடகங்களுக்குத் தெரிய வந்து செய்தியாக வெளிவந்துள்ளது” எனப் பதிலளித்தார்.
மேலும், களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியரிடம் பேச வேண்டும் எனக் கோரினோம். அவர்களின் தனிப்பட்ட விவரத்தினை பகிர முடியாது எனக் கூறிவிட்டார்.
பிறந்த குழந்தை பேசியதாக வெளியான செய்தி குறித்து மருத்துவர் பிரவீனிடம் கேட்ட போது, “குழந்தை பிறந்ததும் அதற்கு அழ மட்டுமே தெரியும். பேசுவதற்கோ, வார்த்தையைக் கோர்வையாக உச்சரிப்பதற்கோ மூளையின் வளர்ச்சி இருக்காது. மூளை வளர்ச்சி அடைய அடைய ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்ல கற்றுக் கொள்வார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து, முதலில் ஒவ்வொரு வார்த்தையாகப் பேசுவார்கள். பிறகு இரண்டு வார்த்தைகளாகச் சேர்த்துப் பேசுவார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தை பேசுவதற்கு வாய்ப்பில்லை. அப்படிப் பேசியதாக வீடியோ காண்பித்தால் அது என்ன என்பது பற்றி ஆராய்வோம்.
குழந்தை பிறந்ததும் காதுகள் கேட்கும். ஏதேனும் சத்தம் கேட்டால் அதிர்வது, அழுவது போன்றவை மூலம் அவர்களுக்குக் காது கேட்பதை உறுதி செய்து கொள்ளலாம். இதனை ‘Startle Reflex’ என்போம். ஆனால், பேசுவதைப் புரிந்து கொள்வதற்கு நாட்கள் எடுக்கும்” என விளக்கினார்.
அரசு மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவர் பிரவீன் கூறியதிலிருந்து பிறந்த குழந்தை பேசியதாக வெளியான தகவல் அறிவியலின்படி சாத்தியம் இல்லாதது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.