இரத்தம் சொட்ட சொட்ட பணி செய்த காஞ்சிபுரம் எஸ்.பி.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் செங்கல்பட்டு அருகில் உள்ள மகேந்திராசிட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதால் லாவண்யா என்ற பெண் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்களும், அப்பெண்ணின் உறவினர்களும் நடத்திய சாலை மறியலால் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுர மாவட்ட காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் சொல்லியும் கேட்க மறுத்தனர். ஆகையால், தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க முயற்சித்த போது, அங்கிருந்த பொதுமக்கள் கற்களை கொண்டு போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்த கல்வீச்சில் காஞ்சிபுர மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹடிமணி ஐ.பி.எஸ் அவர்களின் மண்டை உடைக்கப்பட்டது. சில காவலர்களும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் மகேந்திராசிட்டி பகுதியில் பல மணி நேரங்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மீது கல்வீசியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தில் எஸ்.பி. சந்தோஷ் ஹடிமணியின் மண்டை உடைந்து இரத்தம் வடிந்த நிலையில் அருகில் இருந்த காவலர்கள் எவ்வளவோ கூறியும் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றுவதில் குறியாக இருந்துள்ளார். மண்டை உடைந்து இரத்தம் வடித்தாலும் கடமை உணர்வுடன் பணியாற்றிய எஸ்.பி ஹடிமணிக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்
எஸ்.பி சந்தோஷ் ஹடிமணி தாக்கப்பட்ட பதிவு