This article is from Mar 08, 2021

ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா பாஜகவின் 6 அமைச்சர்கள் பெற்ற இடைக்கால தடை!

கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சரான ரமேஷ் ஜார்கிஹோலி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியான இருக்கும் அந்தரங்க வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு எதிராக எழுந்த கண்டனக் குரல்கள், எதிர்க் கட்சியினரின் போர்க்கொடி என விவகாரம் பெரிதாகியதால் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தன்னிடம் 19 முக்கிய பிரமுகர்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிடுவதாகவும் அறிவித்து இருந்தார். இதனால், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட 19 பேரின் சிடிக்கள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால், தங்களைப் பற்றிய வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என கர்நாடகா அமைச்சர்கள் 6 பேர் நீதிமன்றத்தை நாடினர்.

கர்நாடகாவின் மருத்துவ உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பர், வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல், கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்.டி.சோமசேகர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நாராயண் கவுடா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பைரத்தி பசவராஜ் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

எங்களை பற்றி சில ஊடகங்கள் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆகையால், எங்களைப் பற்றிய வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவையை 68 ஊடக நிறுவனங்களும் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி இருந்தனர்.

” சமீபத்தில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி டீப் ஃபேக் செயல்முறையால், உலகளாவிய அரசியல்வாதிகளான பராக் ஒபாமா, ராணி எலிசபெத் போன்றவர்கள் வீடியோக்கள் மார்பிங் செய்யப்பட்டு வைரலாகிவிட்டன. சில இந்திய அரசியல்வாதிகள் போலவும் வீடியோக்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய செயல்முறையைப் பற்றி அறியாத அப்பாவி மக்கள் வீடியோக்களையும், அதன் உள்ளடக்கங்களையும் உண்மை என்று நம்புகிறார்கள். எனவே, போலி சி.டி.க்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் ” என மனுதாரர் சார்பில் கூறப்பட்டது.

” வாதிகள்/ விண்ணப்பதாரர்களுக்கு எதிராக சரிபார்க்கப்படாத செய்திகளை ஒளிபரப்ப அல்லது வெளியிடுவதை தடை செய்வது அவசியம் ” எனக் கூறிய மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், அடுத்த விசாரணை தேதி வரும் வரை, வாதிகள் தொடர்பான எந்தவொரு அவதூறு செய்திகளையும் ஒளிபரப்புவது, வெளியிடுவது, பரப்புதல் அல்லது சிடிக்கள் தொடர்பாக வாதிகளை குறிக்கும் காட்சிகளையும், படங்களையும் காண்பிக்க தடை செய்யப்பட்டுள்ளன ” என உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆறு அமைச்சர்களும், பதவி விலகிய அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி ஆகியோர் 2019-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பிய 17 எம்.எல்.ஏக்களில் இருந்தவர்கள். அந்தந்த கட்சிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு பாஜக கட்சி சார்பில் இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சர்களாக ஆக்கப்பட்டனர்.

ரமேஷ் ஜார்கிஹோலி அந்தரங்க வீடியோவைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உள்பட 19 முக்கிய பிரமுகர்களின் அந்தரங்க வீடியோ குறித்து  பரபரப்பு கர்நாடகா அரசியலில் தலைத்தூக்கி உள்ளது. இதுதொடர்பாக, ஊடகங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்த பாஜக அமைச்சர்கள் 6 பேரின் வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிட 68 ஊடகங்களுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Links :

ministers-order-march-6-390194

karnataka-court-bars-media-from-showing-defamatory-content-on-6-ministers

Karnataka court restrains 67 media houses from publishing defamatory content against six State Ministers on sex-for-job scandal

After colleague quits over CD, six Karnataka ministers get media gag order

Please complete the required fields.




Back to top button
loader