கச்சத்தீவு தாரை வார்ப்பு : அன்று திமுக என்ன செய்தது ?

சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி மேடையில் அமர்ந்து இருக்கும் போதே கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 1974-ல் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் போது இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு பரிசாக வழங்கியதை முதல்வர் மறந்து விட்டார். இப்போது ஏன் திடீர் விழிப்பு என கடும் விமர்சனத்தை வைத்து இருந்தார். இதையடுத்து, ஆட்சியில் இருக்கும் போது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது எதிர்க்காத திமுக தற்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என கூறுவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது ? 

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே கச்சத்தீவு தொடர்பான பிரச்சனை தொடங்கி விட்டது. 1970-களில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் நட்பும், அவருக்கு அரசியல் ரீதியாக உதவும் வகையில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் முடிவை இந்திரா காந்தி எடுத்தார்.

இதன் அடிப்டையில், 1974 ஜூன் 28-ம் தேதி இந்தியாவும் இலங்கையும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு பகுதி இலங்கை எல்லைக்கு செல்லும்படி எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது, அதேநேரத்தில் இந்தியர்களின் மீன் பிடிக்கும் உரிமையும், திருவிழாவிற்கு செல்லும் உரிமையும் பாதுக்காக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

திமுக நிலைபாடு : 

1973-ல் இந்திய அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் முடிவிற்கு வந்த போது, முதல்வர் கருணாநிதி அப்போதைய சட்ட அமைச்சர் செ.மாதவன் உடன் இந்திரா காந்தியை சந்தித்து எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். மேலும், கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது என ஆதாரங்களுடன் தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக பிரதமருக்கு அளித்து இருந்தார்.

இந்தியாவின் கடல்சார் ஒப்பந்தம் மாநில அரசின் உரிமைகளை கடுமையாக பாதித்தாலும், அரசின் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகள் குறித்து மாநில அரசுடன் மத்திய அரசு விவாதிக்கக்கூட முன்வரவில்லை என கருணாநிதி தெரிவித்தார். மேலும், ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிரதமர் இந்திரா காந்தி, வெளியுறத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது, அதை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது என வாதிட்டு இருந்தார்.

இதையெல்லாம் மீறி 1974 ஜூன் 28-ம் தேதி இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஜூன் 29-ம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. ஆகஸ்ட் 21-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவ்விவகாரம் சார்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒப்பந்தத்தின் சரத்துகளை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

1971-ல் இந்திரா காந்தியின் காங்கிரஸ் மற்றும் கருணாநிதியின் திமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றன. 1974 ஜூன் 28-ம் தேதி இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி கச்சத்தீவு இலங்கைக்கு சென்றது. 1975-ல் இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தை(எமர்ஜென்சி) இந்திரா காந்தி அறிவித்தார்.

காவிரிப் பிரச்சனை, கச்சத்தீவை தாரை வார்த்தது என இந்திரா காந்திக்கும், கருணாநிதிக்கும் இடையே ஏற்பட்ட பிளவு எமர்ஜென்சி நேரத்தில் அதிகரித்தது. இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை கருணாநிதி எதிர்த்தார். 1976 ஜனவர் 31-ம் தேதி கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வந்தது. எமர்ஜென்சி சமயத்தில் இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆர் அவர்களும் இணக்கமான இருந்தனர். எமர்ஜென்சிக்கு பிறகு 1977-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

எமர்ஜென்சி சமயத்தில் 1976 மார்ச் 23-ம் தேதி இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள சரத்தின் படி, இந்திய மீனவர்கள் மற்றும் மீனவப் படகுகளும் இலங்கையின் அனுமதியின்றி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடிக்க மாட்டார்கள் ” எனக் கூறியது.

மேலும் படிக்க : எம்.ஜி.ஆர் ஆட்சியில் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டதா ?

1974 & 1976 ஒப்பந்தங்களின் படி அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்பந்தத்தின் படி, அதிகாரப்பூர்வமாக கச்சத்தீவை மொத்தமாக வழங்கி விட்டதால் 1983-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அப்போதைய ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். ” உத்தரவு எண் : RCF 23 – 75/83.

கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுப் பொருளாக இருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில். கச்சத்தீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என ஆவேசமாகப் பேசி இருந்தார். இதற்கு கருணாநிதி தரப்பில் விளக்க அறிக்கை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ” 1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தருவதென்ற முடிவை மத்திய அரசு எடுத்தப் போது , அன்றைய தமிழகத்தில் இருந்த திமுக அரசு பெரும் எதிர்ப்பை தெரிவித்தது. அதையும் மீறி, சில காரணங்களைச் சொல்லி கச்சத்தீவு இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டது. அப்படி வழங்கப்பட்ட நேரத்திலும்கூட , கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை ,யாத்திரை செல்கின்ற உரிமை, மீன்பிடி வலைகளைக் காய வைப்பதற்கான உரிமை எல்லாம் மீனவ மக்களுக்கு உண்டு என்கிற சரத்து அதில் சேர்க்கப்பட வேண்டும் என திமுக வலியுறுத்தியதின் பேரில் அந்த சரத்து சேர்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு வந்த நெருக்கடி நிலை காலத்தில் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், அந்த சரத்துகள் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பறி போய்விட்டன. ஆனால், அதற்காக நமது எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்திருக்கிறோமா ?
1974-ம் ஆண்டு திமுக ஆட்சியிலே இருந்தபோதே கழக பொதுக்குழுவில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்து அந்த தீவின் மீது இந்திய அரசுக்கு உரிமை இருக்குமாறு ஒப்பந்தத்தை திருத்த வழிவகை காண வேண்டுமென்று, பிரதமர் இந்திரா காந்தியை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றியதுடன், 14.7.1974 அன்று தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் ” கச்சத்தீவு ஒப்பந்த கண்டன நாள் ” நடத்தப்பட்டது.
கச்சத்தீவு ஒப்பந்தம் கூடாதென்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் பல்வேறு ஆதாரங்களுடன் முதல்வர் என்ற முறையில் 6.1.1974 அன்று பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினேன் ” எனத் தெரிவித்து இருந்தார்.
.
தற்போது பிரதமர் நரேந்திர மோடியை மேடையில் வைத்துக் கொண்டே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க சரியான நேரம், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசியதால் மீண்டும் தமிழக அரசியலில் கச்சத்தீவு விவகாரம் தலையெடுத்து உள்ளது. இந்நிலையில், இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ” தமிழக முதல்வரின் கருத்து சாத்தியமற்றது. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் ஒரு இணக்கப்பாடு செய்யப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
links : 
Please complete the required fields.
Back to top button
loader