கதுவா சிறுமி பாலியல் கொலை வழக்கில் வதந்திகள் ஓர் அலசல் !

2018 ஜனவரியில் ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் கொடூரமாக கூட்டு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியை பற்றி நாடே அறிந்து இருக்கும். ஓராண்டு ஆகியும் சிறுமியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என ஆங்காங்கே பேசப்படுவதுண்டு. இன்று, பதன்கோட் நீதிமன்றத்தில் கதுவா சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கதுவா சிறுமி கொலை வழக்கில் கூறப்பட்ட வதந்திகள், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் உள்ளிட்ட செய்திகளின் தொகுப்பை மொத்தமாக இக்கட்டுரையில் காண்போம்.
வன்கொடுமை நடக்கவில்லை :
சிறுமியின் பிரேதப் பரிசோதனை முதல் அறிக்கையில் குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பதாகவே குறிப்பிட்டு உள்ளதாகவும், பாலியல் வன்புணர்வு செய்யவில்லை எனக் குறிப்பிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரத் துவங்கின.
ஆனால், சிறுமியின் உடல் கிடைத்த ஜனவரி 17-ம் தேதி 2:30pm அளவில் மாவட்ட மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. சிறுமியை கொலை செய்வதற்கு முன்பாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து இருந்தனர்.
விரிவாக படிக்க : கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லையா ?
கோவில் சர்ச்சை :
சிறுமி அப்பகுதியில் இருந்த கோவிலில் அடைத்து வைக்கப்பட்டது என்ற செய்திக்கு எதிராக கதவே இல்லாத கோவிலில் எவ்வாறு ஒரு சிறுமியை 7 நாட்கள் அடைத்து வைக்க முடியும் என்ற கேள்வியை ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். வலதுசாரி ஆதரவாளர்களும் இதே நிலைப்பாட்டை கொண்டிருந்தனர்.
ராசனா பகுதியில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள காளி வீர் மந்திர் என்ற கோவிலில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. பாபா காளி வீர் கடவுளுக்காக கட்டப்பட்ட அக்கோவிலில் மூன்று கதவுகளும், அதற்கென மூன்று பூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான சாவிகள் மூன்று கிராமத்திற்கும் ஆளுக்கு ஒன்றாக உள்ளது. இதில், ஒரு சாவி கோவிலின் பாதுகாவலரும், சிறுமி வழக்கில் முக்கிய குற்றவாளியுமான சஞ்சி ராமிடன் இருந்துள்ளது.
கோவிலின் தேவஸ்தானத்தில் இருந்த மேசைக்கு அடிப்பகுதியில் மயக்கமடைந்த நிலையில் சிறுமியை துணியில் சுற்றி மறைத்து வைத்ததாக காவல்துறை தெரிவித்து இருந்தனர்.
விரிவாக படிக்க : சிறுமி ஆஷிஃபா வன்புணர்வு கொலை சம்பவத்தில் வதந்திகளும், உண்மைகளும்…
சிறுமியின் தந்தை :
சிறுமியின் தந்தை என்று கூறி ஒருவர் பேசும் வீடியோ பதிவு youtube உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் அதிகம் வைரல் ஆகி இருந்தது. அதில், பிஜேபி கட்சிக்கு பிரச்சாரம் செய்வது போன்று உளறுகின்றார் என்று பலரும் கூறி இருந்தனர்.
சிறுமியின் தந்தை முகமது யூசப் புஜ்வாலா என்று ஒருவரை போலியாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் போலியான தகவல்கள் மூலம் மக்களின் எண்ணத்தை மாற்ற முயல்கின்றனர் என கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.
ஆஷிஃபா சிறுமியை கொன்றது முஸ்லீம் இளைஞன்:
கதுவா பகுதியில் இறந்தது அப்பாவி சிறுமி தான். ஆனால், அச்சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றது இஸ்லாமிய பயங்கரவாதி, பழி யார் மீது? ஆர்.எஸ்.எஸ் அமைப்பை களங்கப்படுத்தவே இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புகின்றனர் என்ற ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆகியது. ஆனால், அதில் காட்டபட்டவரின் புகைப்படம் காஷ்மீரில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் தொடர்பானது என்பதே உண்மை.
விரிவாக படிக்க : சிறுமிகளின் வன்கொடுமை சம்பவங்கள்: பிரதமரின் கருத்தும், வதந்தியும்..!
கதுவா சிறுமி வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஒரு மாதத்தில் காஷ்மீரின் பஜல்டா பகுதியில் மட்ராசா இடத்தில் 7 வயது நாடோடி இனச் சிறுமியை பலாத்காரம் செய்த moulvi Shahnawaz என்ற முஸ்லீம் மதக்குரு கைது செய்யப்பட்டார். ஆனால், அதனை கதுவா சிறுமி சம்பவத்துடன் இணைத்து தவறான செய்தியை பரப்பினர்.
குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டம் :
ஹிந்து ஏக்தா மன்ச் என்ற ஹிந்து அமைப்பு குற்றவாளிகளில் ஒருவரான சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜுரியாவை விடுதலை செய்யவும், வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி குற்றவாளிக்கு ஆதரவாக பேரணியை நடத்தி இருந்தனர்.
அதில், காஷ்மீரின் பாஜக அமைச்சர்கள் சுந்தர் பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் ஆகியோர் கலந்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையையும், கண்டனங்களையும் பெற்றது. அந்நேரத்தில், “ கட்சியின் தலைமையின் கட்டளை பெயரில் நாங்கள் பேரணிக்கு சென்றோம். ஜம்மு-காஷ்மீரின் பாஜக தலைவர் சாட் ஷர்மா எங்களை அங்கு அனுப்பினார் ” என்று சுந்தர் பிரகாஷ் கங்கா தெரிவித்து இருந்தார்.
விரிவாக படிக்க : குற்றவாளிக்கு ஆதரவான பேரணிக்கு அமைச்சர்களை அனுப்பிய பாஜக தலைமை ?
கதுவா சிறுமி வழக்கில் அதிக அளவில் வைரல் செய்யப்பட்ட வதந்திகள் குறித்தும், அதற்கு பின்னால் இருந்த அரசியல் குறித்தும் இக்கட்டுரையில் கண்டு இருப்பீர்கள். இன்று வெளியாக உள்ள தீர்ப்பில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே நாடு முழுவதிலும் உள்ள எதிர்பார்ப்பாகும்.