காட்டுப்பள்ளியில் மீன்பிடி தடைக்கேட்டு மத்திய அரசுக்கு அதானி கடிதம் – ஆர்.டி.ஐ தகவல்

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கத்தை கைவிடக்கோரி அங்குள்ள மீனவர்கள் போராடி வருகின்ற நிலையில் காட்டுப்பள்ளியை, ” மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அதானி நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது ” தெரிய வந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் பிரைவேட் லிமிடெட் இணைந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 330 ஏக்கரை லார்சன் மற்றும் டூப்ரோவிடம் (L&T) இருந்து வாங்கி அதானி காட்டுப்பள்ளி போர்ட் பிரைவேட் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது. விரைவில் ரூ.53,031 கோடி செலவில் அதானி குழும நிறுவனம் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை துவக்கியது. இதன்படி 331 ஏக்கரில் உள்ள துறைமுகம் 6,111 ஏக்கராக விரிவாக்கம் செய்யப்போவதாக அதானி நிறுவனம் அறிவித்தது. அதில் 2000 ஏக்கர் மீன்வளம் உள்ள கடல் பகுதி நிலமாக மாற்றப்படும் .
இந்நிலையில் காட்டுப்பள்ளியில் உள்ள தனது துறைமுகத்தை சுற்றியுள்ள நீரை “மீன்பிடி இல்லாத பகுதி” என்று அறிவிக்குமாறு அதானி குழுமம் தேசிய ஹைட்ரோகிராபிக் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் “கப்பல்களுக்கு கடுமையான பாதுகாப்பு அபாயத்தை” ஏற்படுத்துவதாக வாதிட்ட அதானி நிறுவனம், துறைமுகத்திற்கு அருகே மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் 2019 ல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி தற்போது உள்ள 331 ஏக்கர் துறைமுகத்தில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக கடிதத்தில் கோரப்பட்ட பகுதி சுமார் 7.7 சதுர கி.மீ. இது சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் நிலப்பரப்பைக் காட்டிலும் 112 மடங்கு பெரிய பகுதி. துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் தடை கோரப்பட்ட பகுதி 50 சதுர கி.மீ ஆகும்.
Adani wants Govt 2 Declare "No Fishing Zone" Arnd Kattupalli Port. For current small port, NFZ reqstd is 112 times the size of cricket stadium. Imagine expanse of sea that'll be banned 4 fishers if Port expands!!! #StopAdaniSavePulicat @ksivasenapathy @vennithayus @CMOTamilNadu pic.twitter.com/vXu7sk6ZSU
— NityanandJayaraman (@NityJayaraman) March 13, 2021
தகவல் அறியும் உரிமையின் படி தமிழக கடல் வாரியத்திடம் கடந்த மார்ச் 9, 2021ல் சரவணன் எனும் சென்னையை சேர்ந்த மீனவர் இக்கடிதத்தை பெற்றிருக்கிறார்.
இந்த விரிவாக்கத்தால் கடுமையான சூழலியல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படும் எனக் கூறி சென்னையில் உள்ள மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இத்திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
காட்டுப்பள்ளி குப்பத்தில் உள்ள மீனவர்கள் பஞ்சாயத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்கள் வாழ்வாதாரத்தை சிதைப்பதாகவும , இந்த விவகாரம் குறித்து பேச முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதானியின் மனம் கோணாமல், கேட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்க அரசுகள் தயாராக இருக்கின்றன என்றும், வெறும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தான் இந்தப் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு போன்ற பகுதிகளில் இருந்தும் இங்கே மீன்பிடிக்கப் படகுகள் வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதானியின் கடிதத்தை நாங்கள் பார்த்தபோது, எங்களுக்கு வந்த கோபம் உங்களுக்கும் வந்தது என்றால், இந்த அநீதி குறித்து கவலைப்படுவீர்கள் என்றால், தயவு செய்து அதனை அனைவரும் அறிய வெளிப்படுத்தவும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
Kattupalli fishers outraged at Adani request for No Fishing Zone near Kattupalli Port. Write open letter to political parties. Attached is letter to TNCC @laksr_tn @Jairam_Ramesh @RahulGandhi @s_kanth @INCIndia #StopAdaniSavePulicat pic.twitter.com/oh1KKwlOlk
— NityanandJayaraman (@NityJayaraman) March 13, 2021
நாம் தமிழர் கட்சி, திமுக, மதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீனவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது வரை மௌனம் காத்து வருகிறது.
- அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)