This article is from Jan 05, 2020

காவலன் ஆப் உண்மையில் பாதுகாப்பானதா ?

நேற்று ” தி ஹிந்து ” வெளியிட்ட செய்தியில், காவலன் செயலி உண்மையில் பாதுகாப்பானதா, அதாவது அதிலுள்ள தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அதை மையப்படுத்தி யூடர்ன் வீடியோ வெளியிட்டு இருந்தோம்.

அது தொடர்பாக நாம் செய்த ஆய்வில் டெர்ம்ஸ் அண்ட் கண்டீசன் பகுதியில் காவலன் செயலியை இயக்குவது AMTEX system என்று இருந்தது. மேலும், பகுதி 2.5-ல் உங்களுடைய தனிப்பட்ட தகவலை நாங்கள் விற்கவோ , வாடகைக்கோ அல்லது பரிமாற்றிக் கொள்ளவோ மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, AMTEX நிறுவனத்தில் இருந்துதான் நமது தகவல் இருக்கிறது என்பதை இது உறுதி செய்கிறது.

மேலும், உங்களின் தனிப்பட்ட ரிஸ்கில் இதை பயன்படுத்துவதற்கு சம்மதம் தெரிவிக்கிறீர்கள் என்று அர்த்தம். பகுதி 5.1-ல் எங்களை மீறி உங்கள் தகவலுக்கு ஏதேனும் ஆனால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பது உட்பட பல நெருடல்கள், கடைசியாக Contact information-ல் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி Kavalan@amtexsystems.com . ஆக, 5  லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களால் பயன்படுத்தப்படும் காவலன் செயலியை இயக்குவது மற்றும் அது தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டியதும் ஒரு தனியார் நிறுவனத்தையா என்ற கேள்வி எழுந்தது.

ஐந்து லட்சம் பேரில் பெரும் பகுதி பெண்களால் பயன்படுத்தக்கூடிய செயலியை பற்றி விவரங்களை கேட்க நேரடியாக அந்த நிறுவனத்தையே தொடர்பு கொள்ள முடியுமெனில், அது தவறுகளுக்கு வழிவகுக்காதா போன்ற பல கேள்விகள். இதன் அடிப்டையிலேயே அச்சம் தெரிவித்து இதன் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம் என்று பேசி இருந்தோம். ஏனென்றால் , இந்த செயலி பல அனுமதிகளை கேட்கும், குறிப்பாக Contacts, Microphone, video , camera , gallery , location போன்ற மிக முக்கியமான விசயங்களுக்கு அனுமதி பெற்றுக் கொள்கிறது.

ஆக, இது உங்களை அங்குலம் அங்குலமாக கண்காணிக்க வாய்ப்புள்ளது. அப்படியான செயலியின் சர்வர் மற்றும் இயக்கும் உரிமை தனியாரிடமா ?. இதை வெளியிட்ட உடன் காவல்துறை தரப்பில் இருந்து எஸ்.ஐ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் நம்மிடம், யாரிடம் விவரம் கேட்டீர்கள் என்றெல்லாம் கேட்டார். மீண்டும் வேறொரு காவல் அதிகாரியும் சுமார் 11 மணிக்கு அழைத்துள்ளார். ஆனால் அந்த அழைப்பை நம்மால் எடுக்க முடியாமல் போனது.

இரவே Terms and Condition மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, முதல் வரியில் Owned and operated by Tamilnadu police என்று மாற்றி இருக்கிறார்கள்.பகுதி 2.5 -ல் ” அனைத்து தகவல்களும் துறையிடம்தான் உள்ளது” என்றும், தகவல் வேறு எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்றும், AMTEX Systems பராமரிப்பு மற்றும் மாற்றங்களைச் செய்ய மட்டுமே உதவுகிறார்கள் என்றும் மாற்றி இருக்கிறார்கள்.

முக்கியமாக தனியார் நிறுவனத்தின் மின்னஞ்சலை மாற்றி spmcr.mobileapp@gmail.com எனக் குறிப்பிட்டு உள்ளனர். நமக்கு வந்த அழைப்பு,இரவுக்கு இரவே நாம் குறிப்பிட்ட தவறுகளின் திருத்தம் எல்லாம் உண்மையில் இதன் செயல்பாடுகளை மேலும் சந்தேகத்திற்குரியதாக மாற்றுகிறது.

மேலும், சர்வர் விவரங்கள் எங்களிடம்தான் உள்ளது என்று சொல்லிவிட்டால் போதாது. ஒரு சுமாரான மென்பொருள் அறிவுள்ள ஒருவர் கூட தகவல் சேமிக்கப்பட்டுள்ள சர்வர் யார் கையில் உள்ளது என்பதை கண்டுபிடித்து சொல்லிவிட முடியும். தேவை, ஆக்கபூர்வமான மாற்றமே தவிர, கண்துடைப்பு அல்ல. ஏனென்றால், இது ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்.

எங்களைப் போலவே காவல்துறையும் பொதுநலத்தை விரும்பும் என்று நம்புகிறோம் ! காவல்துறை சார்பில் உரிய விளக்கம் அளித்தால் அதனையும் இணைத்து வெளியிட தயாராக உள்ளோம். நமது நோக்கம் மெய்பொருள் காண்பதே .

Please complete the required fields.
Back to top button
loader