” கீரை அட்டை ” – அண்ணாச்சிக் கதைகள்.

கல்லூரியில் படிக்கின்ற ரகுவிற்கு காலையில் 4 மணிக்கே வேலைகள் தொடங்கிவிடும். பால் பாக்கெட்டுகளை வீட்டிற்கே சென்று கொடுப்பது தான் அவரின் பகுதி நேர வேலை. இதை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்வார். இதில் கிடைக்கின்ற சொற்ப வருமானம் நோட்டு புத்தகங்கள் வாங்க உதவும். அது தந்தை பொருளாதாரச் சிரமத்தை குறைக்கும் என்பதால் அவரே விரும்பி செய்யும் தொழில்.

நகரத்திற்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் தான் அவருடைய வீடு. காலையில் எழுந்து மிதிவண்டியில் நகரத்திற்கு சென்று மொத்தமாக வருகின்ற பால் பாக்கெட்டுகளை இவர் வினியோகிக்கின்ற பகுதி என்று தனியாக பிரித்து எடுக்க வேண்டும். சிலருக்கு அரை லிட்டர் பாக்கெட் , சிலருக்கு ஒரு லிட்டர் பாக்கெட் , சிலர் முதல் நாள் சொல்லி விட்டு கூடுதல் பாக்கெட்டுகள் கேட்பார்கள். எல்லாவற்றையும் கணக்கு பார்த்து மொத்தமாக எடுத்து, சரியாக கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் மனதிலேய குறித்து வைத்துக் கொண்டு அத்தனை வீடுகளுக்கும் சரியாக கொண்டு சேர்ப்பார்.

Advertisement

பால் பாக்கெட் கொடுக்கும் போது ஒவ்வொரு வீட்டிலும் மின்சார கணக்கு எடுப்பவர்கள் மின் அளவீட்டை குறித்து வைப்பதற்கு பயன்படுத்துவது போன்ற ஒரு அட்டையில் எந்த தேதி எத்தனை பால் பாக்கெட் கொடுத்தோம் என எழுதி கையெழுத்து இட்டு கொடுத்து விடுவார். இது அரை லிட்டர், ஒரு லிட்டர் என ஒரு சில நாட்களில் மட்டும்.

மாறுபட்ட அளவுகளில் வாங்குபவர்களும், சில நாட்கள் வாங்காமல் மீண்டும் தொடர்ந்து வாங்குபவர்களுக்கும் மாத கடைசியில் கணக்கு பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் என யோசித்து ரகுவே அறிமுகப்படுத்திய அட்டைதான். இது ஒன்றும் புதுமை இல்லை, ஆனால் பின்னால் வருகின்ற ஒரு புதுமைக்கு இதுதான் தொடக்கப் புள்ளி.

அவர் வழக்கமாக பால் பாக்கெட் கொடுக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கின்ற சிவகாமி மாமிக்கு முருங்கை கீரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ரகு கிராமத்தில் இருந்து வருவதால் அங்கு கிடைத்தால் கொண்டு வந்து கொடுக்க முடியுமா என ரகுவிடம் கேட்டார். ரகு வீட்டிலேயே முருங்கை கீரை இருந்ததால் அடுத்தநாள் அவர் பால் பாக்கெட் கொடுக்கும் போது கீரையும் கொடுத்தார். ரகு எவ்வளவோ வேண்டாம் எனச் சொல்லியும் அதற்கான தொகையையும் கொடுத்துவிட்டு, “வாரத்தில் சில நாட்கள் இது போல் கொடுக்க முடியுமா? மருத்துவர் இரும்பு சத்திற்காக இதை உணவில் அதிகம் சேர்க்க சொல்லி இருக்கிறார்” என்றார் சிவகாமி மாமி.

தன் வீட்டில் உள்ள மரத்தில் அவ்வளவு கீரை இல்லை என்பதை ரகு சொன்னார். “உங்கள் வீட்டில் இல்லை என்றால் என்ன மற்றவர்கள் வீட்டில் இருந்து வாங்கி வந்து கொடுப்பா. அதற்கான தொகை அவர்களிடம் கொடுத்து விடுப்பா ” என்ற மாமியின் யோசனை ரகுவிற்கு பிடித்து இருந்தது. அவருடைய கிராமத்தில் நிறைய வீடுகளில் முருங்கைக்காய் பறிப்பதோடு சரி கீரை அதிகம் பறிப்பதில்லை.

Advertisement

ரகு, பால் பாக்கெட் கொடுக்கின்ற போது குறித்து கொடுக்கின்ற அட்டையிலேயே எந்த நாள் எத்தனை கீரைக் கட்டுக் கொடுத்தோம் என குறித்து வைத்துக் கொண்டு மாதக்கடைசியில் அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டார். இவர் வீட்டில் இருந்து வருகின்ற கீரை போக மீதி நாட்களில் வாங்குகின்ற கீரைக்கு வாங்கியவர்களிடம் அதற்கான பணத்தை சரியாக சேர்த்தார். அதில் ஒரு அக்கா சொன்னார் , ” தம்பி டவுணு வரைக்கும் சைக்கிள் அழுத்திட்டு போய் கொடுக்குறீங்க , உங்களுக்கு கொஞ்சம் வேண்டாமா ? ஒரு கட்டு காசு உங்களுக்கு “. உழைப்பிற்கான ஊதியம் என்பதால் ரகு சரி என்றார்.

சில மாதங்களுக்கு பிறகு சிவகாமி மாமி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர் பொருளாளராக இருக்கின்ற அடுக்கு மாடி குடியிருப்பில் ரகுவின் கீரை ” டோர் டெலிவரி ” பற்றி சொல்லி இருக்கிறார். மொத்தமாக 15 பேர் தங்களுக்கும் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நம்ம மக்களிடம் உள்ள நல்ல குணமே இது தான் . ஒரு பொருள் / சேவை பிடித்து விட்டால் அவர்களே நாலு பேரிடம் அதைப் பற்றி சொல்வார்கள். ஆனால் இந்த முறை அந்த 15 பேரில் அதிகம் பேர் கேட்டது தண்டுக்கீரையும் , அரைக்கீரையும். சிலர் பொன்னாங்கன்னி கீரையும், முருங்கை கீரையும்.

ரகு , விவசாயியான தன் அப்பாவிடம் பேசி அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.

இப்போது பால் பாக்கெட்டுடன் 15 வீடுகளுக்கும் வாரத்தில் சில நாள் கீரையும் ” டோர் டெலிவரி ” செய்யப்பட்டது.

ஒருநாள் சிவகாமி மாமி கேட்டார், ” ஏன் ரகு நீ பால் போடுற எல்லா வீட்டுலேயும் கீரை வேணுமானு கேட்கக் கூடாதா? ” . யோசனை நன்றாக இருந்தாலும் . ரகுவிற்கு பயங்கர தயக்கம் . எல்லோர் வீட்டிலும் கேட்கலாம். அதில் 20% சரினு சொன்னாக் கூட எப்படி சைக்கிளில் வைத்து கொண்டு வருவது ? அத்தனை பேருக்கும் எப்படி காலையிலேயே கொடுப்பது?

அப்பாவிடம் இந்த விசயத்தை சொன்னவுடன் . அவருடைய பழைய TVS 50 எடுத்துக்க சொன்னார்.

வண்டி ரெடி. எப்படி எல்லோரிடமும் கேட்பது . காலையில் 6 மணிக்கு பால் பாக்கெட் போடும் போது பாதி பேர் முழித்து கூட இருக்க மாட்டார்கள் . வாசலில் தொங்க விட்டு இருக்கும் பையில் பால் பாக்கெட்டை போட்டுவிட்டு அட்டையில் பாலின் அளவை எழுதி அதையும் அந்த பையில் போட்டுவிட்டு சென்று விடுவார் . காலையிலேயே கதவை தட்டிக் கேட்டால் அவர்களுக்கு சங்கடமாக இருக்குமே என யோசித்தார்.

அவருக்கு தோன்றிய ஒரு யோசனை தான் ” கீரை அட்டை ” . பாலுக்கு எழுதுவது போலவே. கீரைக்கும் தனியாக அட்டை அடித்தார். பால் போடுகின்ற எல்லோர் வீட்டிலேயும் ஒரு நாள் பாலுடன் ஒரு சிறிய கீரைக் கட்டை இலவசமாக கொடுத்தார் அதனுடன் இருந்த கீரை அட்டை அதன் பின்புறம் ” கீரைக் கட்டு ” உங்கள் வீடு தேடிவர இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் முதல் நாளே 100 பேருக்கு மேல் வேண்டும் என்றார்கள். நேராக கேட்டு இருந்தால் சிலர் வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள் சிலர் வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள் . பலர் யோசித்து சொல்றேன் என்று சொல்லி இருப்பார்கள். பொருளை தொட்டு உணர்ந்து பயன்படுத்தும் போது நுகர்வோர் பொருளுடன் இணைகிறான்.

அப்படியாக பாலுடன் அதிகாலையிலேயே பசுமையான கீரை வந்தால் மக்கள் வேண்டாம் என்றா சொல்வார்கள் “.

கல்லூரி இரண்டாம் ஆண்டில் இந்த கீரை அட்டை யோசனை செயல் படுத்தினார். அவர் கல்லூரி முடிக்கும் போது அவரிடம் 1000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் . அப்பாவிடம் சொல்லி இவர்கள் தோட்டதில் பூச்சி மருந்து மற்றும் இரசாயன உரம் இல்லாத கீரைகள் பயிர் இடுகிறார். அப்பாவின் விவசாய நண்பர்கள் பல பேர் கீரை விவசாயத்திற்கு மாறி ரகு மூலமாக நகரத்திற்கு கீரைகளை அனுப்புகிறார்கள்.

அத்தனை பேரின் கீரையும் ” கீரை அட்டை ” என்ற பிராண்ட் பெயரில் நகரத்தில் நேரடியாக வீட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது ரகுவிடம் 10க்கும் மேற்பட்ட பையன்கள் அதிகாலையில் பாலுடன் கீரையை “டோர் டெலிவரி ” செய்கிறார்கள். பால் வாங்காமல் கீரை மட்டும் வாங்கும் பலரும் இதில் அடக்கம். கீரை அட்டையின் பின்புறத்தில் விளம்பரத்திற்காக ஆட்டோ டிரைவர்கள் , டாக்சி டிரைவர்கள் தங்கள் பெயருடன் கைபேசி எண்ணையும் ( அது ஓலா , ஊபர் இல்லாத காலம் ) அச்சடித்து அந்த அட்டையை இலவசமாக ரகுவிற்கு கொடுத்தார்கள்.

வார இதழ்களில் ரகுவின் பேட்டி எல்லாம் வந்தது. அந்த பேட்டியில் சொல்லி இருப்பார் பையன்களுடன் தானும் காலையில் ஒரு பகுதிக்கு சென்று ” டோர் டெலிவரி ” செய்வதாக. அப்ப தான் மக்கள் என்ன கேட்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பது புரியும் என்று. ஜெயித்த எல்லோரும் ஒரே விசயத்தைத் தான் சொல்கிறார்கள் ” மார்கெட்டின் / மக்களின் தேவையை புரிந்து கொண்டேன். அதை தரத்துடன் நிறைவு செய்தேன் ” .

– அனு

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.




Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close