கீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா ?| தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய நிலையில் அகழாய்வு திட்டத்தின் தொடர்ச்சியாக கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. கீழடி மற்றும் அதன் தொடர்ச்சியாக அகழாய்வு பணிகள் நடைபெற்ற அகரத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் மற்றும் கொந்தகையில் எலும்புக்கூடுகள் கிடைத்தது தொடர்பாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், விகடனில் ” 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!’ – கீழடி ஆச்சர்யம் ” என்ற தலைப்பில் வெளியானக் கட்டுரையின் ஸ்க்ரீன்ஷார்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை மையமாக வைத்தே கீழடியில் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாணயம் கிடைத்துள்ளதாகவும் மற்றும் சிலர் 6 நூற்றாண்டில் தமிழகத்தில் இஸ்லாம் பரவி இருந்ததாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இக்கட்டுரையில் சிரியா நாணயம் குறித்த தகவலையும், தொல்லியல் ஆர்வலரின் பதிலையும் விரிவாக காண்போம்.
பகிரப்பட்டு வரும் விகடனின் கட்டுரையின் இறுதியில், ” இது குறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் பேசுகையில் கீழடி 2300 வருடங்களுக்கு முற்பட்டது. இங்கு பெரிதாக தங்க நாணயங்கள் கிடைத்ததில்லை. தற்போது கீழடியின் தொடர்ச்சியான அகரத்தில் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். இதேபோல், இலந்தக்கரையில் 6-ம் நூற்றான்டைச் சேர்ந்த சிரியா நாணயம் கிடைத்துள்ளது. இப்படி மொத்தம் 3 சிறப்புமிக்க நாணயங்கள் காளையார்க்கோயிலை அடுத்த இலந்தக்கரையில் கிடைத்துள்ளன. எனவே கீழடியைப் போல் இலந்தக்கரையிலும் விரிவான அகழாய்வை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும் எனக் கூறினார் ” என்று இடம்பெற்றுள்ளது.
ஆக, 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சிரியா நாணயம் கீழடியில் கிடைத்துள்ளதாக கூறுவது தவறான தகவல். விகடன் கட்டுரையின் தலைப்பில் ” கீழடி ஆச்சர்யம் ” என சிரியா நாணயம் குறித்த தகவலையும் சேர்த்ததே குழப்பத்திற்கு காரணம். மேலும், 6-ம் நூற்றான்டைச் சேர்ந்த சிரியா நாணயம் தொடர்பாக கூடுதல் தகவலை அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.
தனிப்பட்ட முறையில் கள ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் அவர்களின் முகநூல் பக்கத்தை கண்டறிந்து பார்க்கையில் ஜூன் 18-ம் தேதி சிரியா நாணயத்தின் புகைப்படத்துடன் விளக்கமாக பதிவிட்டு இருந்தார்.
தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசுகையில், ” கீழடியில் இருந்து இலந்தக்கரை 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கீழடியில் கிடைத்தப் பொருட்களை போலவே எங்களின் ஊரின் பகுதியில் எனக்கு கிடைத்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்த காட்டுக்கருவேல மரங்களை தூரோடு பிடிங்கி அப்புறப்படுத்தும் போது இதெல்லாம் வெளியே வந்தது. அதில் அந்த தங்க நாணயமும் ஒன்று. இது சிரிய நாட்டைச் சேர்ந்த நாணயம். 2 நாட்கள் வரை அந்த நாணயம் தங்கமா அல்லது செம்பா எனத் தெரியவில்லை. நாணயத்தின் புகைப்படத்தை கூகுள் அப் மூலம் தேடி பார்த்த போது சிரியாவின் நாணயம் என கிடைத்த தகவலை ஒப்பிட்டு அறிந்து கொண்டேன். அதை இங்கு நாணயமாக பயன்படுத்தவில்லை. இங்கிருந்து பாசிகளை வாங்கிக் கொண்டு பண்டமாற்ற முறையில் தங்கத்தைக் கொடுத்து இருக்கலாம். அந்த நாணயத்தில் துளையிட்டு டாலர் போல் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஏனெனில், அங்கு ஆபரண தொழிற்சாலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. ஆகவே, அதிலுள்ள துளை இங்கு செய்திருக்கலாம்.
அங்கு பகுதியில் இருந்து ராஜராஜச்சோழன் காலத்து இரு நாணயங்களும், சிரியா நாணயமும் எடுத்துள்ளேன். ராஜராஜச்சோழன் காலத்து நாணயங்களும் பரவலாக கிடைத்துள்ளது. நபிகள் நாயகம் இறந்து சிறிது நாட்களுக்கு பிறகு அப்துல்-மாலிக் இப்னு மரவன் இப்னுல் ஹக்காம் எனும் சிரியாவின் பேரரசர் கிபி 698-ல் குரானில் இருந்து சில வாசகங்களை பொறித்து இந்த தங்க நாணயத்தை உருவாக்கி உள்ளார். இதற்கு முன்பாக ஒரே மதிப்புடைய நாணயத்தின் எடை வேறுபடும். இவர்கள் 4.25 கிராம் என்கிற எடையை வரையறை செய்து உள்ளார்கள்.
முதலில் இத்தகைய நாணயங்கள் வணிகத்தின் போது பண்டமாற்று முறையில் இங்கு வந்திருக்கக்கூடும். அடுத்ததாக, நபிகள் நாயகத்தின் சீடர் மாலிக் தினார் என்பவர் இஸ்லாம் கொள்கைகளை பரப்ப தென்னிந்தியாவிற்கு வந்துள்ளார். அவரின் சமாதி கேரளாவில் அமைந்துள்ளது. அவரின் மூலமாகவும் இந்த நாணயம் இங்கு வந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. சில நாற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு இஸ்லாமிய மதத்தினர் வாழ்ந்து வந்தனர். தர்காவும் இங்குள்ளது. சமீபத்தில்தான் இடம்பெயர்ந்து உள்ளனர். அதுமட்டுமின்றி, 13-ம் நூற்றாண்டில் சிரியாவில் இருந்து காளையார்கோவில் பகுதிக்கு வந்த பயணி மூலமாகவும் நாணயம் வந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
இலந்தக்கரையில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. நிலத்தின் மேற்பரப்பில் மேற்கொண்ட கள ஆய்வில் முடிந்தவரை ஆதாரங்களை திரட்டி வருகிறேன். இலந்தக்கரையில் மத்திய, மாநில அரசுகள் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் ” எனக் கூறியுள்ளார்.
சிரியா நாணயம் குறித்து தேடிய போது aramcoworld எனும் இணையதளத்தில் நாணயம் குறித்த தகவல் 2015-ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. சிரியாவில் குரான் வாசகம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நாணயத்தை தமிழகத்தில் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இருப்பினும், கிபி 6 நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட சிரியா நாணயம் தமிழத்திற்கு எந்த நூற்றாண்டில் வந்தது என்பதற்கோ, எப்படி வந்தது என்பதற்கோ உறுதியான ஆதாரங்கள் இல்லை. சிரியா நாணயம் வணிகத்தின் போது பண்டமாற்று முறையில் தமிழகத்திற்கு வந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார் தொல்லியல் ஆர்வலர். மேலும், வைகை நதிக்கரை நாகரீகத்தின் பகுதியாக இலந்தக்கரை இருந்திருக்கக்கூடும் என்கிறார்.
பண்டைய தமிழ் சமூகம் பல நாடுகளுடன் வாணிபம் செய்த வரலாறு இங்குள்ளதை அறிய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த இந்த நாணயத்தை கீழடியுடன் தொடர்புப்படுத்தி குழப்பத்தை உண்டாகியுள்ளனர். பழங்கால சிரியா நாணயத்தை வைத்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
Links :
16th-century-gold-coin-found-in-keezhadi-excavation