24 மொழிகளில் வெளியிடப்பட்ட கீழடி அகழாய்வு அறிக்கை புத்தகம் !

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் பணிகளில் இருந்து கி.மு 6-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பண்டையத் தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. கீழடி குறித்த தொடர் செய்திகள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தில் கண்காட்சி அரங்குக்கு வெளியே ” கீழடி-ஈரடி தமிழ் தொன்மங்கள் ” என்ற தலைப்பில் தொல்பொருள் கண்காட்சியும் அமைக்கப்பட்டு உள்ளது.
அத்தகைய கண்காட்சியில் கீழடியின் அகழ்வாராய்ச்சி பணியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய் , கருப்பு சிவப்பு குவளைகள், நீர் மேலாண்மைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மாதிரிகளை தமிழக தொல்பொருள் துறை காட்சிப்படுத்தி உள்ளனர். அதோடு இல்லாமல், கீழடி வரலாறு குறித்து விளக்கும் வகையில் ஒளிப்பட காட்சிக் கூடத்தையும் அமைத்து உள்ளனர்.
மேலும், கீழடியில் அகழாய்வு முடிவுகள் குறித்த ஆய்வறிக்கையை தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், இத்தாலி மொழி, போர்ச்சுகீசிய மொழி, மாண்டரின் (சீன மொழி), ஜப்பானிய மொழி , உருது, பிரெஞ்சு உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாக தமிழகத் தொல்லியல்துறை வெளியிட்டு இருக்கிறது.
இதில், தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பு புத்தகங்கள் ரூ.50-க்கும், பிற மொழிப் பதிப்புகள் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழக தொல்லியத் துறையின் இத்தகைய முயற்சி பாராட்டுக்குரியது.
மேலும் படிக்க : 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்| கீழடி ஆதாரங்கள்.