This article is from Oct 25, 2019

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்தது என்ன ?| தொடரும் ஆச்சரியங்கள் .

கீழடி அகழாய்வு பண்டைய தமிழர்களின் வைகை கரை நகர நாகரீகத்தின் ஆதாரங்களை வெளிப்படுத்தி வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்து வந்ததை எடுத்துரைத்து வருவதாக கருதப்படுகிறது. அங்கு கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் தமிழி எழுத்துக்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பதை ஃபுளோரிடா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட பீட்டா பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது.

கீழடியில் இதுவரை நான்காம் கட்ட அகழாய்வு பணிகளின் போது கிடைத்த பொருட்கள் குறித்த தகவல்களே வெளியாகி இருந்தன. தமிழகத்தின் மாநில தொல்லியல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வந்த ஐந்தாம் கட்டம் அகழாய்வு பணிகள் முடிவடைந்து உள்ளது.

ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியில் நகர நாகரீகத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகக் கருதப்படும் வடிகால் அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்து இருக்கிறது. சுட்ட மண்ணால் உருவாக்கப்பட்ட வடிகால் அமைப்புகள் அமைக்கப்பட்ட விதம் ஆச்சரியத்தை அளித்து இருக்கின்றன.

YD6/3 என்ற குறிப்பிட்ட ஆய்வுக் குழியில் அகழாய்வு பணியை மேற்கொண்டவர்களுக்கு 47 செ.மீ ஆழத்தில் பானையின் விளிம்பு போன்ற அமைப்பு தெரிந்து உள்ளது. அதைத் தொடர்ந்து மிக கவனமாக பணிகளை தொடர்ந்த போது , சிவப்பு வண்ணத்தில் செம்மையாக வடிவமைக்கப்பட்ட இரு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் இருப்பது கிடைத்தன. ஒவ்வொரு குழாயும் 60 செ.மீ நீளமும், 20 செ.மீ அகலமும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கிடைக்கப்பட்ட குழாய்களில் விளிம்புகளை போன்ற ஐந்து வளையங்கள் இருக்கின்றன. இவ்விரு குழாய்களும் நன்றாக ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்டு இருப்பதால் , நீரினை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல பயன்படுத்தி இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், சுடுமண் குழாய்களுக்கு கீழே பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருத்திய நிலையில் காணப்பட்டு உள்ளன. எனவே, இவ்விரு குழாய்களின் பாதைகளும் வெவ்வேறு விதமான பயன்பாட்டிற்கு இருந்திருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

பீப்பாய் வடிவிலான குழாயின் நுழைவுப் பகுதியில் வடிகட்டி ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. இந்த வடிகட்டியில் மூன்று பாகங்கள் மட்டுமே கிடைக்கப்பட்டன. இந்த குழாய் உடைய இறுதிப் பகுதியானது இரண்டு அடுக்கு கொண்ட பானையில் சேர்கிறது. இதில், நீரை சேமித்து இருக்கலாம் என கள ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த செங்கல் கட்டுமானத்தினால் உருவாக்கப்பட்ட வடிகால் அமைப்பின் தொடர்ச்சியாக இந்த வடிகால் அமைப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட அகழாய்வில் , 52 செ.மீ ஆழத்தில் சில கூரை ஓடுகள் செங்குத்தாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், ஒரு செங்கல் கட்டிடமும் வெளிப்பட்டு உள்ளது.

பல்வேறு வகையான நீர் வழிகள், செங்கல் கட்டுமானங்கள், பிற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பகுதிகளுக்கான வாணிபத் தொடர்பு , தொழிற்கூடங்கள், அடையாளங்கள் , எழுத்தறிவு உள்ளிடவையே முதிர்ச்சிப்பெற்ற சமூகத்திற்கான முக்கிய கூறுகளாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இதில், பல்வேறு கூறுகள் கீழடியில் கிடைத்துள்ளன. இனி கீழடியில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கட்ட ஆய்வில் எம்மாதிரியான ஆச்சரியங்கள் வெளிப்பட உள்ளன என்பதை காத்திருந்து அறிவோம் !.

links :

Fifth phase of excavation reveals discoveries unique to Keeladi

Please complete the required fields.




Back to top button
loader