2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்| கீழடி ஆதாரங்கள்.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் மத்திய தொல்பொருள் அகழ்வாராச்சி துறையை சார்ந்த அமர்நாத் ராதாகிருஷ்ணன் அவர்களை தலைமையாக கொண்ட ஓர் குழு 2014-ல் ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் தொன்மையான தமிழ் மக்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்தனர்.
கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மக்களின் வரலாறு தோண்ட தோண்ட கிடைத்து. அதில் உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், அணிகலன்கள், மட்பாண்டங்கள், எலும்புக்கருவிகள் , இரும்பினால் ஆன வேல்கள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என பல தொன்மையான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
கீழடியில் இருந்து சேகரிக்கப்பட கரியமில பொருள்களை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிடிக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த கார்பன் பொருள்களை ஆய்வு செய்ததில் மாதிரிகள் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராதாகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். சில கட்டங்களுக்கு பிறகு கீழடியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்வதை மத்திய தொல்லியல் துறை நிறுத்திக் கொண்டது. பின்னர் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
2018-ம் ஆண்டில் கீழடி பகுதியில் தமிழக அரசு மூலம் நடத்தப்பட்ட 4-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து சோதித்த முடிவுகளில் வரலாறுகளை மாற்றி அமைக்கும் நிலை உருவாகி உள்ளது. கீழடியில் கிடைத்த 6 பொருட்களை ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிடிக் நிறுவனத்தின் லேப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதில் கிடைத்த முடிவுகளை படி, மாதிரிப் பொருட்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு முன்பான சோதனைகளால் எடுக்கப்பட்ட மாதிரிகள் 2,100 ஆண்டுகள் பழமையானவை என முடிவுகள் வந்தன. தற்பொழுது கீழடியின் காலக்கட்டம் கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே எனக் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது கீழடி ஆய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் குறித்த முடிவுகளில், தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை முடிவிற்கு வந்துள்ளது. கீழடியில் கிடைத்த தொல்லியல் பொருட்களை வைத்து கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கப்பட்டது என தொல்லியல் துறை தெரிவிக்கின்றது.
கீழடியில் கிடைத்த கிட்டத்தட்ட 70 எழுப்புத் துண்டுகள் புனேவில் உள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரியில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் காளை, எருமை, ஆடு, படு உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகள் என கண்டறியப்பட்டுள்ளது. கால்நடை சார்ந்த விலங்குகளை அதிகம் பயன்படுத்தியதில் இருந்து கீழடியில் வாழ்ந்த சமூகம் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு சார்ந்து வாழ்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
மேலும், கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவை வேலூர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.
கீழடியில் இருந்து வெளிக்கொண்டு வரப்பட்ட நகர வாழ்விற்கான ஆதாரங்களில் இருந்து, வட இந்தியாவின் கங்கை நதிக்கரையின் நகர நாகரீகமும், வைகை நதிக்கரை நகர நாகரீகமும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்தவை, அதாவது கி.மு ஆறாம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே சங்க காலத் தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்றதற்கான ஆதாரங்களாக ஆதன், குவிரன் போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு உடன் நகர நாகரீக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் வரலாற்றையே மாற்றியுள்ளது.
link :
Sangam civilisation older than thought, says new report
Keeladi findings traceable to 6th century BCE: report
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.