This article is from Sep 22, 2019

கீழடியில் மதக் கடவுள்களின் சிலைகள் இருந்ததாக பரவும் வதந்திகளின் தொகுப்பு !

மிழகத்தின் கீழடியில் தொன்மையான தமிழர் சமூகம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. கி.மு 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு கொண்ட சமூகம் வாழ்ந்து வந்ததாக கூறும் வேளையில் மத அடையாளங்கள் குறித்து இன்று வரை எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பதே ஆச்சரியம்.

மேலும் படிக்க : 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்| கீழடி ஆதாரங்கள்.

ஆனால், இங்குள்ள மக்களோ கீழடியில் மத அடையாளங்கள் இருப்பதாக ஒன்றன்பின் ஒன்றாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். அப்படி பரவிய வதந்திகளின் தொகுப்பையும், கீழடி அரசியலையும் இக்கட்டுரையில் நாம் காண்போம்.

கீழடியில் இயேசு : 

” 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பழமையான ஜிசஸ் உருவம் பதித்த பழமையான சிலை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் இந்துக்கள் தாய்மதமான கிருஸ்துவ மதத்தில் இருந்து இந்துவாகமாறி உள்ளதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும். ஆமென் ” என ஜிசஸ் நெட்வொர்க் டிவி என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகியதாக பரவி வருகிறது.

இதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள Jesus Network Tv-வி முகநூல் பக்கத்திற்கு சென்று பார்த்தோம். ஆனால், அப்பக்கத்தில் அப்படியான பதிவுகள்,வீடியோ என எதுவும் இல்லை. கீழடியில் இயேசு உருவம் இருப்பதாக வீடியோவே வெளியிட்டு இருக்க வேண்டும், பதிவின் கீழே 2.5 ஆயிரம் பார்வைகள் எனக் காண்பிக்கின்றது.

மேலும், அந்த பதிவில் இருக்கும் புகைப்படத்தை 123rf.com என்ற தளத்தில்  ” Stock Photo – face of Jesus, old statue in cemetery ” என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளனர். மேலும், இயேசு உடைய சிலை புகைப்படத்தில் shutter stock என்ற பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது.

கீழடியில் பழமையான இயேசு சிலை இருப்பதாகக் கூறும் பதிவை பலரும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து மதம் சார்ந்த கிண்டல்களையும், வெறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இப்பதிவை கிறிஸ்தவ முகநூல் பக்கத்தில் தெரிந்தே பகிர்ந்தார்களா அல்லது மத வெறுப்புணர்வை உருவாக்க யாரேனும் செய்திருக்கக்கூடுமா என்ற குழப்பம் இங்குள்ளது. எனினும், கீழடியில் இயேசு சிலை கிடைத்ததாக கூறும் தகவல் வதந்தியே.

புத்தர் சிலை : 

கீழடியில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மீம் பதிவு ஒன்றை காண நேரிட்டது. அதில், கீழடியில் புத்தர் சிலை, மொத்தத்தில் சங்கிகளுக்கு பலத்த அடி எனக் இடம்பெற்று இருந்தது. இந்த பதிவு அதிகம் வைரலாகவில்லை என்றாலும் யார் வெளியிட்டு இருக்கக்கூடும் என அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.

கீழடியில் புத்தர் சிலை குறித்து காணப்படும் மீம் பதிவில் Black chettah என்ற லோகோ இருந்தது. அதனை வைத்து தேடிய பொழுது “ Black chettah – கற்றவை பற்றவை ” என்ற பெயரில் உள்ள எம்.பி திருமாவளவன் ஆதரவு முகநூல் பக்கத்தை காண முடிந்தது.

அதில், உள்ள லோகோவும், கீழடியில் புத்தர் சிலை மீம் பதிவில் உள்ள லோகோவும் ஒன்றே. ஆனால், அந்த மீம் பதிவும் Black chettah – கற்றவை பற்றவை முகநூல் பக்கத்தில் காணவில்லை. நீக்கி இருக்கக்கூடும்.

கீழடியில் புத்தர் சிலை கிடைத்தாக செய்திகள், ஆய்வாளர்கள் தரப்பில் தகவல்கள் இல்லை. மேலும், யுனெஸ்கோ இணையதளத்தில் புத்தரின் பிறப்பு கிமு 623 எனக் குறிப்பிட்டு உள்ளனர். அப்படி வைத்துக் கொண்டாலும் கூட கீழடி பொருட்கள் கிமு 600-ல் இருந்து பின்னோக்கி செல்கிறது. தொடர்பில்லாத தகவலுடன் வதந்திகளை பரப்பியுள்ளனர்.

கீழடி சிவலிங்கம் : 

” கீழடி அகழ்வு ஆராய்ச்சியில் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு. பழந்தமிழர்கள் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று கூறியது போய்யாகியுள்ளது ” எனக் கூறி 2017-ல் வதந்திகள் பரவி இருந்தது.

மேலும் படிக்க : கீழடி ஆராய்ச்சியில் சிவலிங்க சிலை கிடைத்துள்ளதா ?

கடந்த ஆண்டுகளில் கீழடியில் சிவலிங்கம் இருப்பதாக வெளியான செய்திகளை ஆராய்ந்து வதந்திகள் என மீம், கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இந்தோனேசியாவில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கீழடியில் கிடைத்ததாக பரப்பி இருந்தனர்.

கீழடி அரசியல் : 

கீழடி தொன்மையான தமிழர் பண்பாட்டை உலகிற்கு எடுத்துக் கூறும் வேளையில் தமிழ் தேசியம், திராவிடம் இடையே தேவையற்ற வீண் சண்டைகள் உருவாகி இருப்பது வேதனை. தொன்மையான நாகரீக தமிழ் மக்கள் கி.மு 6-ம் நூற்றாண்டில் எழுத்தறிவு உடன் இருந்துள்ளனர்.

ஆனால், இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இம்மண்ணில் நுழைந்த மத, சாதிய அடையாளங்கள் கல்வி பெறும் உரிமையை பறித்து இருக்கின்றன என்பதே உண்மை. கீழடியில் கிடைத்த பானை ஓட்டின் நிறமும் திராவிட கழகத்தின் கொடியின் நிறமும் ஒன்றாக இருப்பதாக ” We Dravidian ” என்ற முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.

இப்படி கீழடி குறித்து பல்வேறு வதந்திகளும், அரசியல் சண்டைகளும் சுற்றி வருகின்றன என்பதை விரிவாக மக்களுக்கு எடுத்துக் கூற விழைகிறோம். மக்களும் உங்களால் முடிந்தவரை வதந்திகளை நம்பாமலும், அதனை குறித்து தெரிந்து கொள்ள எங்களை பின்தொடர்ந்து, யூடர்ன் தளம் மேற்கொள்ளும் முயற்சிகளை பிறரிடமும் கொண்டு செல்ல உதவுங்கள்.

Please complete the required fields.




Back to top button
loader