தமிழகத்தின் 49 கேந்திரிய வித்யாலயாவில் தமிழாசிரியர்கள் “0” | வெளியான ஆர்.டி.ஐ தகவல் !

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றிய அரசியின் பணிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகிறது.

Advertisement

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகள் கட்டாயம் என்றும், தமிழ் மொழிப் பாடமும், தமிழாசிரியர்களும் இல்லை என ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் கேந்திரிய வித்யாலயா பள்ளி குறித்து ஆர்.டி.ஐ தாக்கல் செய்து பெற்ற பதில் ஆவணத்தை யூடர்னுக்கு அனுப்பி இருந்தார். அதன் மூலம் ஆர்.டி.ஐ தகவல் குறித்து உறுதிப்படுத்த முடிந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 16 கேள்விகளுக்கு ஜனவரி 25-ம் தேதி கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி கட்டாயம். பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் தமிழ் மொழி கட்டாயப் பாடம் இல்லை. தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அதன் விவரங்கள் இணைக்கப்பட்டு உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழை மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் பள்ளிகள் தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு எதுவுமில்லை(NIL) என்றும், தமிழை மொழிப்பாடமாக தேர்ந்தெடுக்க முடியுமா என்ற கேள்விக்கு ” இல்லை ” என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற செம்மொழிகள் ஏதும் கற்பிக்கப்படுகிறதா என்பதற்கும் ” இல்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இறுதியாக, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 109 ஹிந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத மொழி ஆசிரியர்களும் பணியாற்றுவதாகவும், தமிழாசிரியர்களே (0) இல்லை எனப் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்து ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்றுக் கொடுக்கப்படும் என கடும் கட்டுப்பாடுகளுடன் வெளியான உத்தரவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

அதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை விருப்பப்பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், தமிழாசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என தொடுக்கப்பட்ட மனுவில், ” கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி விருப்பப் பாடமாக மட்டுமே இருப்பதை ஏற்க முடியாது. ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழ் மொழியை படிப்பது அடிப்படை உரிமை ” என நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.புகழேந்தி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில், தமிழகத்தில் உள்ள 49 பள்ளிகளில் விருப்ப மொழிப் பாடமாகக் கூட தமிழ் இல்லை, தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த தகவலால் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button