கேரளா கன்னியாஸ்திரிகளின் செயல் என ஃபோட்டோஷூட் படங்களைப் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி !

இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ” கிறிஸ்தவ மிஷனரிகள் இந்த கேரள கன்யாஸ்திரிகளின் செயல்களை எப்படி ஞாயப்படுத்தும்? ” என இரண்டு பெண்கள் கன்னியாஸ்திரி உடையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைப் பதிவிடப்பட்டு உள்ளது.
இந்து மக்கள் கட்சிப் பதிவிட்ட புகைப்படங்களில் “Yaami ” எனும் வாட்டர் மார்க் இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்துத் தேடிப் பார்க்கையில், ” யாமி எனும் புகைப்படக்கலைஞர் கன்னியாஸ்திரி உடையில் இரு பெண்களை வைத்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும், விமர்சனத்தையும் பெற்று வருவதாக ” ஏசியாநெட் நியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
கேரளா எர்ணாகுளத்தில் வசித்து வரும் புகைப்படக்கலைஞர் யாமி இரு பெண்களை கிறிஸ்தவ கன்னியாஸ்திரி உடையில் வைத்து எடுத்த புகைப்படங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து கவலை கொள்ளவில்லை, இது தனக்கு முதல்முறை அல்ல எனத் தெரிவித்து இருக்கிறார்.
இந்த ஃபோட்டோஷூட்டில் கன்னியாஸ்திரி உடையில் பங்குபெற்ற பெண்கள் அஞ்சனா மற்றும் தேவிகா, அவர்களுக்கான உடை வடிவமைப்பு சைஃபு மற்றும் மேக் அப் சாரா ஆகியோர் கவனித்துக் கொண்டதாக செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
2020-ல் விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி சேலையில் பாதி வெட்டப்பட்ட நிலையில் இருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சர்ச்சையாகின. புகைப்படக்கலைஞர் யாமியே அந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
கன்னியாஸ்திரி உடையில் எடுக்கப்பட்ட ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் எதிர்மறையான விமர்சனங்கள் உடன் சர்ச்சையாக்கப்பட்டு வருவதால் அந்த புகைப்படங்கள் யாமி உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
இவை கேரளாவில் கன்னியாஸ்திரி உடையில் எடுக்கப்பட்ட ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் என அறிந்தவர்கள், கன்னியாஸ்திரிகளின் இத்தகைய செயலை கிறிஸ்தவ மிஷனரி எப்படி ஞாயப்படுத்தும் என இந்து மக்கள் கட்சி ட்விட்டரில் கேள்வி எழுப்பியதை விமர்சித்தும், ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.