கேரளாவில் உள்ள சர்ச்சில் ரூ7000 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டதாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
கேரள தேவாலயத்தில் இருந்து 7000 கோடி கறுப்புப் பணம் பிடிபட்டது, ஆனால் எந்த ஊடகமும் இந்து விரோதத் தலைவரும் இதைக் காட்ட மாட்டார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கேரள தேவாலயத்தில் இருந்து அமலாக்கத் துறையினரால் 7000 கோடி கறுப்புப் பணம் பிடிபட்டது, ஆனால் எந்த ஊடகமும் இதுகுறித்து செய்திகள் வெளியிடவில்லை எனக் குறிப்பிட்டு மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு பாதிரியாரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதை பற்றி எந்த எச்ச ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.. த்தூ
கேரள தேவாலயத்தில் இருந்து ₹7000
கோடி கறுப்பு பணம் பிடிபட்டது..இந்த செய்தியை எந்த ஊடகமும் சரி..இந்து
விரோத தலைவர்கள் எவனும் வாய் திறக்கவில்லை.. pic.twitter.com/gYbt778duI— அஹம் ப்ரம்மாஸ்மி அகோரி 🚩🚩🚩🇮🇳🔥🔥🔥 (@l6Uu2YIKmMzZujj) May 24, 2023
மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே கேரள தேவாலயத்தில் 7000ஆயிரம் கோடி ரூபாய் 2000ரூபாய் நோட்டு .
நல்லா கதறுங்கடா!!!!!!
— Krishnaraj (@Krishna73674119) May 24, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 2020 நவம்பர் 7 அன்று இதுகுறித்து The News Minute கட்டுரை வெளியிட்டுள்ளதை காண முடிந்தது. அதில் “The Central Board of Direct Taxes (CBDT) அமைப்பு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் தேவாலயத்துடன் (Believer’s Eastern church) தொடர்புடைய 66 நிறுவனங்களில் சோதனை நடத்தியது. அதில் கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஒருவர், நன்கொடைகளை ரியல் எஸ்டேட் மற்றும் தனிப்பட்ட முதலீடுகளுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த கட்டுரையில், “இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள வழிபாட்டு தலத்தில் இருந்து ரூ.3.85 கோடி உட்பட மொத்தம் ரூ.6 கோடி பிடிபட்டுள்ளதாக CBDT அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மோசடி செய்யப்பட்ட பணம் இன்னும் பல நூறு கோடிகள் வரை இருக்கக்கூடும் என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று குறிப்பிடுகிறது.
இந்திய வருமான வரித்துறையின் செய்திக்குறிப்பில், “கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு இது வழிவகுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிடைத்துள்ள ஆதாரங்கள், ரொக்கப் பணத்தின் அடிப்படையில் பல நூறு கோடி ரூபாய் வரை பணமாக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது. இதுவரை கணக்கில் காட்டப்படாத பணமாக தோராயமாக ரூ.3.85 கோடி உட்பட மொத்தம் 6 கோடி ரூபாய் சோதனையில் சிக்கியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.
Mathrubhumi.com என்னும் ஊடகம் 2020 நவம்பர் 09 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த 5 ஆண்டுகளில் தேவாலயத்திற்கு வெளிநாட்டு உதவியாக ரூ.6000 கோடி கிடைத்துள்ளதாக கட்டுரையில் தெரிவித்துள்ளது. மேலும் பிலீவர்ஸ் தேவாலயத்தில் இருந்து மட்டும் 14.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இது தவிர பிலிவர்ஸ் சர்ச்சின் கீழ் உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவரின் காரில் இருந்து 7 கோடி ரூபாய் மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள தொகை டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், 2020 நவம்பர் 07 அன்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் இல்லை என்பதை அறியமுடிந்தது.
முடிவு:
நம் தேடலில், கேரள தேவாலயத்திலிருந்து 7000 கோடி ரூபாய் அமலாக்கத் துறையால் கைப்பற்றப்பட்டது என்பது தவறான தகவல். 2020ல் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கணக்கில் காட்டப்படாத 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது என்றும், கிடைத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் மேலும் பல நூறு கோடி ரூபாய் வரை பணமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அறிய முடிகிறது.