This article is from Jan 10, 2021

வைரலாகும் KGF நடிகர் யாஷ் பாஜக பிரச்சார புகைப்படம் | யாருக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார் ?

கன்னட திரைப்படமான ” கே.ஜி.எஃப் ” தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வரவேற்பை பெற்று மாஸ் நடிகராக அறியப்பட்டார் யாஷ். இந்திய அளவில் கே.ஜி.எஃப் சாப்டர் 1-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் சாப்டர்-2 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் ஹீரோ யாஷ் கர்நாடகா மாநிலத்தில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த புகைப்படங்கள் தமிழ் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. யாஷ் பாஜக பிரச்சார வாகனத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இது உண்மையா என ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

நடிகர் யாஷ் பாஜக கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது உண்மையே. அது தொடர்பாக பரவும் புகைப்படங்களும் உண்மையானவை. ஆனால், யாஷ் பாஜக வேட்பாளருக்கு மட்டுமின்றி ஜனதா தளம்(மதசார்பற்ற) மற்றும் சுயேட்சை வேட்பாளருக்கும் ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

2018 கர்நாடகா தேர்தல் :

2018-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் எனக் கருத்துக் கூறிய நடிகர் யாஷ் ஜனதா தளம்(மதசார்பற்ற) மற்றும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

கிருஷ்ணராஜா நகரில் ஜனதா தளம்(மதசார்பற்ற) கட்சியின் வேட்பாளர் சா ரா மகேஷ்க்கு ஆதரவாகவும், அதே நேரத்தில் கிருஷ்ணராஜா தொகுதிக்கு மைசூரில் பாஜக வேட்பாளர் எஸ்ஏ ராம்தாஸ் என்பவருக்கும் பிரச்சாரம் செய்து உள்ளார்.

 

” பல தலைவர்களுக்கு நான் பிரச்சாரம் செய்வது தவறு அல்லது வாக்காளர்களுக்கு தவறான எண்ணத்தை தருவதாக நான் நினைக்கவில்லை. நல்ல காரியங்களை செய்வதாக கருதும் தலைவர்களுக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை நல்ல வேட்பாளர்களும், வளர்ச்சிக்கு உறுதி அளித்தவர்களும் முக்கியம் ” என யாஷ் ஊடங்களுக்கு தெரிவித்தார்.

” எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்யவில்லை, நல்ல வேட்பாளர்களுக்காக மட்டுமே பிரச்சாரம் செய்வதாக ” யாஷ் தெளிவுப்படுத்தி இருந்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் :

2019-ம் ஆண்டு கர்நாடகா நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் ஜனதா தளம்(மதசார்பற்ற) கட்சியின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ் உடைய மனைவியும், நடிகையுமான சுமலதா அம்பரீஷ் சுயேட்சையாக போட்டியிட்டார். 
சுமலதா அம்பரீஷ்க்கு ஆதரவாக யாஷ் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவாக இருந்தனர். அத்தேர்தலில், சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்று மாண்டியா தொகுதியில் எம்.பி ஆனார். சுமலதா அம்பரீஷ்க்கு பாஜக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திரைப்பட நடிகர்கள் அரசியலில் களமிறங்குவதும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும் இந்தியாவில் இயல்பான ஒன்றாகும். தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்படுவதால் யாஷ் உடைய அரசியல் நிலைப்பாட்டையும் அறிய முயல்கின்றனர்.
Links :
Please complete the required fields.




Back to top button
loader