பாதுகாப்பற்ற சூழலில் பெண்களுக்கு உதவும் ‘ ஒன் ஸ்டாப் சென்டர் ‘ திட்டம் !

இந்தியாவில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் 2015 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் ‘மிஷன் சக்தி’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) ஆனது அறிமுகப்படுத்தப்பட்டது.
குடும்பம் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளான வரதட்சணை கேட்டு துன்புறுத்தல், பெண்களை அடித்து துன்புறுத்தல், கட்டாய கருகலைப்பு, பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல், தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு கேலி செய்தல், பெண்களை கடத்துவது, கட்டாய திருமணம் போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய “சகி” ஒருங்கிணைந்த சேவை மையம்(OSC) 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
மிஷன் சக்தி
மிஷன் சக்தி இரண்டு துணைத் திட்டங்களைக் கொண்டுள்ளது – ‘சம்பால்’ மற்றும் ‘சாமர்த்தியா’. இதில், “சம்பால்” துணைத் திட்டம் பெண்களின் பாதுகாப்பிற்காக உள்ளது, “சாமர்த்தியா” துணைத் திட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்காக உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், குடும்பம், சமூகம் மற்றும் பணியிடத்தில், தனியார் மற்றும் பொது இடங்களில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதாகும்.
இத்திட்டமானது, வயது, வகுப்பு, சாதி, கல்வி நிலை, திருமண நிலை, இனம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், உடல், பாலியல், உணர்ச்சி, உளவியல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு உதவியும், தீர்வும் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் 18 வயதுக்குட்பட்டவர் எனில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 மற்றும் சிறார் நீதிச் சட்டம் 2000 (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) கீழ் வரும் அமைப்புகள் அல்லது அதிகாரிகள் OSC உடன் இணைக்கப்படுவார்கள்.
நிதியுதவி
இத்திட்டத்திற்கான பட்ஜெட் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்திற்கு ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்’ பொறுப்பாகும். இதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் முன்மொழிவுகள் அங்கீகரிக்கப்பட்டு நிதியானது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த மாவட்ட/மாநில அதிகாரிகள் கண்காணித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் தேவையெனில் இடைநிலைத் திருத்தம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (OSC) உள்ளன. அவை ஒன்றிய அரசின் 100% நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையங்களுக்கான நிலங்களை மாநில அரசு வழங்க வேண்டும்.
OSC சேவைகள்
1. அவசரகாலத்தில் பதில்கள் மற்றும் மீட்பு சேவைகள்
2. மருத்துவ உதவி
3. FIR/ DIR பதிவதில் பெண்களுக்கு உதவி
4. உளவியல்-சமூக ஆதரவு/ஆலோசனை
5. சட்ட உதவி மற்றும் ஆலோசனை
6. தங்குமிடம்
7. வீடியோ கான்பரன்சிங் வசதி
OSC ஆனது ஆதரவற்ற பெண்கள், குறிப்பாக வன்முறையை அனுபவித்தவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு (அனைத்து வயது சிறுமிகள் மற்றும் 12 வயது வரை உள்ள சிறுவர்கள்) அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்குமிடம் சேர்க்கைக்கான தகுதி, மைய நிர்வாகியின் முடிவு. OSCக்கள் நீண்ட கால தங்குமிட வசதியும் தேவையெனில் ஏற்பாடு செய்யப்படும்.
எப்படி தொடர்பு கொள்வது ?
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்தியாவில் மொத்தம் 733 மையங்கள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து OSC-க்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் உள்ளிட்ட தொடர்பு விவரங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. இதுதவிர, தொடர்பு விவரங்களை அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் காணலாம்.
24 மணி நேர கட்டணமில்லா தொலைத்தொடர்பு சேவைகள், உதவி கோரும் பெண்களை அவசரகால பதில் ஆதரவு அமைப்புடன் (Emergency Response Support System – ERSS) இணைக்கின்றன.
பெண்கள் உதவி எண் – 181 மற்றும் 112, அவசர காலங்களில் உபயோகிக்க.
குழந்தைகள் உதவி எண் – 1098
மூத்த குடிமக்கள் உதவி எண் – 1253
சமீபத்தில், சென்னை மாநகர போலீஸ் (GCP) தனது ட்விட்டர் பக்கத்தில் OSC குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையின் “One Stop Center” என்ற உதவி மையத்தை தேவையெனில் அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் இரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்டாலோ அல்லது எங்கே போவது என்று தெரியாமல் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தாலோ, ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையின் “One Stop Center” என்ற உதவி மையத்தை அணுகி பயன் பெறலாம்.
முழு விபரங்களை அறிய
கேளுங்கள் #women #womansafety @CMOTamilnadu pic.twitter.com/ZZUL5H0RWt— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) August 21, 2023
2015 முதல் 2021 வரை உதவி பெற்றவர்கள்
இத்திட்டத்தின் மூலம் உதவி பெற்ற பெண்களின் எண்ணிக்கையானது மாநிலம்/யூனியன் பிரதேசங்கள் வாரியாக கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டில் 2015 முதல் 2021 வரை 19,991 பேர் உதவி பெற்றுள்ளனர்.
ஒருங்கிணைந்த சேவை மையம்(OSC) ஆனது சில மாநிலங்களில் செயல்படுவதற்கு வருடக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், செயல்பாட்டில் பல்வேறு சிரமங்கள் இருந்தபோதிலும், செயலில் உள்ள OSCக்கள் 30.09.2021 வரை 4.5 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு உதவியிருக்கின்றன. OSC போன்ற திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதும், அதை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதும் முக்கியம். இதன் மூலம் தேவைப்படும் போது,குறிப்பாக, அவசர காலங்களில் இத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Links
https://www.tnsocialwelfare.tn.gov.in/en/state-resource-centre-for-women/one-stop-crisis-centre
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/06/2021060491.pdf
https://wcd.nic.in/sites/default/files/733%20OSCs%20Directory%2021.03.2023%20%282%29.xlsx
https://wcd.nic.in/sites/default/files/OSC_G.pdf
https://wcd.nic.in/schemes/one-stop-centre-scheme-1
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1812223