தொடரும் விசாரணை கைதிகள் மரணம்.. காவலர்கள் சஸ்பெண்ட் !

சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் ராஜசேகர் என்ற விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை கைது செய்த போலீசார் 5 பேரை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளது.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற 33 வயதான ராஜசேகர் என்பவர் மீது சோழவரம், வியாசர்பாடி, எம்கேபி நகர், டேங்க் பேக்டரி, திருநின்றவூர் காவல் நிலையங்களில் மொத்தம் 23 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ராஜசேகர் மீதிருந்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய மணலியில் உள்ள கொடுங்கையூர் காவல்நிலைய போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடந்தி உள்ளனர்.

“நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் பூத்தில் விசாரணையில் இருந்த ராஜசேகரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த தனியார் மருத்துவனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றுள்ளனர். அவர் உயிரிழந்ததாக அறிவிக்கவே அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது” என டைம்ஸ் ஆப் இந்தியாவில் கூறப்பட்டுள்ளது.

ராஜசேகர் உயிரிழந்ததை கேள்விப்பட்டு அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகரை சட்டவிரோதமாக காவல்துறையிரால் தடுத்து வைக்கப்பட்டு, காவலில் சித்ரவதை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், அவருக்கு உடல்நலக் குறைபாடு இருந்ததால் அவர் நிலைகுலைந்து மயங்கி விழுந்ததாக போலீசார் கூறி இருக்கிறார்கள்.

Advertisement

Twitter link 

ராஜசேகர் மரணம் குறித்து எம்.பி தொல்.திருமாவளவன், ” சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் செங்குன்றம் இராஜசேகர் விசாரணை வதையால் உயிரிழக்கும் கொடூரம் நடந்தேறியுள்ளது. அவரது சாவுக்குக் காரணமான காவல் அதிகாரிகளை உடனே பணி இடைநீக்கம் செய்வதோடு அவர்கள்மீது கொலை வழக்குப்பதிவு செய்து தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த காவல்நிலையத்தை சேர்ந்த எஸ்எச்ஓ ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெய்சேகர், மணிவண்ணன் மற்றும் காவலர் சத்தியமூர்த்தி என 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராஜசேகர் மரணம் குறித்த விசாரணையை தொடங்கிய சென்னை போலீஸ் கமிஷனர், அதை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளார்.

இதற்கு முன்பாக, தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 25 வயதான விக்னேஷ் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button