கோவை 6 வயது சிறுமி வழக்கில் கைதானவன் இந்து அமைப்பா? கம்யூனிஸ்டா?

நெஞ்சை நொறுக்கும் சம்பவமாக மீண்டும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் அரேங்கேறியது. சிறுமியின் இறந்த உடல் சமூக வலைதளங்களில் முழுவதும் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
கோவையின் துடியலூர் பகுதியில் மார்ச் 25-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போய் அதற்கு அடுத்த நாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டன. சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. எனினும், இக்கொடூரத்தை செய்த குற்றவாளி யார் ? என்ற தகவல் காவல்துறைக்கு தெரியாமல் இருந்தது.
10 அல்லது 15 தனிப்படை அமைத்து, குற்றவாளி யார் எனத் துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை போஸ்டர் ஒட்டியும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் காவல்துறை சிரமத்தில் இருந்தது. இந்நிலையில் தான், 34 வயதான சந்தோஷ் குமார் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
குற்றவாளி யார் என தெரியும் வரை இக்கொடூரத்தை செய்தவர் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், கண்டுகொள்ளாமல் இருந்த சிலரும் குற்றவாளி சந்தோஷ் குமார் என தெரிய வந்த பிறகு அவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்ற கருத்து மோதல் சமூக வலைதளங்களில், இணையச் செய்திகளில் தலை தூக்கி உள்ளது.
குற்றவாளி சந்தோஷ் ” பாரத் சேனா ” என்ற அமைப்பை சேர்ந்தவர் என்றும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை(DYFI ) சேர்ந்தவர் என்றும் மாறி மாறி கூறி வருகின்றனர். இணையச் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் இரு அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டே கருத்து மோதல் உச்சத்தில் உள்ளது. ஒரு செய்தித்தாளில் கம்யூனிஸ்ட் என போலீஸ் கூறியதாகவும், மற்றொரு செய்தித்தாளில் ” பாரத் சேனா ” அமைப்பை சேர்ந்தவர் என போலீஸ் கூறியதாகவும் வெளியிட்டு வருகின்றனர்.
கம்யூனிஸ்டா ?
Tnnews24 உள்ளிட்ட போலி செய்திகளும் குற்றவாளி சந்தோஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றே குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக Save Syria போட்டோவை வைத்து உள்ளார், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார், சேகுவேரா தனது தலைவன் எனக் குறிப்பிட்டு உள்ளார் என்ற மிகப்பெரிய ஆதாரங்களை அளித்து உள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தால் அனைவரும் கம்யூனிஸ்ட் ஆகி விடுவார்களா என்ன ?
இது மட்டுமல்லாமல், கோவை துடியலூர் சிறுமி கொலை குற்றவாளி எனக் குறிப்பிடாமல் பொள்ளாச்சி சிறுமி கொலை குற்றவாளி கம்யூனிஸ்ட் என குறிப்பிட்டு உள்ளனர். அப்படி என்றால் அவர் ஈசா சிவன் சிலை படத்தை பகிர்ந்துள்ளார், கோவில் திருவிழா ஒன்றில் தேருக்கு முன்னே நெற்றியில் குங்குமத்துடன் சந்தோஷ் குமார் நிற்கும் படமும் கிடைத்து உள்ளது. அதற்கு என்ன கதை சொல்ல போகிறார்கள். ஒரு சிறுமிக்கு நடந்த கொடூரத்தில் எப்படி எல்லாம் தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை திணிக்கிறார்கள்.
குற்றவாளி சந்தோஷ் குமாரை DYFI அமைப்பை சேர்ந்தவர் என தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். சந்தோஷ் குமார் என்பவருக்கும் எங்கள் அமைப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை, அவர் எங்கள் அமைப்பின் உறுப்பினரும் அல்ல.
அவரின் ஊரான தொண்டாமுத்தூர், உலியாம் பாளையத்தில் எங்கள் DYFI அமைப்பிற்கு கிளையே இல்லை எனவும், தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர காவல்துறைக்கு DYFI அமைப்பு புகார் அளித்துள்ளது. DYFI தரப்பில் சந்தோஷ் குமார் தங்கள் அமைப்பின் உறுப்பினர் கூட இல்லை என தெளிவாக கூறிவிட்டனர்.
பாரத் சேனா அமைப்பா ?
சிலர் சந்தோஷ் குமாரை ” பாரத் சேனா ” உள்ளிட்ட சில இந்து அமைப்புகளின் பெயரைக் கூறி அதில் இருப்பதாக கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், Santhoshbharatsena என்ற பெயரில் முகநூலில் இருக்கும் வேறு ஒருவரின் முகநூல் பக்கத்தை காண்பித்து ” பாரத் சேனா ” அமைப்பை சேர்ந்தவர் என தவறாக பரப்பி வருகின்றனர். அப்படத்தில் இருப்பவர் குற்றவாளி சந்தோஷ் குமார் அல்ல. தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
சந்தோஷ் குமார் கம்யூனிஸ்ட் இல்லை என காவல்துறையிடம் புகார் அளித்த DYFI கோவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் குற்றவாளி சந்தோஷ் குமார் என Santhoshbharatsena முகநூல் பக்கத்தையே தவறாக பதிவிட்டு உள்ளார். அவர் பதிவிட்ட முகநூல் பக்கத்தில் இருப்பவருக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. குற்றவாளி சந்தோஷின் உண்மையான முகநூல் பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி சந்தோஷ் கம்யூனிஸ்ட் அல்லது பாரத் சேனா அமைப்பை சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வர இயலாது. சந்தோஷின் முகநூல் பக்கத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்ற தகவலையும் அளிக்கவில்லை. அவரின் நடவடிக்கை எந்த அமைப்புடன் தொடர்புடையதாகவும் இல்லை. களத் தகவலின்படியும் சந்தோஷ் இந்த அமைப்பை சேர்ந்தவர் தான் என உறுதியாக கூற முடியாது. இரு அமைப்பினரும் ஆதாரமின்றி மாறி மாறி குற்றம் மட்டுமே சுமத்திக் கொள்கின்றனர்.
சிறுமி கொலை சம்பவம் நிகழ்ந்ததில் இருந்து அங்குள்ள மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சிறுமிக்கு நடந்த பாலியல் வன்புணர்வு கொடூரத்தை பற்றி பேசாமல், அந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை அளிக்க முயற்சி செய்யுமாறு கூறாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எந்த அமைப்பை சேர்ந்தவன் என்கிற சண்டையை உருவாக்குவது எத்தகைய இழிவான செயலாகும். ஒரு குழந்தையை கொடூரமாக வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளி எம்மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் என்ன ? எந்த அமைப்பை சேர்ந்தவனாக இருந்தால் என்ன ? செய்த கொடூரத்திற்கு தகுந்த தண்டனை அளித்தே தீர வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றிய பேச்சுகளில் ஒன்று மதம் நுழைகிறது இல்லையெனில் அரசியல் கட்சி பெயர் நுழைந்து அதனை ஒன்று இல்லாமல் ஆக்கி விடுகின்றன.