This article is from May 24, 2021

பாஜக அரசின் பிரபுல் படேலுக்கு எதிராக எழும் குரல்கள்.. லட்சத்தீவில் என்ன நடக்கிறது ?

லட்சத்தீவின் நிர்வாகியான பிரபுல் ஹோடா படேலின் சர்வாதிகார ஆட்சி மற்றும் அவரது ஒருதலைப்பட்ச முடிவுகளுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருவதால் அவரை உடனடியாக அங்கிருந்து திரும்ப அழைக்குமாறு கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எலமாரம் கரீம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரபுல் படேல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாகியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் நியமிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கும் எதிராக குரல்கள் எழுந்து வருகிறது. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது பிரபுல் படேல் குஜராத்தின் மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்தவர்.

பிரபுல் படேல் எடுத்துவரும் நடவடிக்கைகள் ‘தன்னிச்சையான சட்டங்களாக’ அங்கு பார்க்கப்படுகிறது. லட்சத்தீவு மேம்பாட்டு ஆணையம் (எல்.டி.ஏ) உருவாக்குவதற்கான சமீபத்திய வரைவு ஒழுங்குமுறை அங்கு வாழும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீவுவாசிகளுக்குச் சொந்தமான சிறிய சொத்துக்களை அபகரிக்க முயல்கிறது என்றும் (அவர்களின் பெரும்பாலானோர் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 94.8% பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள்) ரியல் எஸ்டேட் நலனுக்காக இவ்வரைவு அமைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

“கட்டிடம், பொறியியல், சுரங்கம், குவாரி அல்லது பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது, மலையை வெட்டுவது, தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது” போன்ற அறிக்கைகள் அந்த வரைவில் வளர்ச்சி நடவடிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை எதிர்க்கும் தீவுவாசிகள் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமாக உள்ள இத்தீவுகள் சிறியதாகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டதாகவும் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மிக சொற்ப மக்கள் தொகை கொண்ட தீவில் தேசிய நெடுஞ்சாலைக்கான தேவை என்ன என்பதும் கேள்வியாக உள்ளது.

Twitter link 

கேரளா எம்.பி எலமாரம் கரீம், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் , “படேல் பதவி ஏற்ற உடன் கொரோனா நோய் தொற்றை கட்டுபடுத்துவதற்காக நடைமுறையில் இருந்த ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் நடைமுறையை (SOP) தன்னிச்சையாக மாற்றிவிட்டார். அங்கு வாழும் மக்களின் கூற்றுப்படி, இந்த திட்டமிடப்படாத மற்றும் விஞ்ஞானமற்ற SOP மாற்றம் தான் லட்சத்தீவில் கோவிட் வழக்குகளின் தற்போதைய எழுச்சிக்கு வழிவகுத்தது. அங்கு 2020ம் ஆண்டில் கோவிட் பாதிப்பு ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என கூறுகின்றனர். (லட்சத்தீவில் கோவிட்-19 வழக்குகளின் தற்போதைய எண்ணிக்கை – சுமார் 2000)

லட்சத்தீவில் நிர்வாகி படேல் வழங்கிய உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகளைப் பாருங்கள். அனைத்து உத்தரவுகளும் மக்களின் பாரம்பரிய வாழ்க்கை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை அழிப்பதற்கான ஒரு உள்நோக்கத்துடன் வழங்கப்படுவதைக் காணலாம். அனைத்து விதிமுறைகளும் மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாமல், அவர்களது உணவு மற்றும் வாழ்க்கை முறையை தேர்வு செய்யும் சுதந்திரத்தை தடை செய்வதாகவே அமைந்துள்ளது. விலங்குகளை பாதுகாத்தல் என்ற பெயரில் ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பசு வதை தடை, மாட்டிறைச்சி வாங்க மற்றும் விற்பனை தடை போன்றவை இந்த கட்டுப்பாடுகளில் அடங்கும்.

புதிய நிர்வாகியின் கீழ், லட்சத்தீவின் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான சாதாரண மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அரசு அலுவலகங்களிலிருந்து சாதாரண மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சுமார் 38 அங்கன்வாடிகள் மூடப்பட்டன. சுற்றுலாத்துறையிலிருந்து 190 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பள்ளி மதிய உணவு சமைப்பவர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர். விலங்கு நலத்துறை மற்றும் வேளாண்மைத் துறையிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். இவை அனைத்தும் இந்த தொற்றுநோய்களின் போது உள்ளூர் மக்களிடையே மிகுந்த கவலையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

கலாச்சார மற்றும் மத காரணங்களால், லட்சத்தீவில் மதுபானம் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு இருந்தது. ஆனால் தற்போதைய நிர்வாகி ஒருதலைப்பட்சமாக அந்தத் தடையை நீக்கிவிட்டார். இந்த முடிவு நல்லிணக்கத்தை அழிக்கவும், அங்கு வாழும் மக்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் நோக்கமாக உள்ளது.

தீவில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு வருமானத்திற்கான முக்கிய ஆதாரம் மீன்பிடித் தொழில். ஆனால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் பிற உபகரணங்களை வைத்திருந்த கொட்டகைகள் கடலோர காவல்படை சட்டத்தை மீறியதாக கூறி புதிய நிர்வாகத்தால் இடிக்கப்பட்டன. முந்தைய நிர்வாகத்தால் மீனவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட விலக்கின் அடிப்படையில் முன்னர் கட்டப்பட்ட தற்காலிக கட்டிடங்கள் இப்போது எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. சரக்கு போக்குவரத்துக்கு அங்குள்ள மக்கள் இனி பேப்பூர் துறைமுகத்தை பயன்படுத்தக்கூடாது . இதற்கு மாறாக அவர்கள் மங்களூர் துறைமுகத்தை சார்ந்து இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பல ஆண்டுகளாக தீவுடன் நெருக்கமாக தொடர்புடைய பேப்பூரையும் மோசமாக பாதிக்கும். கேரளாவுடனான லட்சத்தீவின் உறவைத் துண்டிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் எனும் பெயரில் புதிய நிர்வாகி லட்சத்தீவு மக்களின் பாரம்பரிய வாழ்க்கையை முற்றிலுமாக அழிக்க முயற்சிக்கிறார். தற்போதுள்ள பல சட்டங்கள் ஒருதலைப்பட்சமாக திருத்தப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த ஒருதலைப்பட்ச, ஜனநாயக விரோத, மக்கள் விரோத முடிவுகள் அனைத்தும் மக்களிடையே மிகப் பெரிய அமைதியின்மையை உருவாக்கியுள்ளன. இந்த நிர்வாகியும் அவரது கொள்கைகளும் தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று முழு லட்சத்தீவும் விரும்புகிறது.

இந்த சூழ்நிலையில், இப்படிப்பட்ட சர்வாதிகார நிர்வாகிகளை அலுவலகத்தில் தொடர அனுமதிக்கக்கூடாது என்றும், பிரபுல் படேலை உடனடியாக திரும்ப அழைத்து, அவரது ஆட்சியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் சீர்திருத்தங்களையும் உடனடியாக மதிப்பாய்வு செய்து திரும்பப் பெற விரையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என மாநிலங்களவை உறுப்பினர் எலமாரம் கரீம் , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் பதிவு :

“பல நூற்றாண்டுகள் பழமையான, அமைதியான குடியேற்றத்தின் வாழ்க்கை முறையை சீர்குலைப்பது முன்னேற்றத்திற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாக எவ்வாறு மாறுகிறது ? சாத்தியமான விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் மிகவும் நுட்பமான தீவு சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை அச்சுறுத்துவது எவ்வாறு நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ? நான் தொடர்பு கொண்டு பேசிய எந்த ஒரு தீவுவாசிகளும் அங்கு நடக்கின்ற செயல்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை ” என நடிகர் பிருத்விராஜ் பதிவிட்டு இருக்கிறார்.

மலையாள நடிகர் பிருத்விராஜ் உட்பட பலரும் அங்கு வாழும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக #savelakshadweep எனும் ஹஸ்டாக்கின் கீழ் பல்வேறு மக்கள் தங்களுக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Links :

widespread-resentment-in-lakshadweep-over-a-slew-of-bad-law-proposals

CPIM MP written letter 

Please complete the required fields.
Back to top button
loader