லட்சத்தீவில் உள்ளூர் பால் பண்ணைகள் மூடல்.. அமுல் நிறுவன கிளையை திறக்க அனுமதி !

லட்சத்தீவில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து பால் பண்ணைகளையும் மூட உத்தரவு பிறப்பித்து அவற்றை ஏலம் விட்டதை அங்கு வாழும் மக்கள் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமுல் நிறுவனத்திற்கு சந்தை ஏற்படுத்தி தர இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
காவரட்டி மற்றும் மினிகோய் தீவுகளில் உள்ள கால்நடை வளர்ப்புத் துறைக்கு சொந்தமான இரண்டு பால் பண்ணைகளை மூடுவதற்கான நிர்வாகத்தின் முடிவை லட்சத்தீவு மக்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மே 27-ல் லட்சதீவின் கால்நடை பராமரிப்புத் துறை அந்த இரண்டு பண்ணைகளில் 68 கால்நடைகளுக்கான ஏலத்தை நடத்தியது. ஆனால் அதை வாங்க எந்த மக்களும் முன்வராததால் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் லட்சத்தீவின் நிர்வாகியாக பதவி ஏற்ற பாஜக அரசியல்வாதி பிரபுல் கோடா படேல், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உடையவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை, அசைவ உணவுகளை பள்ளிகளில் வழங்க தடை, நூற்றுக்கணக்கான சாதாரண தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்தது என தொடர்ந்து அவர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பல்வேறு தலைவர்களால் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. பிறப்பிக்கப்படும் அனைத்து சட்டங்களும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளது, எங்கள் வாழ்வியலை சீர்குலைக்கிறது, உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும் என அங்கு வாழும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி பல சர்ச்சைக்குரிய முடிவுகளில் ஒன்று தான் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பால் பண்ணைகளை மூடுவது.
கிட்டத்தட்ட 95% முஸ்லிம் மக்கள் வாழும் லட்சத்தீவில், லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு ஒழுங்குமுறை எனும் வரைவு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மாடுகளை வெட்ட, மாட்டிறைச்சி விற்க, வாங்க, கொள்முதல் செய்ய என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தான் அங்கு வாழும் மக்கள் யாரும் ஏலத்தில் பங்கேற்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் லட்சத்தீவு கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் அமுல் நிறுவனத்தின் எர்ணாகுளம் கிளையின் மேலாளர் ஆகியோருக்கு யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் முதல் கடையை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பால் பண்ணைகளை மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமுலின் முதல் கிளை காவரட்டியில் உள்ள லட்சத்தீவு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (எல்.டி.சி.எல்) அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை இந்த இரண்டு பால் பண்ணைகளை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் காவரட்டி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆசிப் அலி தி டெலிகிராப்பிடம் அளித்த பேட்டியில், “ பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எங்கள் பால் பொருட்களை மில்மாவிடம் (கேரள கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) பெற்றுக்கொண்டு வந்தோம். பின்னர் எங்கள் கால்நடை வளர்ப்பு துறை இரண்டு பால் பண்ணைகளையும் தொடங்கியது. ஆனால் இப்போது படேல் குஜராத்தில் இருந்து வந்த காரணத்திற்காக, குஜராத் நிறுவனமான அமுலுக்கு இங்கு சந்தையை வழங்க அவற்றை மூட விரும்புகிறார். மக்கள் விரோத சீர்திருத்தங்கள் மற்றும் சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெறும் வரை மக்கள் இந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு அசைவையும் புறக்கணிப்பார்கள் ” என தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க : பாஜக அரசின் பிரபுல் படேலுக்கு எதிராக எழும் குரல்கள்.. லட்சத்தீவில் என்ன நடக்கிறது ?
லட்சத்தீவு மக்களின் இந்த தொடர் போராட்டங்களுக்கு முடிவு கட்ட இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளாவில் “மக்கள் விரோத” கொள்கைகள் தொடர்பாக லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேலை நீக்கக் கோரி ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Links :
proposed-anti-slaughter-law-lakshadweep-deter-residents-buying-cattle
lakshadweep-administrations-move-to-auction-cattle-heads-receives-setback
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.