This article is from Sep 11, 2019

நாட்டிலேயே அதிகபட்சமாக லாரி உரிமையாளருக்கு 1.41 லட்சம் அபராதம் விதிப்பு !

இந்திய நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019 ஆனது ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. புதிய வாகன திருத்தச் சட்டத்தால் நடைமுறையில் இருந்த அனைத்து விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கும் உண்டான அபாரதத் தொகை அதிகரிக்கப்பட்டது. இதனால், பல சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

செப்டம்பர் 5-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் லாரியில் அதிக எடை ஏற்றியதாகக் கூறி லாரி உரிமையாளர் பகவான் ராம் என்பவருக்கு 1,41,700 ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளார்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியதற்கு விதிக்கப்பட்ட உச்சப்பட்ச அபராதத் தொகை இதுவே.

லாரி உரிமையாளருக்கு 1,41 லட்சத்திற்கு அபராதம் விதித்து வழங்கிய ரசீது ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ரசீதில் குறிப்பிடப்பட்ட தொகையை லாரி உரிமையாளர் செலுத்தியுள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தும் கொண்டு வரப்பட்ட பிறகு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நாட்டிலேயே அதிகபட்ச தொகையை அபராதமாக செலுத்தியவராக லாரி உரிமையாளர் பகவான் ராம் உள்ளார்.

இதற்கு முன்பாக, ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ரூ86,500 அபராதம் விதித்து ரசீது வாங்கியதே அதிகபட்சமாக இருந்து வந்தது. அதில், லாரியை அனுமதிக்கப்படாத நபரை ஓட்ட அனுமதித்தது(ரூ,5000), ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது(ரூ.5000), அதிக சுமையை ஏற்றியது(ரூ.5000), வாகனத்தில் அதிக இடத்தை நிரப்பிக் கொண்டு செல்வது(ரூ.20,000), பொது அபராதம் (ரூ.500) என்ற அடிப்படையில் விதிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், ஓட்டுநர் தரப்பில் சில ஆவணங்களை சமர்ப்பித்த காரணத்தினால் மேற்க்கூறிய தொகையானது 70,000 ஆக செலுத்தப்பட்டது. மும்பையில் உள்ள பார்ந்த்ரா-வொர்லி பகுதியில் வேகமாக வந்த தனக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் குடிப்போதையில் வாகனத்தை இயக்கிய நபர்களுக்கு நீதிமன்றத்தில் 10,000 அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பான ரசீதுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நாட்டின் பொருளாதாரத்தை போக்குவரத்து அபராத தொகை மூலம் சரி செய்ய அரசு முயற்சி செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

எனினும், புதிய போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை குறைப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

Links :

Delhi cops issue Rs 1.41 lakh challan to Rajasthan truck owner for overloading vehicle

Rajasthan Truck Owner Fined Rs. 1.41 Lakh For Overloading Vehicle

Please complete the required fields.




Back to top button
loader