This article is from Feb 07, 2022

Factcheck: லதா மங்கேஷ்கர் உடலின் மீது ஷாருக்கான் எச்சிலைத் துப்பினாரா ?

புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் காலமானார். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் எனப் பலரும் மரியாதை செலுத்தினர். இதில், லதா மங்கேஷ்கர் உடலுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மரியாதை செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் பெற்றது.

இதற்கிடையில், நடிகர் ஷாருக்கான் மரியாதை செலுத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோவில், அவர் இஸ்லாம் வழக்கப்படி பிரார்த்தனை செய்த பிறகு இறுதியில் மாஸ்க்கை கழட்டி லதா மங்கேஷ்கர் உடல் மீது எச்சிலைத் துப்பியதாக சிறு வீடியோ பகுதி இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link  

ஹரியானா பாஜகவைச் சேர்ந்த அருண் யாதவ், உத்தரப் பிரதேச பாஜகவைச் சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் என இந்திய அளவில் பாஜக தலைவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ஷாரூக்கான் லதா மங்கேஷ்கர் உடலின் மீது எச்சிலைத் துப்பியதாக வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி ஷாரூக்கானுக்கு எதிராக வெளியான பதிவுகளுக்கு ட்விட்டரில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Twitter link 

ராஜஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரூபிகா லியாகுவாட், “அது எச்சில் துப்புவது அல்ல, ஃபாத்திஹா என அழைக்கப்படும் ” என பாஜக தலைவரின் பதிவைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் .

Twitter link 

முஸ்லீம் சடங்குகளின்படி, பிரார்த்தனை செய்த பிறகு ஒருவர் மீது காற்றை ஊதுவது மத வழக்கமாகும். அவர்களின் செயல் தீய ஆவியை விரட்டியும், அவர்களை ஆசீர்வதிப்பதாகவும் நம்புகிறார்கள்.

ஷாரூக்கான் லதா மங்கேஷ்கர் உடலின் மீது எச்சிலைத் துப்பவில்லை, பிரார்த்தனை செய்த பிறகு காற்றை தான் ஊதி இருக்கிறார் என ஷாரூக்கானுக்கு ஆதரவாக பலரும் ட்விட்டரில் பதில் அளித்து வருகிறார்கள்.

2010-ம் ஆண்டில் ஷாரூக்கான், கஜோல் நடிப்பில் வெளியான ” மை நேம் இஸ் கான் ” திரைப்படத்தின் பாடல் ஒன்றில் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனை செய்து மகனை ஆசிர்வதிப்பதாக காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். அப்போது ஷாரூக்கான் தன் பிரார்த்தனையை முடித்த பிறகு தன் மனைவி மற்றும் மகன் மீது காற்றை ஊதும் காட்சி இடம்பெற்று  இருப்பதை பார்க்கலாம்.

Please complete the required fields.




Back to top button
loader