Factcheck: பாலிடெக்னிக் மாணவர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி கூறியதென்ன ?

தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ” பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம் ” என அறிவித்ததாக சன் நியூஸ் சேனலில் வெளியான நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter link  

ஏனெனில், பாலிடெக்னிக் முடிந்த மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் நேரடியாக 2-ம் ஆண்டு(lateral entry) சேர்ந்து படிக்கும் நடைமுறை ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்து வரும் போது, அதை புதிது போல அமைச்சர் அறிவித்து இருப்பதாக விமர்சனங்கள் உடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அமைச்சர் பொன்முடி கூறியதென்ன ? 

ஏப்ரல் 11-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் பொன்முடி, ” சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகளில் பாலிடெக்னிக் கல்வி முடித்த மாணாக்கர்களுக்கு, அதாவது பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடையாது என்று சொல்லிடாங்க. இந்த ஆண்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் முடித்த மாணாக்கர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்வதற்கு முதலமைச்சர் ஆணையிட்டு இருக்கிறார். அதுவும் இந்த ஆண்டில் இருந்து தொடரும் ” எனப் பேசியுள்ளார்.

 

அதாவது, பாலிடெக்னிக் முடித்த மாணாக்கர்கள் நேரடியாக பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறுகிறார்கள். இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக சிஇஜி கிண்டி, எம்ஐடி குரோம்பேட்டை மற்றும் ஏசிடெக் கிண்டி ஆகிய கல்லூரிகளிலும் பொறியியல் படிப்பில் நேரடியாக இரண்டாமாண்டு மாணாக்கர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும் என்பதே அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் பாலிடெக்னிக் முடித்த மாணாக்கர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம் என்பதே முழுமையான மற்றும் தெளிவான செய்தி.

Please complete the required fields.




Back to top button