ஒப்பந்தப்பணம் செலுத்தாத SRM ஹோட்டல்! அரசியல் காரணமெனத் திசைதிருப்பும் அண்ணாமலை!

திருச்சி SRM ஹோட்டல் குத்தகை தொடர்பான தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என அண்ணாமலை முதற்கொண்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். 30 ஆண்டுக்காலக் குத்தகைக் காலம் முடிவடைந்த நிலையில் இன்னும் குத்தகைக்கான முழுத் தொகையைக் கூட SRM நிறுவனம் வழங்கவில்லை.

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இது 1994ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் ஹோட்டல் நிறுவனத்திற்கு 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதற்கான குத்தகைக் காலம் கடந்த 13ம் தேதி முடிவடைந்துவிட்டது. 

இந்நிலையில் ஹோட்டலை கையகப்படுத்துவதற்காக மறுநாள் (14ம் தேதி) காலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக திருச்சி மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் சுற்றுலா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஹோட்டலுக்கு வந்தனர். 

அப்போது SRM குழும இயக்குநர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் சேனாபிரசாத் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “எந்தவிதமான நோட்டீஸும் அளிக்காமல் உடனடியாகக் காலி செய்யச் சொல்வது சட்டப்படி தவறு” என்று கூறியுள்ளனர்.

அண்ணாமலை கருத்து:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. அக்கட்சியின் தலைவரும் SRM குழுமத்தின் நிறுவனருமான பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அத்தொகுதியில் திமுக சார்பாக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில் கே.என்.நேருவின் மகனை எதிர்த்துப் போட்டியிட்டதின் காரணமாகவே பாரிவேந்தர் பழிவாங்கப்படுகிறார் என பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதேமாதிரியான கருத்துகளை பாஜகவுடன் கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் தெரிவித்துள்ளனர். 

சுற்றுலா வளர்ச்சித் துறை அறிக்கை:

SRM ஹோட்டல் உள்ள நிலத்தின் குத்தகை தொடர்பாகத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 

குத்தகை வழங்கப்பட்ட அரசாணையின்படி, நிலத்திற்குச் சந்தை விலையின் அடிப்படையில் 7 சதவீதம் வருடாந்திரக் குத்தகைத் தொகை திருச்சி மாவட்ட ஆட்சியரால் கணக்கிடப்பட்டது. அதன்படி 30 ஆண்டு காலத்திற்கு ரூ.47.93 கோடி குத்தகைத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.9.08 கோடி மட்டுமே இந்நாள்வரை SRM நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளது. மீதித்தொகை செலுத்தப்படவில்லை.

மேலும் ஒப்பந்தத்தில் 30 ஆண்டுக்கான கால அளவு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எக்காரணத்தைக் கொண்டும் குத்தகைக் காலத்தை மேலும் நீட்டிக்க ஒப்பந்தக்காரர் கோரக்கூடாது என்றும் அரசிடம் நிலம் மற்றும் கட்டிடம் ஒப்படைக்கும்போது எவ்வித நிபந்தனையோ சேதாரமோ இருக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக அரசுத் தரப்பில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களைக் காலி செய்யச்சொல்வதாக SRM ஹோட்டல் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கும் அரசு தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. 

கடந்த மே 2ம் தேதி, நிலுவைத் தொகையைச் செலுத்தக் குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டதுடன், ஜூன் 13ம் தேதியுடன் குத்தகைக் காலம் முடிவடைகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டதாக அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது. 

இதற்கிடையில் ஹோட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் SRM சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஹோட்டல் தொடர்பாக TTDC மற்றும் ஹோட்டல் நிர்வாகம் இடையே ஒப்பந்தத்தில் அரசு உத்தரவிட்டால் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு சார்பில், இனிமேல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் எந்த உத்தரவு நகலும் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஹோட்டல் நிர்வாகத்துக்கு 4 நாட்களுக்கு (ஜூன், 18 மாலை 4 மணி) இடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி ஹோட்டலை கையகப்படுத்த 4 நாட்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடைக் காலம் நீட்டிக்கப்படாவிட்டால் தானாகவே ரத்தாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

குத்தகை எடுக்கப்பட்ட பொருள் உரிய காலம் முடிந்ததும் அதன் உரிமையாளரிடம் எந்தச் சேதாரமும் இன்றி ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்கான தொகையும் ஒப்பந்தத்தின்படி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் SRM ஹோட்டல் ஒப்பந்தத் தொகையைச் செலுத்தாமலேயே இத்தனை ஆண்டுகள் ஹோட்டல் நடத்தி வந்துள்ளது. ஒப்பந்தமும் முடிவடைந்ததால் இடத்தையும் கட்டிடத்தையும் மீட்க அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இந்த நடவடிக்கையை அரசியல் காரணமென அண்ணாமலை திசைதிருப்ப முயல்கிறார்.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader